எங்கிருந்தோ வரும் ஆற்றலை வெளிப்படுத்தும் ஒரு கருவியே நாங்கள்! - இந்திய பரதநாட்டியக் கலைஞர் ராஜஸ்ரீ வாரியர்

06 Mar, 2026 | 06:55 PM
image

- மா. உஷாநந்தினி

(படப்பிடிப்பு - எஸ்.எம்.சுரேந்திரன்)

“எந்தக் கலைஞரும் இன்றியமையாதவர் அல்லர். நமக்கு முன்னால் எத்தனையோ நடனக் கலைஞர்கள் வாழ்ந்தார்கள், நமக்குப் பின்னாலும் எத்தனையோ பேர் வருவார்கள். எங்கிருந்தோ வரும் ஒரு ஆற்றலை வெளிப்படுத்தும் ஒரு கருவியாக நாம் இருப்பதற்கு ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம், அவ்வளவுதான்” என இந்தியாவின் முன்னணி பரதநாட்டியக் கலைஞர் கலாநிதி ராஜஸ்ரீ வாரியர் மனந்திறந்து கூறினார்.  

அண்மையில் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் சுவாமி விவேகா

னந்தர் கலாசார நிலையத்தில் ஒரு பரதநாட்டிய நிகழ்வில் பங்கேற்பதற்காக வருகைதந்த தருணத்தில், ராஜஸ்ரீ வாரியர் எம்முடன் சொற்ப நேரம் கதையாடியபோது பகிர்ந்துகொண்டவை இனி....

முதல் முறையாக ஒரு நாட்டிய நிகழ்வில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு வந்திருக்கிறீர்கள்... என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

இலங்கையில் ஒரு சிறு பகுதியை மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். கொழும்பு நகரம் மிக அழகாக உள்ளது. அதுதான் எனக்குள் ஏற்பட்ட முதல் ஈர்ப்பு. அதுமட்டுமல்ல, இங்கே மிகச் சிறந்த கலைஞர்கள் உள்ளனர். இங்கு எனக்கு பெரிதாக யாரையும் தெரியாது. உபேக்கா சித்திரசேனா போன்ற வெகுசில கலைஞர்களை மட்டுமே அறிவேன். இலங்கையில் இவ்வளவு பாரம்பரியமான நடன மரபைக் கொண்ட இந்தக் கலைஞர்கள் நம் மத்தியில் இருப்பது மிகவும் நல்லது. அவர்கள் மற்ற நடனக் கலைஞர்களை மிகுந்த மரியாதையோடு வரவேற்பதில் சிறந்தவர்கள். அதுதான் மிகவும் முக்கியம். அவர்கள் என்னை வரவேற்ற விதம், என்னை நெகிழச் செய்தது” என்றார்.

உங்கள் வாழ்க்கையில் பரதத்துக்கான இடம் எத்தகையது?

“என்னைப் பொறுத்தவரையில் பரதநாட்டியம் எனது மொழி. நான் என்ன பேச விரும்புகிறேனோ அதை நாட்டியத்தால் சொல்லும்போது, அது இயல்பாகவே வருகிறது. அந்தளவுக்கு ஒரு நல்ல அத்திவாரம் எனக்கு அமைந்தது. மிகச் சிறந்த குருக்கள் கிடைத்தார்கள். எனக்கான அடித்தளம் அங்கிருந்தே கிடைத்தது.

பரதநாட்டியம் என்பது ஒரு நடன நுட்பமாக (Technique) இருந்தாலும், அது ஒரு சங்கீதமாக, நடன சங்கீதமாக உள்ளது. இருப்பினும், நாட்டியம் ஒரு மொழியாக இருப்பதாகவே நான் உணர்கிறேன். அந்த வகையில்தான் நான் பயிற்சி பெற்றேன். பரதநாட்டியத்தை ஒரு நுட்பமாக அணுகாமல், ஒரு மொழியாக அணுகப் பழகினேன். அத்தோடு, பரதநாட்டியத்தின் ஊடாக கதை கூறும் முறையையும் (storytelling technique) நான் வளர்த்துக்கொண்டிருக்கிறேன். ஒருவேளை நான் கேரளாவிலிருந்து வந்ததால் கூட இருக்கலாம். அங்கே கதகளி, கூடியாட்டம் போன்ற கலைகள் இந்த கதை கூறும் முறையை அடிப்படையாகக் கொண்டவை. அதனால் நான் அந்த இரண்டு கலை வடிவங்களாலும் நாடகங்களாலும் பெரிதும் ஈர்க்கப்பட்டேன். எனவே, எனது படைப்புகளில் இந்த நாடகக் கூறுகள் இருக்கும்.

நான் சிறு வயதிலிருந்தே கூடியாட்டம், கதகளி போன்ற கலைகளை அதிகமாக பார்த்து வந்ததே, பரதநாட்டியத்தில் கதை கூறும் முறையை சுவாரஸ்யமாக அறிமுகப்படுத்த எனக்கு உதவியது என்றும் சொல்லலாம்.

அதுமட்டுமல்ல, பரதநாட்டியம் எனக்கு ஒரு 'லைஃப் போட்'. உயிர் காக்கும் படகைப் போன்றது. ஆம், அதுவேதான். நிச்சயமாக பரதமே என் வாழ்க்கை. பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளில், சவாலான நேரங்களில் இக்கலை, எனக்கு ஒரு உயிர் காக்கும் படகாக இருந்திருக்கிறது.

மலையாள கவிதைகளையும் நாட்டுப்புற கதைகளையும் பரதநாட்டியத்தில் இணைத்தவர் நீங்கள்... இந்தக் கற்பனை உங்களுக்குள் எப்படி தோன்றியது?

ஆமாம், ஆமாம். எனக்கு அத்தகைய சூழலில் வளரும் வாய்ப்பு கிடைத்தது. அப்பா, அம்மா இருவருமே கலைகளை ரசிப்பவர்கள். அதுவும் ஒரு முக்கியக் காரணம்.

நானும் என் சகோதரரும் சிறு வயதிலிருந்தே பல இசை நிகழ்ச்சிகள், கவிதை நிகழ்ச்சிகள், நாடகங்கள் மற்றும் மாறுபட்ட திரைப்படங்களை பார்ப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டோம். அதனால் சிறு வயதிலிருந்தே எங்களுக்குள் ஒரு விதமான கலை உணர்வு இருந்தது. நான் ஒரு தொழில்முறை நடனக் கலைஞராக மாறியபோது அந்தக் கலையுணர்வு எனக்கு மிகவும் உதவியது. கவிதைகள், நாட்டுப்புற இசை, மலையாள நாட்டுப்புறப் பாடல்கள் எனப் பல்வேறு கலை வடிவங்களில் புதிய முயற்சிகளில் இறங்குவதற்கான ஒரு துணிவை அந்த உணர்வே எனக்குத் தந்தது.

நீங்கள் இலங்கையின் வேறு சில நடனங்களைப் பார்த்திருப்பீர்கள்... அவற்றைப் பற்றிய உங்கள் அபிப்பிராயம்?

இலங்கையின் மரபார்ந்த நடன வடிவங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. அவை மிகவும் துடிப்பாகவும், ஆற்றல் மிக்கதாகவும், அழகாகவும் இருக்கின்றன. குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால், கண்டிய நடனம். சித்ரசேனா, வஜிரா போன்றவர்களின் நடன ஆற்றலை குறிப்பிடவேண்டும். அது எனக்கு ஒரு புதிய பார்வையைத் தருகிறது. அந்த கலைஞர்களின் உடல் உழைப்பு மற்றும் ஆற்றல் என்னை வியக்க வைக்கிறது.

கண்டிய நடனம் உடல் ரீதியான (physical) நடனம். பரதநாட்டியத்துடன் ஒப்பிடும்போது அந்த நடனத்தில் உணர்ச்சி வெளிப்பாடுகள் (expressions) குறைவு. பரதநாட்டியம் அதிக உணர்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடியது. அந்த வகையில், நாட்டியத்தில் அபிநயமே முதன்மையானது. என்னுடைய பலமே 'அபிநயம்'தான்.

இப்போதெல்லாம் பல நடனக்கலைஞர்கள் 'ந்ருத்தம்' (தூய நடன அசைவுகள்) என்பதிலேயே  அதிக கவனம் செலுத்துகிறார்கள். ஆனால், அது மட்டுமே பரதநாட்டியம் அல்ல. உடல் மற்றும் முகத்தின் வழியாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் 'அபிநயத்தில்'தான் நாட்டியத்தை மெருகேற்றுவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன. அந்த வகையில் நான் அதிக முக்கியத்துவம் கொடுப்பது அபிநயத்துக்கே.

உங்களது கலைப்பயணத்தில் மனதுக்கு நெருக்கமான அனுபவத்தைக் கொடுத்தது எது?

கஜூராஹோவில் (Khajuraho, India) எனக்குக் கிடைத்த அனுபவம் மிகவும் அழகானது. ஏனென்றால், பொதுவாக நம் அனைவருக்கும் நம் பெயர், அனுபவம் ஆகியவற்றின் மீது ஒரு பிடிப்பும், "என்னால் எதையும் செய்ய முடியும்" என்றொரு கர்வமும் இருக்கும். ஆனால், நீங்கள் கஜூராஹோவில் நடனமாடும்போது, அந்த பின்னணியில் கஜூராஹோ கோயில் இருக்கும். அது தங்களின் பெயர்களை முன்னிலைப்படுத்த நினைக்காத எத்தனையோ சிற்பக் கலைஞர்களால் கட்டப்பட்டது. அவர்களின் பெயர்கள் நமக்குத் தெரியாது. ஆனால், அவர்கள் உருவாக்கிய அந்த கட்டடக் கலை வடிவமைப்பைப் பாருங்கள். எனக்குள் மிகுந்த பணிவு ஏற்பட்ட அனுபவத்தை அது கொடுத்தது.

யாராக இருந்தாலும் சரி, அந்தக் கோயிலின் உள்ளே நடனமும் கலையும் மட்டுமே முக்கியமானது. எந்தக் கலைஞரும் இன்றியமையாதவர் அல்லர். நமக்கு முன்னால் எத்தனையோ நடனக் கலைஞர்கள் வாழ்ந்தார்கள், நமக்குப் பின்னாலும் எத்தனையோ பேர் வருவார்கள். எங்கிருந்தோ வரும் ஆற்றலை வெளிப்படுத்தும் ஒரு கருவியாக நாம் இருப்பதற்கு ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம், அவ்வளவுதான். அந்தத் தெளிவு, எனக்கு அங்குதான் கிடைத்தது. அதனால்தான் கஜூராஹோ அனுபவத்தை என் இதயத்துக்கு மிக நெருக்கமானதாகக் கருதுகிறேன்.

அணிசேர் வாத்தியக் கலைஞர்களின்றி நடனமாடுவதை எப்படி உணர்கிறீர்கள்?

ஆம். இந்த நிகழ்வில் பதிவு செய்யப்பட்ட இசைக்கே  (recorded music) நடனமாடப்போகிறேன். பொதுவாக, நான் நேரடி அணிசேர் வாத்தியக் குழுவினர் (live orchestra) இணைந்த மேடையில் ஆடுவதே வழக்கம். அதற்குக் காரணம், நான் நிறைய “மனோதர்மம்" செய்வேன். “மனோதர்மம்"  என்றால் உங்களுக்குத் தெரியுமா? அந்த நேரத்தில் தோன்றும் புதிய யோசனைகளைச் செயற்படுத்துவது.

நேரடி இசையின்போது சொற்கள் மற்றும் பாவங்களில் நிறைய புதிய மாற்றங்களைச் செய்யமுடியும். இசைக்கருவிகள் நேரடியாக இசைக்கப்படும்போது நாம் நாட்டியத்தில் எதை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், இது பதிவு செய்யப்பட்ட இசை என்பதால் கைகள் கயிற்றால் கட்டப்பட்டிருப்பதைப் போல் உணர்கிறேன். சூழ்நிலை அப்படி!

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கவிப்பொழிவும் பட்டிமண்டபமும் : 'கம்பன் விழா...

2026-05-02 10:37:46
news-image

மனித நேயமிக்க ஆளுமை கே.பொன்னுத்துரையின் அகவை...

2026-04-21 11:21:21
news-image

மிகவும் சிறந்த  ஆஷா போஸ்லேவின் சில...

2026-04-13 20:56:05
news-image

தமிழைத் தமிழாக உலக அரங்கில் எடுத்துச்...

2026-04-11 18:56:28
news-image

'நாட்டிய வைபவம்' : நாட்டிய கலா...

2026-04-11 12:15:17
news-image

சிகரத் தரணியாம் கம்பளை நகர் காக்கும்...

2026-03-25 13:35:47
news-image

பசி வாட்டத்தில் குழந்தைகள், வறுமையோடு போராடும்...

2026-03-21 18:02:00
news-image

நாட்டிய வைபவம்

2026-03-19 10:57:50
news-image

இலங்கை - இந்திய பூர்வீகத் தொடர்பு:...

2026-03-14 13:52:02
news-image

எங்கிருந்தோ வரும் ஆற்றலை வெளிப்படுத்தும் ஒரு...

2026-03-06 18:55:07
news-image

‘இலங்கையில் இராமாயணம்’ நூல் விமர்சனம்

2026-03-01 17:18:39
news-image

பஞ்சரத்தினக் கீர்த்தனைகளால் நெகிழ்ந்த அரங்கம்! - ...

2026-02-22 12:55:08