மதுசார பாவனையாளர்களால் பாதுகாப்பின்மை, அசௌகரியத்தை உணரும் 71% பெண்கள்! - ADIC ஆய்வு

09 Mar, 2026 | 12:53 PM
image

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மதுசார பாவனையாளர்கள், பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பிற்கு ஏற்படும் தாக்கம் தொடர்பாக ADIC நடத்திய ஆய்வு

இலங்கையில் மதுசாரம், புகையிலை மற்றும் ஏனைய போதைப்பொருட்களை உட்கொள்வது அனைத்து சமூக மட்டங்களிலும் பொருளாதார, சுகாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, ஏனையவர்களின் மதுசார பாவனை பெண்களுக்கு பல்வேறு வகைகளில் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது. பொது இடங்களிலும், பொதுப் போக்குவரத்திலும் மதுசார பாவனையாளர்களால் பெண்களுக்கு ஏற்படுத்தப்படும் அசௌகரியங்கள் மற்றும் பாதுகாப்பற்ற சூழல் ஆகியவை தொடர்பாக விரைவாக கவனம் செலுத்தப்படவேண்டிய தேவை காணப்படுகின்றது. இத்தகைய பிரச்சினைகளை கட்டுப்படுத்துவதற்கான பயனுள்ள ஒரு கட்டமைப்பு இல்லாதமையின் காரணமாக, பல பெண்கள் இது தொடர்பாக பேசுவதற்குத் தயங்குபவர்களாக இருக்கும் ஒரு சூழலை உருவாக்கியுள்ளது. பொது இடங்களில் மதுசார பாவனையாளர்களால் பெண்களின் பாதுகாப்புக்கு ஏற்படும் தாக்கங்களை அடையாளம் கண்டு வெளிப்படுத்தும் நோக்கில், 2026 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் (ADIC) நாடளாவிய ரீதியில் ஆய்வொன்றினை மேற்கொண்டது. 

இந்த ஆய்வானது இலங்கையின் 25 மாவட்டங்களிலிருந்தும் 15 வயதிற்கு மேற்பட்ட 1157 பெண்களிடம் சேகரிக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு நடத்தப்பட்டது. மதுசார பாவனையாளர்களால் பொது இடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் தீவிரத்தை முன்னிலைப்படுத்துவதற்கும், அத்தகைய சூழலில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பயனுள்ள தலையீடுகளை மேம்படுத்துவதற்கு ஆதரவாக ஆதாரங்களை உருவாக்குவதே இவ் ஆய்வின் நோக்கமாகும்.

பிரதான பெறுபேறுகள்

- 71% பெண்கள் பொது இடங்களில் மதுசார பாவனையாளர்களால் பாதுகாப்பின்மையை உணர்கின்றார்கள்.

- 55.4% பெண்கள் பொது இடங்களில் மதுசார பாவனையாளர்களால் வாய்மொழி ரீதியான துன்புறுத்தல்களுக்கு ((Verbal abuse) ஆளாகியுள்ளனர்.

- மதுசார பாவனையாளர்களால் ஏற்படும் அசௌகரியங்கள், துன்புறுத்தல்களுக்கு தம்மை பாதுகாத்துக்கொள்வதற்காக 67.4% பெண்கள் குறிப்பிட்ட இடங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பதாகக் கூறியுள்ளனர்.

- பயம் காரணமாக, 66.3% பெண்கள் மதுசார பாவனையாளர்களால் ஏற்படுத்தப்படும் அசளகரியங்களுக்கு பதிலளிப்பதையும் எதிர்ப்பதையும் தவிர்த்து அதனை பொறுத்துக்கொள்கின்றனர்.

- 66% பங்குபற்றுனர்கள் பொது இடங்களில் பெண்களுக்கு அசௌரியங்களை ஏற்படுத்துவதற்கு மதுசாரம் ஒரு அனுமதிச்சீட்டாக பயன்படுத்தப்படுகிறது என்பதை நம்புகின்றனர்.

