ஸிகா வைரஸ் தாக்கத்தினால் நோய்பரவியுள்ள நாடுகளுக்கு செல்வதை கர்ப்பிணிப் பெண்கள் தவிர்க்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

சில தென்னமெரிக்க நாடுகளில் பரவிவரும் ஸிகா வைரஸ், கனடாவையும் சிலியையும் தவிர்த்து ஏனைய அமெரிக்க கண்ட நாடுகள் அனைத்திலும் பரவக்கூடும் என்று தாம் எதிர்பார்ப்பதாக உலக சுகாதார நிறுவனம்  மேலும் எச்சரித்துள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் முதல் பிரேசிலில் இக்கிருமி வேகமாகப் பரவிவருகிறது.

அடெஸ் என்கிற நுளம்புக் கடியால் பரவும் இந் நோய், குழந்தைகள் பாதிப்புடன் பிறப்பதற்கு காரணமாக அமைகின்றது.

இந்நிலையில், அடெஸ் ரக நுளம்புகளைத் தவிர வேறு வகையிலும் இந்த வைரஸ் பரவுவதற்கான சாத்தியம் இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ஒருவருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதைக் காட்டக்கூடிய நோயின் அறிகுறிகள் மிகவும் மென்மையானவையாக இருப்பதால் இதனை உடனடியாக கண்டறிவதில் பல்வேறு சிக்கல் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.