- மா. உஷாநந்தினி
ஒரே ஒரு க்ளிக்... “அந்த ஒரு” க்ளிக்கிற்குப் (Click) பின்னால் ஒருவரது உண்மைமுகம் மறைந்திருக்கிறது; சிலவேளை, அது மிகவும் ஆபத்தானது; ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதை பலர் அறிவதில்லை. ஒருவரது எண்ணத்தையும் மன இயல்பையும் அறிவதற்கு, அந்த ஒருவரின் சமூக ஊடகப் பக்கத்தில் உள்ள ஒரு “பதிவு” (post), ஒரு “பகிர்வு” (share) போதும்...!
இணையவெளியில் - சமூக ஊடகங்களில் போலி முகங்கள் நிழலாடுவதாகச் சொல்கிறார்கள். உண்மை! அதேபோன்று, சிலரது முகமூடிகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் நிஜ முகங்களது வக்கிரங்கள் அதிகமாக வெளிப்படுகிறதென்றால், அதற்கும் நிகழ்நிலைத் தளங்களே களம் அமைத்துக் கொடுக்கின்றன.
இணையவெளியில் - சமூக ஊடக தளங்களில் பதிவேற்றப்படுகிற பதிவுகளுக்கும், பகிரப்படுகின்ற தகவல்களுக்கும் பின்னால் பொதுநல நோக்கங்கள் இருப்பதை விட, இன்னொருவரைப் பற்றி அவதூறு பரப்புவது, அவரை இழிவுபடுத்துவது போன்ற கீழான நோக்கங்கள் இருப்பதே அதிகம்.
ஒருவர், இன்னொருவர் மீது கொண்ட கோபத்தையும் வன்மத்தையும் இணையத்தின் ஊடாக வெளிக்காட்டத் துணிந்துவிட்டால், அந்த நபர், இணையக் குற்றத்துக்கு துணைபோகிறவராகவோ அல்லது அவரே ஒரு நேரடியான இணையக் குற்றவாளியாகவோ உருவெடுக்கக்கூடும். இவ்விதமானவர்கள் தங்கள் மறைமுகத் தாக்குதலுக்கு பகடைக்காயாக அதிகம் பயன்படுத்துவது, பெண்களையும் சிறுவர்களையுமே!
தவிர, தற்காலத்தில் இடம்பெறக்கூடிய இணையக் குற்றங்களுக்குப் பின்னால் செயற்கை நுண்ணறிவும் (Artificial intelligence - AI) ஒரு கருவியாக இயக்கப்படுகிறது. கருவியாக மட்டுமன்றி, உயிர்ப்பலி எடுக்கும் ஆயுதமாகவும் பல சந்தர்ப்பங்களில் செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் கட்டுக்கடங்காமல் பிரயோகிக்கப்பட்டு வருவதும் கவலைக்குரிய விடயமே.
நிகழ்நிலையில், சமூக ஊடகங்களின் ஊடாக பேராபத்தை விளைவிக்கக்கூடிய குற்றங்களைத் தடுப்பதற்காகவும் தீங்கு விளைவிக்கும் உள்ளீடுகளை கட்டுப்படுத்தவும் தனி நபர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கவும், இணைய துஷ்பிரயோகங்களிலிருந்து ஒவ்வொருவரையும் குறிப்பாக பெண்கள், சிறுவர்களைப் பாதுகாப்பதற்காகவும் இலங்கையில் அமுல்படுத்தப்பட்டு, தற்போது நடைமுறையில் உள்ள நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் (Online Safety Act) இணையக் குற்றங்களுக்கு எதிரான, பரந்துபட்டதொரு சட்டமாக கருதப்படுகிறது.
மனித உரிமைகளை மீறுகிற நிலைப்பாட்டில் இச்சட்டம் காணப்படுவதாக விமர்சிக்கப்படுகிறபோதும், வேறு சில காரணங்களை முன்வைத்து இச்சட்டம் தொடர்பான பல்வேறு மாற்றுக்கருத்துக்கள் எழுகிறபோதும், இந்நிகழ்நிலைச் சட்டத்தில் குறிப்பிடப்படும் தனிநபர் மற்றும் சமூகப் பாதுகாப்புக் கருதிய விடயங்களைப் புறந்தள்ளிவிட முடியாது எனக் கூறுபவர்களும் உள்ளனர்.
நிகழ்நிலையில் நம் ஒவ்வொருவரையும், நமது தனிப்பட்ட தகவல்களையும் பாதுகாத்துக்கொள்ள, ஒரு சட்டம் தேவை என்றளவில், நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் ஒருதரப்பினரால் வரவேற்கப்படுகிறது.
