- மா. உஷாநந்தினி
“செயற்கை நுண்ணறிவில் (AI) குற்றச் செயல்கள் இடம்பெற எந்தளவுக்கு வாய்ப்புக்கள் இருக்கின்றனவோ, அந்தளவுக்கு ஒருவர், “இது நான் இல்லை” என்று கடந்து செல்லவும், தான் செய்த குற்றத்திலிருந்து தப்பித்துக்கொள்வதற்குமான வழிகளும் வாய்ப்புகளும் கூட இருக்கின்றன. குற்றங்களை கண்டறிவதற்கும் காவல்துறையினால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஆக, செயற்கை நுண்ணறிவு என்பது இரண்டு பக்கங்களும் கூர்மையுள்ள ஒரு வாளைப் போன்றதே. இவற்றினூடாக இடம்பெறும் குற்றங்களுக்கும் நாமே வாய்ப்பளிக்கிறோம் என்பதுடன் நம்மை நாமே வியாபாரப் பண்டமாக மாற்றிக்கொண்டோம் என்றே சொல்லவேண்டும்” என சட்டத்தரணி அன்புவதனி கிறேஷியன் தெரிவிக்கிறார்.
மனிதர்களின் அன்றாட செயற்பாடுகளில் அங்கமாகிவிட்ட செயற்கை நுண்ணறிவில் சில நன்மைகள் இருப்பினும், இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு குற்றங்கள் இடம்பெறுவதையும் காணமுடிகிறது. பாலியல் சீண்டல்கள், தனி ஒருவரையோ அல்லது ஒரு குழுவினரையோ இலக்குவைத்து அச்சுறுத்துவது, பழிவாங்குவது, களங்கம் விளைவிப்பது, சமூக ஊடகப் பொதுவெளியில் அவதூறு பரப்புவது, ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபடுவது என நாளுக்கு நாள் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
இதுபோன்ற குற்றங்களை தடுக்கவும் குற்றம் இழைப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கான நீதியைப் பெறவும் சட்டத்தை எவ்விதமாக நாடவேண்டும் என்பது தொடர்பான பல சட்ட ஆலோசனைகளை எம்மிடம் பகிர்ந்துகொண்டார் சட்டத்தரணி அன்புவதனி.
செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தால் அதிகரித்து வரும் இணையக் குற்றங்கள், அவற்றில் அறிந்தும் அறியாமலும் சிக்கித் தவிக்கும் இளம் சமூகத்தினர் தொடர்பாக சட்டத்தரணியின் பார்வையில் கேட்டறிந்த சந்தர்ப்பத்தில், அன்புவதனி கிறேஷியன் பகிர்ந்துகொண்டதாவது :

“இன்றைய நாட்களில் நாம் அதிகமாக கணினி மற்றும் கையடக்கத் தொலைபேசிகளையும் இணையத்தையும் பயன்படுத்தி வருகிறோம். இன்று நம் ஒவ்வொருவரதும் அடையாளமாக அல்லது முகவரியாக சமூக வலைத்தளங்கள் காணப்படுகின்றன. சமூகமும் அவ்வாறே மாறிவிட்டது. இன்று பெரும்பாலானவர்கள் இந்த சமூக வலைத்தளங்கள் ஊடாக தம்மை சந்தைப்படுத்திக்கொள்ளவே விரும்புகின்றார்கள்.
இன்றைய காலகட்டத்தில் நம் ஒவ்வொருவரினதும் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஏனைய தனிப்பட்ட தகவல்கள், மற்றையவர்களுக்கு இலகுவாக கிடைக்கக்கூடிய விதமாக சமூக ஊடகம் என்ற பொதுவெளியில் காணப்படுகின்றன. ஒருவர் எதைத் தேடிப் பெற்றுக்கொள்வதற்கும் தடை என்பதே இல்லை. இதனால் இணையவழிக் குற்றங்கள் விதம் விதமாக செய்யப்படுகின்றன. குறிப்பாக,
* இணையம் அல்லது பிற மின்னணு சாதனங்களை பயன்படுத்தி, ஒருவரைத் தொடர்ந்து அச்சுறுத்துகின்றனர், கண்காணிக்கின்றனர். இதை ஆங்கிலத்தில் cyberstalking என்பார்கள். சொல்லப்போனால், நாம் கண்காணிக்கப்படுகிறோம் என்பது நமக்கே தெரியாத அளவுக்கு நம் கைப்பேசிக்குள் இன்னொருவர் நுட்பமாக உள்நுழைந்து (hacked), நம்மையும் நமது கைப்பேசியையும் இயக்குவதற்கே கூட தற்போது வாய்ப்புகள் அதிகமாகிவிட்டது. இது, மிகப் பாரதூரமான நிலைக்கு நம்மைத் தள்ளிவிடக்கூடும்.
