அரசியல் இலாபங்களுக்காக 'அடக்குமுறை' என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல், பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான திட்டத்தை ஆதரியுங்கள் - எதிர்க்கட்சியை நோக்கி பிரதமர் 

06 Mar, 2026 | 03:55 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

அவசரகால சட்டம் இந்த மூன்று மாத காலப்பகுதியில் எந்த அடக்குமுறைக்கு பயன்படுத்தப்பட்டது, யார் கைது செய்யப்பட்டார்கள். எந்த போராட்டம்  மறுக்கப்பட்டது என்பதை எதிர்க்கட்சியினர் ஆதாரமாக குறிப்பிடவேண்டும். அவ்வாறு இடம்பெற்று எதிர்க்கட்சியினர் குறிப்பிட்டால் உரிய நடவடிக்கைகளை எடுக்க தயாராகவுள்ளோம். அரசியல் இலாபங்களுக்காக 'அடக்குமுறை' என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல், பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செயற்படுத்தப்படும்  திட்டத்தை ஆதரிக்குமாறு எதிர்க்கட்சியிடம் கேட்டுக்கொள்கிறேன் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (6) நடைபெற்ற அவசரகால சட்டம் அமுலாக்கம்  நீட்டிப்பு  தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

'அடக்குமுறை' என்ற வார்த்தையை வெறும் சொல்லாக மாத்திரம் குறிப்பிடாதீர்கள் என்று எதிர்க்கட்சிகளிடம் கேட்டுக்கொள்கிறேன். கடந்த மூன்று மாதங்களில் அவசரகாலச் சட்டத்தின் கீழ் அநியாயமாக கைது செய்யப்பட்ட அல்லது ஒடுக்கப்பட்ட மக்கள் இருந்தால், தயவுசெய்து அவர்களைப் பற்றிய தகவல்களை வழங்குங்கள்.

கடந்த மூன்று மாதங்களாக அவசரகால சட்டம் அமுலில்தான் உள்ளது. இந்த காலப்பகுதியில் அரசாங்கத்துக்கு  எதிராக பல போராட்டங்கள், எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்புடனும் சில போராட்டங்கள் இடம்பெற்றன. 

ஜனாதிபதி, சபாநாயகர் உட்பட அரசாங்கத்தின் பிரதான தரப்பினர் மீது மோசமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. சமூக வலைத்தளங்களில் பல விமர்சனங்கள். ஆனால் எவருக்கு  எதிராகவும் அவசரகால சட்டம் பயன்படுத்தப்படவில்லை. ஏனெனில் கருத்து வெளிப்பாடு மற்றும்  பேச்சு சுதந்திரம் ஜனநாயக உரிமைகளாகும். அவற்றை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு.

நாங்கள் எதிர்க்கட்சியில் இருக்கும்போது அவசரகால சட்டத்துக்கு எதிராக போராடினோம். ஒவ்வொரு முறையும் போராட்டங்களில் ஈடுபடும் போது அவசரகால சட்டத்தால் இடம்பெற்ற அடக்குமுறை மற்றும் கைதுகளை ஆதாரமாக குறிப்பிட்டோம். 

ஆகவே இந்த காலப்பகுதியில் அவசரகால சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டிருந்தால் எதிர்க்கட்சியினர் அவற்றை குறிப்பிடவேண்டும். அப்போது அந்த தவறையும் எம்மால் திருத்திக் கொள்ள முடியும்.

டித்வா புயல் தாக்கத்தால் ஏற்பட்ட  பேரிடர் சூழ்நிலைக்குப் பிறகு மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கும் உள்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் அவசரகாலச் சட்டம் அவசியம். வீதிகள் மற்றும் பாடசாலை அமைப்புகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை தடையின்றி  பராமரிக்க இந்த சட்டப் பின்னணி மிகவும் அவசியம்.

பேரிடரால் பாதிக்கப்பட்ட போக்குவரத்து அமைப்பு  மற்றும் பாடசாலை  கட்டடங்களை அவற்றின் முந்தைய நிலைக்கு மீட்டெடுப்பதற்குப் பதிலாக, எதிர்கால பேரிடர்களுக்கு அவை மீள்தன்மை கொண்டதாக இருக்கும் வகையில் அவற்றை அறிவியல் முறையின்படி புதுப்பிக்க முப்படைகளைப் பயன்படுத்த வேண்டும். அதனால்தான் நாங்கள் அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்துகிறோம்.

பேரிடர் நிவாரணம் மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஜனாதிபதி ஒரு சிறப்பு செயலணியை நியமித்துள்ளார். 

மேலும் இந்த மாதம் அந்த அறிக்கையை பெற்றுக்கொள்வோம். அதன்படி, நாட்டின் புனரமைப்பு நடவடிக்கைகள் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட காலத்திற்கு முறையாக மேற்கொள்ளப்படுகின்றன.

நிவாரண முகாம்களில் இன்னும் தங்கியுள்ள மக்கள் தொடர்பில் ஆராய்ந்து விரைவில் அவர்களை மீள்குடியேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசியல் இலாபங்களுக்காக 'அடக்குமுறை' என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல், பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தை ஆதரிக்குமாறு  எதிர்க்கட்சியிடம் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்தாலும்...

2026-04-16 15:49:12
news-image

புத்தாண்டு காலப்பகுதியில் மாத்திரம் 42 விபத்துகளில்...

2026-04-16 22:09:21
news-image

இந்த ஆண்டுக்குள் மாகாணசபைத் தேர்தல் ?...

2026-04-16 15:42:25
news-image

நவீன கால விகடகவி சஜித்தை வைத்து...

2026-04-16 15:29:04
news-image

அதிகளவு கரும்புகையை வெளியேற்றும் வாகனங்கள் தொடர்பில்...

2026-04-16 18:42:17
news-image

மத்திய கிழக்கு போர்ச்சூழலில் நாளை நாட்டுக்கு...

2026-04-16 17:46:54
news-image

வாவியில் நீராடிய இருவர் நீரில் மூழ்கி...

2026-04-16 17:43:42
news-image

பெருமளவான போதைப்பொருளுடன் தெற்கு கடலில் மீன்பிடிப்...

2026-04-16 17:21:19
news-image

வாகன இலக்கத் தகடு விதிமுறை மீறல்...

2026-04-16 17:01:38
news-image

வெடுக்குநாறி மலை தமிழர்களின் பூர்வீக நிலம்...

2026-04-16 16:50:37
news-image

ஆட்பதிவுத் திணைக்கள சேவைகள் நாளை இடைநிறுத்தம்!

2026-04-16 16:36:45
news-image

நாடு பாரிய வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது...

2026-04-16 16:08:09