- 98.4% பங்கேற்பாளர்கள் பொது இடங்களில் மதுசார பாவனையாளர்களால் பெண்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்களிலிருந்து தங்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

ஆய்வின் முழுமையான பெறுபேறுகள்

1. இந்த ஆய்வின்படி, பொது இடங்களில் மதுசார பாவனையாளர்களால் 71% பெண்கள் பாதுகாப்பற்ற உணர்வையும் அசௌகரியத்தையும் எதிர்கொள்கின்றனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

2. பதிலளித்தவர்களில் 77% இற்கும் அதிகமான பெரும்பான்மையினர் பேருந்துகள் மற்றும் ரயில்கள் போன்ற பொதுப் போக்குவரத்திலேயே பெரும்பாலும் பாதுகாப்பற்ற உணர்வை எதிர்கொண்டுள்ளனர். அத்துடன் கணிசமான விகிதத்திலான பெண்கள் வீதிகளிலும் (44%), பேருந்து மற்றும் ரயில் நிலையங்களிலும் (43%) மற்றும் பூங்காக்கள் போன்ற பொதுவான வெளிப்புற இடங்களிலும் (27%) பாதுகாப்பற்ற நிலையை உணர்கின்றனர். 

மேலும் 13%பெண்கள் பொது வாடகை வாகனச் சேவைகளைப் பயன்படுத்தும்போதும் பாதுகாப்பற்ற உணர்வை எதிர்கொண்டுள்ளனர்.

3. ஆய்வின்படி, 55% பெண்கள் மதுசார பாவனையாளர்களால் வாய்மொழி ரீதியான துன்புறுத்தலை எதிர்கொண்டுள்ளனர், அதேவேளை 67% பெண்கள் மதுசார பாவனையாளர்கள் மீது வீசும் விரும்பத்தகாத துர்நாற்றத்தினால் அசௌகரியத்தை அனுபவிப்பதாகத் தெரிவித்துள்ளனர். 49%  பெண்கள் தங்களை மதுசார பாவனையாளர்கள் பின் தொடர்வது அல்லது அசௌகரியமாகவும் பாதுகாப்பற்றதாகவும் உணரும் வகையில் தங்களை முறைத்துப் பார்ப்பதையோ எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர். அதிர்ச்சியளிக்கும் விதமாக, 36% பெண்கள் அனுமதியற்ற தொடுதல் மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தல்களை எதிர்கொண்டுள்ளனர்.

4. மதுசார பாவனையாளர்களால் ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக 68% பெண்கள் குறிப்பிட்ட இடங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பதாகவும், 19.2%  பெண்கள் தங்களது பயண நேரங்களை மாற்றியமைத்துள்ளதாகவும் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. குறிப்பாக, 47%  பெண்கள் மதுசார பாவனையாளர்களால் ஏற்படுத்தப்படும் அசௌகரியமான மற்றும் பாதுகாப்பற்ற நடத்தைகளை மௌனமாகச் சகித்துக்கொள்வதாகவும், 27.6% பெண்கள் துன்புறுத்தலிலிருந்து தப்பிப்பதற்காக மற்றுமொரு நபரைத் துணையாக அழைப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 

மேலும், 41.7% பெண்கள் இவ்வாறான துன்புறுத்தல்களால் மன ரீதியான அசௌகரியத்தை அனுபவிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

5. பொது இடங்களில் மதுசார பாவனையாளர்களால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு பல பெண்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது. அவர்களில் 66.2% பெண்கள் பயம் காரணமாக எதிர்ப்புக்களை வெளிப்படுத்துவதில்லை, 47.6% பெண்கள் அவமானம் மற்றும் வெட்கம் காரணமாக எதிர்ப்புக்களை வெளிப்படுத்துவதில்லை,. 34.5%  பெண்கள் தங்களைச் சுற்றியுள்ளவர்களிடமிருந்து ஆதரவு கிடைக்காத காரணத்தினால் மௌனமாக இருக்கின்றனர். 19.2%  பெண்கள் அத்தகைய சூழ்நிலையைக் கையாள்வதில் தங்களுக்கு இருக்கும் தன்னம்பிக்கைக் குறைவு காரணமாக எதிர்ப்புக்களை வெளிப்படுத்துவதில்லை.

6. 66% பங்குபற்றுனர்கள் பொது இடங்களில் பெண்களுக்கு அசௌரியங்களை ஏற்படுத்துவதற்கு மதுசாரம் ஒரு அனுமதிச்சீட்டாகப் பயன்படுத்தப்படுகின்றது என்பதை நம்புகின்றனர்.

7. இந்தச் சூழ்நிலையை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்த அவர்களின் கருத்துக்கள் வினவப்பட்டபோது, 54.2%  பெண்கள் புகார்களைச் சமர்ப்பிப்பதற்கும், அவற்றிற்கான சட்ட நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதைக் கண்காணிப்பதற்கும் ஒரு முறையான கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டியது அவசியம் எனத் தெரிவித்தனர். 51.2% பெண்கள் மதுசாரக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளை சரியான முறையில் அமுல்படுத்த வேண்டும் என குறிப்பிட்டனர். மற்றும் 47.5% பேர் மதுசார பாவனையினால் ஏற்படும் விளைவுகள் தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு செயற்றிட்டங்களை செயற்படுத்த வேண்டும் என தெரிவித்தனர்.

8. பொது இடங்களில் மதுசார பாவனையளார்களால் பெண்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என 98% பேர் குறிப்பிட்டனர்.

மதுசார பாவனையின் பின்னர் மேற்கொள்ளப்படும் அசௌகரியங்கள் பெரும்பாலும் மன்னிக்கப்படுகின்றன. அல்லது ஏற்றுக்கொள்ளத்தக்க ஒன்றாகக் கருதப்படுகின்றன. இந்த எண்ணம் சிறு வயதிலிருந்தே சமூகத்தில் வேரூன்றியுள்ளது. ஆனால், மதுசாரத்தினால் சுயநினைவற்றுப் போதல் அல்லது மேற்கொள்ளும் செயற்பாடுகளை மறத்தல் ஆகியன ஏற்படுவதில்லை. மதுசார நிறுவனங்களின் தொடர்த்தேர்ச்சியான தலையீடுகளின் காரணமாக மதுசார பாவனையாளர்களுக்கு சுயநினைவில்லை என்கின்ற மூடநம்பிக்கை சமூகத்தில் ஊடுறுவப்பட்டுள்ளது.

மேலும், இதனால் மதுசார பாவனையாளர்களின் செய்கைகள் சமூகத்தில் சாதாரணமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையை மாற்றியமைக்கவேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது. அதற்காக மதுசார பாவனையாளர்களுக்கு சுயநினைவற்றுப் போவதில்லை. அவர்கள் மதுசாரத்தை ஒரு அனுமதிச் சீட்டாகப் பயன்படுத்தி தங்களுக்கு தேவையானவற்றை மேற்கொள்கின்றனர் என்கின்ற தெளிவினை சிறுவயதிலிருந்தே பெண்களுக்கு ஏற்படுத்த வேண்டும். 

மேலும் மதுசாரத்தை ஒரு நியாயமான காரணியாகவோ, மதுசார பாவனையின் பின்னரான நடத்தைகளுக்கு தண்டணைகள் குறைத்தலுக்கான காரணியாகவே ஏற்றுக்கொள்வதை தடுக்கும் வகையில் சமூகக் கட்டமைப்புக்கள் வலுப்படுத்தப்பட வேண்டும்.

மதுசாரக் கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மற்றும் கொள்கைகளைச் சரியாக  நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்தல்:

பொது இடங்களில் மதுசாரம் அருந்துவதைக் குறைப்பதற்கும் பொதுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் தற்போதுள்ள மதுசாரக் கட்டுப்பாட்டுச் சட்டங்கள் சீராக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

தேசிய புகையிலை மற்றும் மதுசார அதிகாரசபை (NATA) சட்டத்தை வலுப்படுத்துதல்: மதுசாரம் மற்றும் புகைப்பொருள் தொடர்பான பாதிப்புகளைக் கையாள்வதற்கான வலுவான சட்டக் கட்டமைப்பை வழங்க, NATA சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை தாமதமின்றி அங்கீகரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

சமூக மட்டத்திலான நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் : இலங்கையில் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான தற்போதைய தேசியப் பிரச்சாரம் பாராட்டத்தக்கது. அதேபோன்று, பொது இடங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளைப் பாதுகாக்கும் நோக்கில், மதுசாரப் பயன்பாட்டின் விளைவுகளைக் கையாள்வதற்கு தேசிய அளவிலான விழிப்புணர்வு மற்றும் செயற்பாட்டுப் பிரச்சாரங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆதரவளித்தல் மற்றும் அவமானத்தைக் குறைத்தல்: பெண்களின் தன்னம்பிக்கையை வலுப்படுத்தவும், அணுகக்கூடிய ஆதரவு அமைப்புகளை வழங்கவும், பெண்கள் பேசுவதைத் தடுக்கும் அல்லது கட்டுப்படுத்தும் சமூக அவமானம், பயம் மற்றும் சமூக அழுத்தத்தைக் குறைக்கவும் இலக்கு வைக்கப்பட்ட திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

ஆண்களின் மதுசார பாவனையினால் பெண்கள் கணிசமான அநீதியை அனுபவிக்கின்றனர். தொற்றாத நோய் ஆபத்துக் காரணி ஆய்வின்படி (STEPS 2021), இலங்கையில் பெண்களின் மதுசார பாவனை; 1.2% என்ற அளவில் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. மேலும் நமது நாட்டில் ஒட்டுமொத்த மதுசார பாவனை 25%க்கும் குறைவான விகிதத்திலேயே உள்ளது. இத்தகைய ஒப்பீட்டளவில் குறைந்த அளவுகள் இருந்தபோதிலும், மதுசார பாவனையானது கணிசமான பொருளாதார, ஆரோக்கிய மற்றும் சமூகச் செலவுகளைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது, இது தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் நல்வாழ்வையும் உற்பத்தித்திறனிலும் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

எமது நாட்டின் மதுசார பாவனையை தடுப்பதிலும், குறைப்பதிலும் பெண்கள் முக்கியப் பங்காற்றுகின்றனர்.

எவ்வாறாயினும், மதுசார நிறுவனங்களின் தலையீடுகள் மற்றும் விளம்பர நடவடிக்கைகள் மூலம் பெண்களை இலக்குவைத்து, ஆண்களைச் சிக்க வைத்த அதே மதுசார பாவனைக்கு பெண்களையும் சிக்க வைப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

எனவே, மதுசார நிறுவனங்களின் தந்திரோபாயங்களை வெளிப்படுத்துவதற்காகவும் அவற்றை தடுப்பதனூடாக நமது நாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகளைப் பாதுகாப்பதற்காக அனைவரும் முன்வரவேண்டும் என்று மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் வலியுறுத்துகிறது.

- நிதர்ஷனா செல்லதுரை

நிகழ்ச்சி அதிகாரி

மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் (ADIC)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விடும் இணைய...

2026-04-17 16:45:43
news-image

தமிழக அரசியலில் மாற்றத்துக்கான சாத்தியத்தைக் கொண்டிருக்கும்...

2026-04-15 11:14:44
news-image

அரசாங்கத்தைப் பொறுப்புக்கூறச் செய்தல்

2026-04-15 11:11:50
news-image

அணுகுண்டைவிட பலம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை

2026-04-13 16:14:43
news-image

சூத்­தி­ர­தா­ரியை தேடும் அர­சியல்

2026-04-11 18:32:41
news-image

மீள் கண்டுபிடிப்பு

2026-04-11 18:30:59
news-image

நிதியால் தாம­திக்கும் நீதி

2026-04-11 18:29:55
news-image

கும்பல் அடக்கும் படையில் இலங்கை இரா­ணுவம்

2026-04-11 18:29:04
news-image

காவல் நிலைய சித்திரவதைகள் : சாத்தான்குளம்...

2026-04-11 11:47:08
news-image

புதிய அரசியலமைப்பு வரைவுக்கான நிபுணர் குழு...

2026-04-11 18:19:10
news-image

ஈரானின் வியூ­கத்­துக்குள் சிக்­கிய அமெ­ரிக்கா

2026-04-11 18:28:16
news-image

டிஜிட்டல் பொருளாதாரப் பாய்ச்சல் - 'கியூ.ஆர்...

2026-04-11 11:42:42