* அடுத்து, revenge Porn... முன்பு தொடர்பிலிருந்த நபர், அந்த தொடர்பை துண்டித்துக்கொண்ட பிறகு, தாம் உறவிலிருந்தபோதும் பழகிய நாட்களிலும் எடுத்துக்கொண்ட அந்தரங்க புகைப்படங்களையோ வீடியோக்களையோ ஒலிப்பதிவுகளையோ வெளியிடுவதும் அல்லது “வெளியிடுவேன்” என அச்சுறுத்தி, அந்த நபரை துன்புறுத்துவதும் பெருங்குற்றத்தின் இன்னொரு வடிவமாகும்.
* “சைபர் பலாத்காரம்” என்றொரு குற்றமும் தற்போது நிகழ்த்தப்படுகிறது. “நீ என் விருப்பத்துக்கு இணங்காவிட்டால் இந்தப் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டுவிடுவேன்” என்று சொல்லி, ஒருவரை பயமுறுத்தி, பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களும் இருக்கிறார்கள்.
AI - செயற்கை நுண்ணறிவு எனும் இருபக்க கூர்வாள்!
இந்நாட்களில் இணையக் குற்றங்கள் அதிகமாக இடம்பெற, இணையத்தின் அபரிமிதமான வளர்ச்சியும் செயற்கை நுண்ணறிவும் கருவிகளாக கையாளப்படுகின்றன.
செயற்கை நுண்ணறிவு (AI) என்கிறபோது, இதில் குற்றச் செயல்கள் இடம்பெற எந்தளவுக்கு வாய்ப்புக்கள் இருக்கின்றனவோ, அந்தளவுக்கு ஒருவர், “இது நான் இல்லை” என்று கடந்துசெல்லவும், தான் செய்த குற்றத்திலிருந்து தப்பித்துக்கொள்வதற்குமான வழிகளும் வாய்ப்புகளும் கூட இருக்கின்றன.
சில வேளைகளில் குற்றங்களை கண்டறிவதற்கும் காவல்துறையினால் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஆக, செயற்கை நுண்ணறிவு என்பது இரண்டு பக்கங்களும் கூர்மையுள்ள ஒரு வாளைப் போன்றதே. இவற்றினூடாக இடம்பெறும் குற்றங்களுக்கு நாமே வாய்ப்பளிக்கிறோம் என்பதுடன் நம்மை நாமே வியாபாரப் பண்டமாக மாற்றிக்கொண்டோம் என்றே சொல்லவேண்டும்.

சமூக ஊடகங்களில் போலியான திரை வாழ்க்கை
சமூக ஊடக பிரபலங்களைப் பாருங்கள். இன்று கல்வியின் முக்கியத்துவம் மறக்கடிக்கப்படுகிறது. மாறாக, சமூக வலைத்தள பிரபலம் ஆவது வணிக ரீதியில் வெற்றிகரமானதாகவும் கனவாகவும் மாறிவிட்டது.