பல்வேறு திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டு வரும் இச்சட்டத்தில் தற்போது வகுக்கப்பட்டுள்ள சட்டப்பிரிவுகள், தண்டனைகளை ஆராய்கையில், இந்த சட்டமானது குற்றமாகக் கருதப்படும் பலவற்றில் மிகப் பாரதூரமானது, பொய்யான கூற்றுக்களும் போலியான தரவுகளைப் பகிர்தலுமே எனலாம்.
அதன்படி, இணைய மோசடி, தகவல் திருட்டு, வேண்டுமென்றே ஒருவரின் தனிப்பட்ட அடையாளத்தை சமூக ஊடகத்தில் வெளிப்படுத்துவது, ஒருவரது அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்களை உரிய நபரின் அனுமதியின்றி சமூக ஊடகங்களில் பதிவிடுவது மற்றும் அவற்றைப் பகிர்வது போன்றவற்றை நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் சுட்டிக்காட்டுகிறது.
ஒருவரது தனிப்பட்ட தகவல்களை இணையவெளியில் பதிவிட்டு, ஒருவரின் மன உணர்வுகளைச் சீண்டி, தனிநபருக்கு பாரதூரமான தீங்குகளை விளைவிப்பது உள்ளிட்ட சில குற்றச் செயற்பாடுகள் குறித்த விடயங்களை எம்முடன் பகிர்ந்துகொண்ட சட்டத்தரணி அன்புவதனி கிறேஷியன், நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தில் குறிப்பிடப்படும் சில சட்டப்பிரிவுகளையும் எடுத்துக்காட்டினார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

“இலங்கையில் இணையக் குற்றங்களுக்கு எதிராக கணினி குற்றங்கள் சட்டம் (Computer Crimes Act), நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் (Online Safety Act), சுயவிபர பாதுகாப்புச் சட்டம் (Personal data protection Act) போன்ற சட்டங்கள் தற்போது நடைமுறையில் உள்ளன.
பொதுவாக இணையவழியில் இடம்பெறும் குற்றங்களை ஆராய்ந்தால், பெண்கள் ஆண்களால் அச்சுறுத்தப்படுவது மட்டுமன்றி, ஆண்களும் பெண்களால் அச்சுறுத்தப்படுகிறார்கள் என்பதே உண்மை.
ஒருவரது தனிப்பட்ட விடயங்களை இன்னொருவர் பொதுவெளியில் பகிர்வது என்ற கீழ்மட்ட குற்றச்செயற்பாடுகள் இரு பாலாராலும் நிகழ்த்தப்பட வாய்ப்புகள் உள்ளன. அதேவேளை, இக்குற்றங்கள் சிறுவர்களுக்கு எதிராகவும் இடம்பெறுகின்றன. ஆகவே, குற்றமிழைத்தவரை ஆண், பெண் என்று பாலின அடிப்படையில் சுட்டிக்காட்டாமல், பொதுவாக “நபர்” என்றே நோக்குவோம்.
சட்டப் பிரிவுகளும் தண்டனைகளும்
நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் - சட்டத்தின் பிரிவு 20
இணையத்தின் ஊடாக இடம்பெறக்கூடிய குற்றங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட மிக முக்கியமான சட்டமாக, நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் (Online Safety Act) விளங்குகிறது.
இந்நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் அல்லது இணையப் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 20, ஒருவரின் தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவதையோ அதனூடாக நபர் ஒருவருக்கு அவதூறு ஏற்படுத்துவதையோ குற்றம் என்று வரையறை செய்கிறது.
இலங்கையில் அல்லது இலங்கைக்கு அப்பால் உள்ள எந்தவொரு நபராயினும், அவர், தன்னால் இலக்குவைக்கப்பட்ட நபரின் (Target Person) தனிப்பட்ட தகவல்கள், அந்தரங்க புகைப்படங்கள் (photo), காணொளிகள் (வீடியோ - video), ஒலி பதிவுகள் (ஓடியோ - Audio), முகவரி, தொலைபேசி இலக்கம்... போன்றவற்றை வேண்டுமென்றே சமூக ஊடகத்தில் வெளியிடுவதும் அதன் மூலம் இலக்குவைக்கப்பட்ட நபரை அச்சுறுத்துவதும் துன்புறுத்துவதும் குற்றம் என நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 20 குறிப்பிடுகிறது.
விளங்கக் கூறுவதாயின், ஒருவர், தன்னால் இலக்குவைக்கப்பட்ட நபரைத் துன்புறுத்தும் நோக்கில், அவரை அச்சுறுத்தி, அவமானப்படுத்தி இழிவுபடுத்தவேண்டும் என்ற தவறான எண்ணத்தில், அந்த நபரை அடையாளப்படுத்தக்கூடிய தகவலை அல்லது காட்சியை அல்லது ஒலி வடிவப் பதிவினை வேண்டுமென்றே பிறர் பார்க்கத்தக்க விதமாக வெளியிடுகிறார் என்றால், அது தண்டனைக்குரிய குற்றமாகும்.
இவ்வாறான ஒரு பதிவை சமூக ஊடகத்தில் வெளியிடுபவர், அவரது தகாத செயலின் விளைவால் இலக்குவைக்கப்பட்ட நபரை (Target Person) அல்லது அவர் சார்ந்தவர்களை தொல்லை செய்கிறார் என்றால், அதுவும் குற்றமென இச்சட்டப்பிரிவு சுட்டிக்காட்டுகிறது.
தொல்லை என்கிறபோது ஒருவர், தன்னால் இலக்குவைக்கப்பட்ட நபரின் தனிப்பட்ட விடயங்களை பகிர்ந்து, அந்த நபரை பயமுறுத்துவது, அச்சுறுத்துவது, அந்த நபரின் கன்னியத்தை கீழ்ப்படுத்துவது, இழிவுபடுத்துவது, பகிரப்படும் ஒரு பதிவை பலர் அறியச் செய்வது, அந்தப் பதிவை பலர் பகிர்வதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுப்பது, அதனூடாக அந்த இலக்குவைக்கப்பட்ட நபரை அவமானப்படுத்துவது, அந்த நபருக்கு அவதூறையும் அவமானத்தையும் ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவது.... இவை யாவும் குற்றச் செயல்களாகும்.
'சட்டப்பிரிவு 20’ எடுத்துக்காட்டும் உதாரணங்கள்
இந்த குற்றத்தை விபரிப்பதற்கு, நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 20இல் இரண்டு உதாரணங்கள் எடுத்துக்காட்டப்படுகின்றன.
உதாரணம் 1
X , Y ஆகிய இருவரும் உறவுத் தொடர்பிலிருந்து ஒரு கட்டத்தில் பிரிந்துவிடுகிறார்கள். அதன் பின்னர், X தனது சமூக ஊடகத்தில், Yஐ அடையாளப்படுத்தக்கூடிய, அவரை வேறு நபர்கள் தொடர்புகொள்ளக்கூடிய Yஇன் சுய தகவல்களை (personal datas) (உதாரணமாக, முகவரி, தொலைப்பேசி இலக்கம், புகைப்படங்கள், வீடியோக்கள்.... முதலியவற்றை) பதிவிடுகிறார். இவ்வாறு பதிவிடுவதன் மூலம் Yக்கு வேறு அந்நிய நபர்கள், பாலியல் ரீதியான தொல்லையை ஏற்படுத்தக்கூடிய சூழலை X உருவாக்குகிறார்.
தனது தகவல்கள் பொதுவெளியில் பகிரப்பட்டிருப்பதை Y அறிந்திராத நிலையில், பகிரப்பட்ட தகவல்களைக் கொண்டு, அறிமுகமற்ற, முகமறியாத வெவ்வேறு நபர்களிடமிருந்து Yயின் கைப்பேசிக்கு குறுஞ்செய்திகள், தொலைப்பேசி அழைப்புகள் வருகின்றன. Yக்கு எவ்விதத்திலும் தொடர்பில்லாத நபர்களிடமிருந்து அறுவருக்கத்தக்க புகைப்படங்கள், வீடியோக்கள் Yக்கு அனுப்பப்படுகின்றன. இதன் காரணமாக Y துன்புறுத்தலுக்கு உள்ளாகிறார் எனில் X குற்றவாளி. Y பற்றிய பதிவை X வெளியிட்டதன் ஊடாக அல்லது பகிர்ந்ததன் ஊடாக அவர் குற்றத்துக்குரியவராகிறார்.
உதாரணம் 2
X, Y இருவரும் நெருங்கிய உறவிலிருந்தனர். பின், அவர்கள் தொடர்பை துண்டித்துக்கொண்டனர். அதன் பிறகு, Yயின் ஒரு அந்தரங்க புகைப்படத்தை X பகிர்ந்தால், X குற்றவாளி ஆவார்.
இந்தப் பிரிவின் மூலம் உள்வாங்கப்படும் குற்றங்கள் எவையெனில், அபாயகரமான மின்னனு படங்களை பகிர்தல், பாலியல் ரீதியான துன்புறுத்தல், தவறான தகவல்களை பரப்புதல், மிரட்டுவது அல்லது அச்சுறுத்தவது, தற்கொலைக்குத் தூண்டுவது, சூழ்நிலையை உருவாக்கி ஒருவரை அவமானப்படுத்துவது... இவை அனைத்துமே குற்றங்கள் என நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 20 குறிப்பிடுகின்றது.
ஆண், பெண் இருவரும் நெருக்கமாக இருப்பதைப் போன்ற புகைப்படங்களை அனுமதியின்றி பகிர்வது, deep fake என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புகைப்படங்களை பகிர்வது... போன்ற குற்றங்கள் இன்றைய காலத்தில் சாதாரணமாக நிகழ்த்தப்படுபவை. அனேகமாக சம்பந்தப்பட்ட நபருக்கே தெரியாமல் கூட இதுபோன்ற குற்றங்கள் இடம்பெறக்கூடிய சந்தர்ப்பங்களும் இருக்கின்றன.
குற்றத்துக்கான தண்டனை
நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 20இன் அடிப்படையில், மேற்படி குற்றங்களைச் செய்த குற்றவாளி எவராயினும், அவருக்கு 5 ஆண்டுகளுக்கு மேற்படாத சிறைத்தண்டனையும் 5 இலட்சம் ரூபாவுக்கு மேற்படாத தண்டப்பணமும் விதிக்கப்படலாம்.
நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம், பிரிவு 21
நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம், பிரிவு 21, சிறுவர் துஷ்பிரயோகத்தை பற்றி எடுத்துரைக்கிறது.
முன்னதாக தண்டனைச் சட்டக்கோவையின் 286அ, 288, 288அ, 288ஆ, 308அ, 360அ, 360ஆ, 360இ, 363, 364அ, 365, 365அ மற்றும் 365ஆ ஆகிய பிரிவுகளில் விபரிக்கப்பட்டுள்ள குற்றங்கள், தண்டனைகள் பற்றிய விடயங்களே நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 21இலும் குறிப்பிடப்படுகின்றன.
அதன் அடிப்படையில், இலங்கையிலோ இலங்கைக்கு வெளியிலோ ஒன்லைன் கணக்கின் ஊடாக அல்லது ஒன்லைன் இருப்பின் மூலமாக ஒரு குழந்தையை - சிறுவரை துஷ்பிரயோகம் செய்தால் அல்லது அந்தத் துஷ்பிரயோகத்துக்கு உதவினால் அல்லது அதற்குத் தூண்டினால் அவர் குற்றவாளியாக கருதப்படுவார்.
தண்டனை - இவ்வகையில் குற்றமிழைத்தவருக்கு மேற்குறிப்பிட்ட தண்டனை சட்டக்கோவையின் அடிப்படையில் தண்டனை வழங்கப்படும்.
நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம், பிரிவு 22
நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம், பிரிவு 22இல் குறிப்பிடப்பட்டுள்ளதன் அடிப்படையில், நபரொருவரை தவறான நோக்கத்தோடு தொடர்புகொள்ளும் விதமாக, ஒரு Web Botஐ உருவாக்கியோ அல்லது அந்த Botஐ மாற்றியமைத்தோ செயற்படுபவர் எவராயினும், அவர் குற்றவாளி ஆவார்.
Web Bot என்றால் இணைய ரோபோட். இது, இணையத் தேடுபொருள்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. இணையத் தரவு தொடர்பில் பிரயோகிக்கப்படும் ஒரு சொல்தான் Web Bot. இணையத்தில் தானாகவே மனிதர்களைப் போல சில வேலைகளைச் செய்வதற்காக இந்த Web Bot வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த Web Botஐ உருவாக்கி அல்லது அதில் மாற்றங்களைச் செய்து, ஒருவரை தவறான எண்ணத்தில் தொடர்புகொள்ளும் செயற்பாடுகளில் ஈடுபடுவது குற்றம் என இச்சட்டப்பிரிவு குறிப்பிடுகிறது.
நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், தனி நபர்களை பாதிக்கக்கூடிய, பாலியல் ரீதியாக ஒருவரை அவமதிக்கக்கூடிய விதமான செயற்பாடுகள் அனைத்துமே குற்றச் செயல்கள் என இச்சட்டப்பிரிவு குறிப்பிடுகிறது.
குற்றத்துக்கான தண்டனை
இக்குற்றச்செயலில் ஈடுபடும் எவராயினும், அவருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேற்படாத சிறைத்தண்டனை அல்லது ஐந்து இலட்சம் ரூபாய்க்கு மேற்படாத தண்டப்பணம் அல்லது சிறைத்தண்டனையும் தண்டப்பணமும் இரண்டையும் அனுபவிக்க நேரிடலாம் என சட்டப்பிரிவு 22இல் குறிப்பிடப்படுகிறது.
கணினி குற்றங்கள் சட்டமும்
நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டமும்
ஆரம்பத்தில் இணையவழிக் குற்றங்களுக்கு எதிராக “கணினி குற்றங்கள் சட்டம்” (Computer Crimes Act) 2007ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அக்காலகட்டத்தில் கணினியிலேயே தரவுகள், புகைப்படங்கள், ஆவணங்கள், வீடியோக்கள் சேமித்து வைக்கப்பட்டன.
கணினிப் பொறியூடாகவே அந்நாட்களில் காணப்பட்ட வலைத்தளங்களை அணுகக்கூடிய நிலை இருந்தது. அத்தகைய சூழ்நிலையில் அந்தரங்க தகவல்களை பிழையாக பயன்படுத்துவது, தகாத முறையில் தகவல்களை திருடி வெளியிடுவது, அவதூறு பரப்புவது, துஷ்பிரயோகம் செய்வது, வர்த்தகத்துக்காக பயன்படுத்துவது போன்ற குற்றங்கள் இடம்பெற்றன. அக்குற்றங்களுக்கு எதிராகவே அப்போது கணினி குற்றங்கள் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
எனினும், அச்சட்டமானது, நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டதன் காரணமாக காலாவதியாகிவிடவோ ரத்து செய்யப்பட்டுவிடவோ இல்லை. கணினி குற்றச் சட்டம் இன்றும் அமுலில் இருக்கிறது. முன்பு கணினி மூலமாக இடம்பெற்ற குற்றங்கள் இக்காலத்தில் ஒட்டுமொத்த மின்னனு சாதனங்களினூடாகவும் நிகழ்த்தப்படுகின்றன. குறிப்பாக, கைப்பேசிகளுக்குள் நாம் ஒரு உலகத்தையே வைத்திருக்கிறோம்.
கைப்பேசிக்குள் இருக்கும் செயலிகள் மூலம் ஷொப்பிங், கட்டணங்களை செலுத்துவது, தியேட்டருக்கே போகாமல் திரைப்படங்களை பார்ப்பது... என அனைத்து வேலைகளையும் செய்கிறோம். சர்வதேச தொடர்புகளையும் கைப்பேசி ஊடாகவே அதிகமாக பேணுமளவுக்கு உலகமயப்படுத்தப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
ஆகவே, ஒட்டுமொத்த மின்னணு சாதனங்கள் ஊடாக நடத்தப்படும் குற்றங்கள் அனைத்தையும் உள்வாங்கி, அக்குற்றங்களுக்கு எதிராக நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் கையாளப்படுகிறது.
கருத்துச் சுதந்திரம்?
நிகழ்நிலை பாதுகாப்புச் சட்ட அமைப்பின் அடிப்படையான சட்ட ஏற்பாடுகளை ஆராய்ந்து சிந்திக்கும் ஒரு தரப்பினரிடையே, இச்சட்டத்தின் ஊடாக கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் பறிக்கப்பட்டதாக ஒரு மாற்றுக்கருத்து உலாவுகிறது. இக்கருத்து, எந்தளவுக்கு உண்மையெனில், ஒரு நபர் உண்மையிலேயே குற்றச்செயல் ஒன்றில் ஈடுபட்டிருக்கும் பட்சத்தில், அது தொடர்பான விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்தும் நோக்கிலும், மேலும் குற்றங்கள் இடம்பெறாமல் தடுக்கும் விதமாகவும், தவறு செய்த நபர் சட்டப்பிடிக்குள் சிக்காமல், தப்பித்து வருகின்ற பட்சத்தில், குற்றம் இழைத்த நபரை கண்டறிந்து, அவரை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும் என்ற காரணத்துக்காகவும் தகவல்கள் பரப்பப்படுவது, அந்தத் தகவல்கள் உண்மை என்ற பட்சத்தில் குற்றமாக கருதப்படுவதில்லை.
ஆனால், வேண்டுமென்றே ஒருவரை துன்புறுத்தும் நோக்கிலும், அவதூறு பரப்பி, அவமானப்படுத்தும் எண்ணத்திலும் ஒருவர் செயற்படுவாராயின், அது குற்றமாக பார்க்கப்படும். இந்தக் குற்றங்களுக்கு உதவுவதும் குற்றமிழைக்க முயற்சிப்பதும் கூட குற்றமென்றே இச்சட்டம் எச்சரிக்கிறது" என சட்டத்தரணி அன்புவதனி கூறுகிறார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM