ஓ பட்டர்ஃபிளை - திரைப்பட விமர்சனம்

06 Mar, 2026 | 03:45 PM
image

தயாரிப்பு : ஆண்ட்ஹில் சினிமா & பலாம்புர் டாக்கீஸ்

நடிகர்கள் : நிவேதிதா சதீஷ், சிபி சந்திரன், நாசர், லட்சுமி பிரியா சந்திரமௌலி, கீதா கைலாசம், அதுல் மற்றும் பலர்.

இயக்கம் : விஜய் ரங்கநாதன்

மதிப்பீடு : 2.5/5

'ஓ பட்டர்ஃபிளை' திரைப்படம் உறவு சார்ந்த உளவியல் சிக்கல்களையும், இயற்கையின் புதிரான புரிந்து கொள்ள இயலாத தத்துவத்தையும் பேசுகிறது. இப்படத்தின் உருவாக்கத்திற்கு முன்னர் முன்மாதிரியான எந்த தமிழ் படைப்புகளும் இல்லை என இயக்குநர் கூறியதால் படத்தைக் காண வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. இது தமிழ் சினிமாவிற்கு புதிய வரவா? இல்லையா? என்பது குறித்து தொடர்ந்து காண்போம்.

திருமணமாகி குறுகிய காலத்திற்குள் கணவனை இழந்த கௌரி ( நிவேதிதா சதீஷ்) மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள இயலாத அளவிற்கு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். உளவியல் சிகிச்சையை பெற்று வரும் இவரை இயல்பானவளாக மாற்றுவதற்கு துறவறம் பூண்ட அவரது சகோதரி ரஞ்சனி ( லட்சுமி பிரியா சந்திர மௌலி) முயற்சி செய்கிறார்.

வாழ்க்கையைப் பற்றிய உண்மையை கௌரிக்கு எடுத்துரைக்கும் ரஞ்சனியின் முயற்சி வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் கதை.

கௌரி கல்லூரியில் உயர்கல்வி கற்கும் போது அதே கல்லூரியில் படிக்கும் சூரி @ சூர்யா குமரவேலை ( சிபி சந்திரன்) காதலிக்கிறார். ஆனால் சூரி கௌரியின் உண்மையான அன்பை புரிந்து கொள்ளாமல், காவ்யா என்ற பெண்ணையும் காதலிக்கிறார். இதை தெரிந்து கொண்ட கௌரி,  சூரியை தவிர்க்கிறார். அத்துடன் அர்ஜுன் ( அதுல்) எனும் அதே கல்லூரியில் பயின்றவரை திருமணம் செய்து கொள்கிறார்.

திருமணமான தருணத்தில் இருந்து தன் கடந்த காலத்தை பற்றி கணவனான அர்ஜுனுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார். ஆனால் அர்ஜுன் தன் நிகழ்கால சிக்கல்களை எதிர்கொள்வதில் தொடர்ந்து தடுமாறுகிறார். இதுபோன்ற தருணத்தில் கணவன் அர்ஜுனை மலை வாசஸ்தலத்திற்கு அழைத்து செல்கிறார். அங்கு எதிர்பாராத விதமாக சூரியும் வருகை தருகிறார். அதற்கு பின் அங்கு நடந்தது என்ன? அவை திட்டமிட்ட நிகழ்வா? இயற்கையின் விளையாட்டா?  என்பதை விவரிக்கிறது.

திரைக்கதையில் கதாபாத்திரத்தை வடிவமைத்திருக்கும் நேர்த்தியில் கவனம் பெறும் இயக்குநர்..

சில தத்துவங்களை பேச்சு மொழியாக கேட்பதற்கும், எழுத்து மொழியாக வாசிப்பதற்கும் எளிதாக இருக்கும். ஆனால் அதனை திரை மொழியில் காட்சி மொழியாக சொல்வதற்கு தனித்துவமான ஒப்பீடுடன் கூடிய திரை மொழி தெரிந்திருக்க வேண்டும். அதில் வல்லவராக திகழும் இயக்குநர்..

உரையாடல்களில் தனித்துவத்தை வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கும் இயக்குநர்...

அதனை படிக்காத கடைக்கோடி பாமர ரசிகர்களும் புரிந்து கொள்ளும் வகையில் திரைக்கதையை எளிமைப்படுத்தி விவரிக்காதது மட்டும்தான் குறை.

அதீத சுதந்திரமும், அற்ப ஆயுளும் கொண்ட வண்ணத்துப்பூச்சியை... எம்முடைய உளவியல் சிக்கல்களுக்கான  தீர்வுக்குரிய குறியீடாக திரையில் உணர்த்தி இருப்பது கவனம் ஈர்க்கிறது. இந்த ஒரு விடயத்திற்காகவே இயக்குநரை தாராளமாக பாராட்டலாம்.

அடர்த்தியும் வீரியமும் அதிகமுள்ள கௌரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை நிவேதிதா சதீசுக்கு அனுபவம் குறைவு என்றாலும்... கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தன்னுடைய முழு திறமையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதுல்.. நடிப்பில் விஜய் சேதுபதியையும், தனுஷையும் கலந்து அளவாக நடித்து கவனம் ஈர்க்கிறார்.

சூர்யா குமரவேல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் சிபி சந்திரன் ஆண்மையான தோற்றத்தில் கம்பீரமாக அந்த கதாபாத்திரத்தை கையாண்டு ரசிகர்களை குறிப்பாக பெண் ரசிகைகளை கவர்கிறார்.

சகாயம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாசர் இதுவரை அவர் நடித்திராத வேடம் என்பதால் பல தருணங்களில் நுட்பமான உணர்வை வெளிப்படுத்தி அனுபவம் மிக்க நடிகர் என்பதை நிரூபிக்கிறார்.

இயற்கையின் ரகசியங்களை ஆன்மீகவாதிகளால் தான் மக்களுக்கு உணர்த்த இயலும் என்ற வகையில் உருவாக்கப்பட்ட ரஞ்சனி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லட்சுமி பிரியா சந்திர மௌலியும் தன் அனுபவம் மிக்க நடிப்பால் அந்த கதாபாத்திரத்தை ரசிகர்களின் மனதில் பதிய வைக்கிறார்.

அனைத்து சிக்கல்களுக்கும் பரிகாரத்தை முன்மொழியும் சோதிடர்களை சுய பரிசோதனை செய்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் சோடா புட்டி கிழவியின் கதாபாத்திரமும் சிறப்பு.

பின்னணி இசையை விட.. ஒளிப்பதிவை விட.. படத்தொகுப்பு இயக்குநருக்கு மிகச்சிறந்த பலம்.

ஓ பட்டர்ஃபிளை-  சுகமான புத்தாடை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்