அவர்களில் பலர், தாம் கஷ்டப்பட்டு, படித்து மருத்துவராகவோ பொறியியலாளராகவோ கணக்காய்வாளராகவோ ஊடகவியலாளராகவோ சட்டத்தரணியாகவோ தங்கள் வாழ்க்கையில் வெற்றியடையவேண்டும் என்று கருதாமல் திசைதிரும்புகிறார்கள். அவர்கள் கல்வி கற்று வெற்றி அடைந்தவர்களாகவோ, தாம் அடைந்த வெற்றிகளையோ சமூக ஊடகங்களில் எடுத்துக்காட்டுவதில்லை. சமூக ஊடக நட்சத்திரங்களாக, பாடல்களுக்கு ஆடுகிறார்கள்; கற்பனையான, போலியான திரை வாழ்க்கையை காட்டுகிறார்கள். இவற்றைப் பார்க்கின்ற இன்றைய தலைமுறை பிள்ளைகளும் நிலையான கல்வி மற்றும் திறமையின் முக்கியத்துவத்தை உணராமல், கற்பனையான விடயங்களின் பக்கம் செல்ல எத்தனிக்கிறார்கள்.
இது எனக்கு பாதுகாப்பானதா, இது எனக்கு பொருத்தமானதா, இது எனக்கு ஸ்திரமான எதிர்காலத்தை உருவாக்குமா என்பதை பிள்ளைகள் உணரவேண்டும். அதை விடுத்து, அவர்கள், திசை மாறி சிந்திப்பதற்கான வாய்ப்பை இன்று பெரியவர்களே உருவாக்கிவிட்டிருக்கிறார்கள். அந்த வாய்ப்பே சரியென்றும் கருதுகிறார்கள்.
பெண்கள் உலகத்தை ஆண்ட காலம் போய், இன்று பெண்களை ஒரு பண்டமாக பார்க்கின்ற சமூக அமைப்புக்குள் நாம் ஊறிவிட்டோம் என்பது கவலைக்குரிய விடயம். இதுபோன்ற காலச் சூழ்நிலையில் பாலின அடிப்படையிலான குற்றங்களும் (gender based offenses) அதிகரித்துவிட்டன. இக்குற்றங்கள் பெண்களுக்கு எதிராக மட்டுமன்றி, ஆண்களுக்கு எதிராகவும் இடம்பெற்று வருவதைக் காணமுடிகிறது.
போலிக்கணக்குகள், ஆள்மாறாட்டம், மோசடி!
சமூக ஊடகங்களில் பலர் போலிக் கணக்குகளை வைத்திருக்கிறார்கள். ஒருவரது புகைப்படத்தைக் கொண்டு, அவர் பயன்படுத்துவதைப் போலவே ஒரு போலிக்கணக்கை இன்னொருவர் உருவாக்கி, இயக்குவது வெகு சாதாரணமான விடயமாகிவிட்டது.
ஒரு மின்னஞ்சல் முகவரி அல்லது தொலைப்பேசி இலக்கம் இருந்தால் போதும்... ஒரு போலிக்கணக்கை திறந்துவிடலாம். அவ்வாறான போலிக் கணக்குப் பக்கங்களில் பல்வேறு புகைப்படங்கள், வீடியோக்கள், தகவல்கள் பகிரப்படுகின்றன. அவற்றுள் சில புகைப்படங்கள், வீடியோக்கள் நிஜமானவையாக இருக்கலாம் அல்லது இன்னும் சில, செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்ப வசதிகள் மூலம் மாற்றியமைக்கப்பட்டவையாகவும் இருக்கின்றன.
ஆக, செயற்கை நுண்ணறிவானது குற்றத்தின் தன்மையை மேலும் இலகுவாக்கியிருக்கிறது என்று கூறலாம்.
இந்த குற்றங்கள் எல்லாவற்றினதும் கடைசி நோக்கம், அந்த நபர்களை பாலியல் ரீதியாக அச்சுறுத்துவதும் துன்புறுத்துவதும் பணம் பறிப்பதும் அவமானத்தை ஏற்படுத்துவதுமாகத்தான் இருக்கும். எனினும், இணையக் குற்றங்கள் ஆண், பெண் வித்தியாசமின்றி எந்தப் பாலினத்தவருக்கும் எதிராக இடம்பெறக்கூடும் என்ற அடிப்படையில், பொதுவாக நபர் ஒருவர் இத்தகைய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கிறபோது கவனத்தில் கொள்ளவேண்டிய விடயங்களையும் அவர்கள் அணுகவேண்டிய சட்டம் தொடர்பான தகவல்களையும் இனி பார்க்கலாம்.
சட்ட ரீதியாக இத்தகைய சூழ்நிலைகளுக்கு முகங்கொடுத்தவர்களுக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் உள்ள ஏற்பாடுகள் மற்றும் குடியியல் சட்டத்தின் கீழ் உள்ள வழிமுறைகள் ஆகிய இரண்டின் அடிப்படையில் இந்த விடயங்களை அணுகலாம்.
ஒருவரது அந்தரங்க விடயங்களை (புகைப்படம், வீடியோ, குரல் பதிவு, வேறு விடயங்கள்)
“வெளியிடுதல் அல்லது பதிவிடுதல்”
வெளியீடு, பிரசுரம் ஆகிய சொற்கள் “பத்திரிகையில் வெளியாவது” என்ற ஒரே ஒரு அர்த்தத்தில் இங்கே குறிப்பிடப்படவில்லை. ஒரு விடயத்தை, எந்த முறையிலேனும் பலர் பார்வைக்குக் காண்பிப்பதை அல்லது அறியத்தருவதை “பிரசுரித்தல்”, “வெளியிடுதல்” எனலாம்.
பத்திரிகைகளில் மட்டுமன்றி, சமூக ஊடகங்களிலோ அல்லது வேறு எங்கோ, எந்த மின்னணு சாதனத்தின் ஊடாகவோ ஒருவருக்கோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கோ அறியத்தருவதை, காட்சிப்படுத்துவதை “பிரசுரித்தல்” அல்லது “வெளியிடுதல்” (publish), “பதிவிடுதல்” (Post), “பகிர்தல்” (share) என்ற சொற்களால் குறிப்பிடலாம். இணையக் குற்றங்களைப் பொறுத்தவரையில், இவற்றில் எதுவொன்றும் பாரதூரமானதே, குற்றமே!
இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள எந்த ஒரு இலங்கை பிரஜைக்கு எதிராக இத்தகைய குற்றங்கள் நிகழ்த்தப்பட்டாலும் அல்லது இலங்கை பிரஜை ஒருவர் உலகின் எந்த மூலையில் இருந்துகொண்டு இதுபோன்ற குற்றங்களை நிகழ்த்தினாலும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடிய வகையில் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்ட ஏற்பாடுகள் (Online Safety Act No. 9 of 2024) காணப்படுகின்றன.

உங்களது புகைப்படம், வீடியோ அல்லது வேறு தகவல்கள் அவதூறு பரப்பும் நோக்கில் வேண்டுமென்றே பகிரப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்தால் உடனடியாக செய்யவேண்டியவை...
நீங்கள் உங்கள் கைப்பேசியில் வட்ஸ்அப், பேஸ்புக் என எந்தவொரு சமூக ஊடக தளத்திலாவது, உங்களை தனித்து அடையாளப்படுத்தக்கூடிய பதிவினைப் (புகைப்படம், வீடியோ, வேறு தகவல்கள்) பார்த்தீர்களாயின், அதை உடனடியாக ஸ்க்ரீன்ஷொட் (screenshot) எடுத்து, சான்றுகளை பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள்.
பெரியவர்களாயின், உடனடியாக சட்ட ஆலோசனை பெற்று, உரிய பொலிஸ் நிலையத்தில் அல்லது சைபர் க்ரைம் பிரிவில் நேரடியாகவே சென்று முறைப்பாடு செய்யலாம். அத்துடன் சைபர் குற்றப்பிரிவு, பொலிஸார் உரிய, தேவையான வழிகாட்டுதல்களை உதவி, தொடர்பு இலக்கத்தை தொடர்புகொண்டாலே வழங்குவர்.
அடுத்து, இச்சம்பவம் ஒரு பராயமடையாதவருக்கு நடந்திருப்பின், நடந்த அந்த சம்பவம் தொடர்பாக பெற்றோர் அல்லது பாதுகாவலர் அல்லது அதிபர் அல்லது ஆசிரியருக்கு அல்லது நம்பிக்கைக்குரியவருக்கு கட்டாயமாக தெரியப்படுத்தவேண்டும். பின், அவர்களின் ஊடாக முறையாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்க வேண்டும்.
ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலும் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் (Police Children & Women Bureau) உள்ளது. அங்கு, இணையக் குற்றங்கள் தொடர்பாக முறைப்பாடு அளிக்க முடியும். சிலவேளை, பணியக அதிகாரிகள், சைபர் க்ரைம் பிரிவில் (Cyber Crime Division) முறைப்பாடு அளிக்கும்படி பரிந்துரைக்கக்கூடும். அதன் பின், சைபர் க்ரைம் பிரிவில் முறைப்பாடளிக்கலாம். அல்லது முதல் நடவடிக்கையாகவே கூட சைபர் க்ரைம் பிரிவில் முறைப்பாடு பதிவு செய்துகொள்ளமுடியும். தற்போது சைபர் க்ரைம் பிரிவுக்கு ஒன்லைன் ஊடாகவும் புகார் அளிக்க முடியும்.
இவ்விதமாக முறைப்பாடு அளிக்கப்பட்டதன் பின்னர், விசாரணைகள் தொடரும்.
குற்றம் இழைத்தவர் ஏற்கெனவே பாதிக்கப்பட்டவருக்குத் தெரிந்த நபர் என்றால் நேரடியாக அவரது பெயர் குறித்து அவருக்கு எதிராகவே குறித்த முறைப்பாட்டை பதிவு செய்யலாம்.
விசாரணைகளுக்குப் பின்னர், சைபர் க்ரைம் ஊடாக குற்றம் இழைத்தவர் கண்டறியப்படுவார். பின்னர், குற்றம் இழைத்தவர் பொலிஸாரால் கைது செய்யப்படுவார்.
கைது செய்யப்பட்ட பின்னர், வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கு நீதிமன்ற நடவடிக்கைகளின் ஊடாக முன்னகர்த்தப்படும்.
குற்றம் இழைத்தவர் கண்டறியப்பட்ட பின்னர், முதலில் பொலிஸ் தரப்பினர், குறிப்பிட்ட குற்றத்துக்கான சான்றுகளை, சந்தேக நபருக்கு எதிரான ஆதாரங்களை சேகரித்து, அக்குற்றத்தின் தன்மையை பொறுத்து நியாயாதிக்கம் உள்ள, தகுதி வாய்ந்த நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வார்கள். அதைத் தொடர்ந்து, அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
இந்த சட்ட நடபடிமுறைகளில் குற்றவாளியை கண்டறிவது சிலவேளைகளில் சவாலான விடயமாக காணப்படக்கூடும். ஏனென்றால், குற்றவாளி இலங்கைக்குள் அல்லது இலங்கைக்கு வெளியேயும் காணப்படலாம்.
அதேவேளை குறித்த கணக்கு பாதிக்கப்பட்டவரின் பெயரில் தொடங்கப்பட்ட ஒரு போலியான கணக்கு எனில், அதனை Report செய்வதன் மூலம் குறித்த சமூக ஊடக நிறுவனத்தினாலேயே அத்தகைய போலிக் கணக்குகள் முடக்கப்பட வாய்ப்புள்ளது...” என்று சட்டத்தரணி அன்புவதனி கிறேஷியன் தெரிவித்தார்.
தற்காலத்தில், குற்றங்களுக்குப் பின்னணியில் செயற்கை நுண்ணறிவு ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுவதைப் போன்று, குற்றத்தில் ஈடுபடுபவர் அடையாளம் காணப்பட்டு, சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படவும் AI என்கிற கருவி இயக்கப்படுவதாகக் கூறும் அன்புவதனி, தொடர்ந்து இணையவெளியில் இடம்பெறும் குற்றங்கள், அவற்றை எடுத்துக்காட்டக்கூடிய நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தின் முக்கிய சட்டப் பிரிவுகள், தண்டனைகள் பற்றியும் தெளிவுபடுத்தும் விடயங்களை இனிவரும் நாட்களில் காண்போம்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM