நியூஸிலாந்தை உலகக் கிண்ணப் இறுதிப் போட்டியில் சந்திக்கப்போவது இந்தியாவா?, இங்கிலாந்தா? இன்று அரை இறுதிப் போட்டி

Published By: Vishnu

05 Mar, 2026 | 06:38 PM
image

(நெவில் அன்தனி)

பத்தாவது ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை எதிர்த்தாடப் போகும் அணி எது என்பதைத் தீர்மானிக்கும் நடப்பு சம்பியன் இந்தியாவுக்கும் முன்னாள் சம்பியன் இங்கிலாந்துக்கும்  இடையிலான இரண்டாவது அரை இறுதிப் போட்டி மும்பை வான்கேட் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (05) இரவு மின்னொளியில் நடைபெறவுள்ளது.

இந்த இரண்டு அணிகளும் மூன்றாவது தொடர்ச்சியான தடவையாக ரி20 உலகக் கிண்ண அரை இறுதியில் ஒன்றையொன்று எதிர்த்தாடுகின்றமை விசேட அம்சமாகும்.

இதில் இன்னுமொரு விசேடம் என்னவென்றால் இந்த இரண்டு அணிகளுக்கு இடையில் நடைபெற்ற அரை இறுதி போட்டிகளில் வெற்றிபெற்ற அணியே கடைசியில் ரி20 உலக சம்பியனாகி இருந்தது.

2022இல் இந்தியாவை இங்கிலாந்தும், 2024இல் இங்கிலாந்தை இந்தியாவும்  அரை இறுதியில்  வெற்றிகொண்டிருந்தன.

இதன் காரணமாக இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி அந்த வரலாற்றை மீண்டும் நிலைநிறுத்தும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இன்றைய போட்டியில் இரண்டு அணிகளும் ஒன்றையொன்று வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேற முயற்சிப்பதால் இந்தப் போட்டி பரபரப்பை ஏற்படுத்தி இரசிகர்களுக்கு பெரு விருந்தாக அமையவுள்ளது.

எவ்வாறாயினும் இந்தியா தனது சொந்த மண்ணில் சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொள்ள முயற்சிப்பதால் சிலவேளைகளில் அழுத்தத்தை எதிர்கொள்ளக்கூடும்.

முதல் சுற்றில் ஏ குழுவில் ஐக்கிய அமெரிக்காவை பெரும் தடுமாற்றத்துக்கு மத்தியில் வெற்றிகொண்ட  இந்தியா தொடர்ந்து நமிபியா, பரமவைரி பாகிஸ்தான், நெதர்லாந்து ஆகிய அணிகளை மிக இலகுவாக வெற்றிகொண்டு சுப்பர் 8 சுற்றில் குழு 1இல் விளையாடியது.

சுப்பர் 8 சுற்றில் ஆரம்பப் போட்டியில் தென் ஆபிரிக்காவிடம் தோல்வி அடைந்த இந்தியா, அடுத்த இரண்டு போட்டிகளில் ஸிம்பாப்வேயையும் மேற்கிந்தியத் தீவுகளையும் வெற்றிகொண்டு கடைசி அணியாக இன்றைய அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றுக்கொண்டது.

இந்திய தரப்பில் அணித் தலைவர் சூரியகுமார் யாதவ் (231 ஓட்டங்கள்), இஷான் கிஷான் (224), திலக் வர்மா (178), ஷிவம் டுபே (166), மூன்று போட்டிகளில் மாத்திரம் விளையாடிய சஞ்சு செம்சன் (143) ஆகியோர் துடுப்பாட்டத்திலும் ஹார்திக் பாண்டியா (172 ஓட்டங்கள், 6 விக்கெட்கள்) சகலதுறைகளிலும் வருண் சக்ரவர்த்தி (12 விக்கெட்கள்), ஜஸ்ப்ரிட் பும்ரா (9), அர்ஷ்தீப் சிங் (8), அக்சார் பட்டேல் (7) ஆகியோர் பந்துவீச்சிலும் திறமையாக செயற்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் இங்கிலாந்துடனான அரை இறுதியிலும் திறமையை வெளிப்படுத்தி தமது அணிக்கு வெற்றியீட்டிக்கொடுக்க முயற்சிப்பர் என நம்பப்படுகிறது.

மறுபுறத்தில் சி குழுவில் இடம்பெற்ற இங்கிலாந்து, இணை உறுப்பு நாடுகளான நேபாளம், ஸ்கொட்லாந்து, இத்தாலி ஆகியவற்றின் சிறு சவால்களுக்கு மத்தியில் வெற்றிபெற்றது. ஆனால், மேற்கிந்தியத் தீவுகளிடம் தோல்வி அடைந்தது. எனினும் குழுவில் 2ஆம் இடத்தைப் பெற்றதன் மூலம் சுப்பர் 8 சுற்றுக்கு இங்கிலாந்து முன்னேறியது.

சுப்பர் 8 சுற்றில் இலங்கையை இலகுவாகவும் பாகிஸ்தான், நியூஸிலாந்து ஆகிய அணிகளை கடும் சவாலுக்கு மத்தியிலும் வெற்றிகொண்டதன் மூலம் இங்கிலாந்து அரை இறுதிக்குள் நுழைந்தது.

இங்கலாந்து சார்பாக அணித் தலைவர் ஹெரி ப்றூக் (228 ஓட்டங்கள்), ஜேக்கப் பெத்தெல் (175), டொம் பென்டன் (138), ஃபில் சோல்ட் (125 ஆகியோர் துடுப்பாட்டத்திலும் வில் ஜெக்ஸ் (191 ஓட்டங்கள், 7 விக்கெட்கள்), சாம் கரன் (149 ஓட்டங்கள், 6 விக்கெட்கள்) ஆகியோர் சகலதுறைகளிலும் ஆதில் ராஷித் (11 விக்கெட்கள்), ஜொவ்ரா ஆச்சர் (10), லியாம் டோசன் (10), ஜெமி ஓவர்ட்டன் (9) ஆகியோர் பந்துவீச்சிலும் பிரகாசித்துள்ளனர்.

ஒட்டுமொத்தத்தில் இந்த இரண்டு அணி வீரர்களினதும் ஆற்றல்கள் கிட்டத்தட்ட சம அளவில் இருப்பதை அவதானிக்கலாம்.

இந்தியாவுக்கு உள்ள ஒரே ஒரு அனுகூலம் சொந்த மண்ணில் விளையாடுவதாகும்.

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் இந்த இரண்டு அணிகளும் சந்தித்துக்கொண்ட 5 போட்டிகளில் 3 - 2 என இந்தியா முன்னிலையில் இருக்கிறது.

அதேவேளை, சர்வதேச ரி20 கிரிக்கெட் அரங்கிலும் இந்தியா 17 - 12 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

இந்த பெறுபேறுகளின் பிரகாரம் இந்தியா பெரிய அளவில் இங்கிலாந்து மீது ஆதிக்கம் செலுத்தியுள்ளது என்று கூறமுடியாது.

இந்நிலையில், இன்றைய அரை இறுதிப் போட்டியில் எந்த அணி முற்றுமுழுதான திறமையை வெளிப்படுத்துகின்றதோ அந்த அணியே வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணிகள் (பெரும்பாலும்)

இந்தியா: அபிஷேக் ஷர்மா, சஞ்சு செம்சன், இஷான் கிஷான், சூரியகுமார் யாதவ் (தலைவர்), திலக் வர்மா, ஹார்திக் பாண்டியா, ஷிவம் டுபே, அக்சார் பட்டேல், அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்ப்ரிட் பும்ரா.

இங்கிலாந்து: ஃபில் சோல்ட், ஜொஸ் பட்லர், ஹெரி ப்றூக் (தலைவர்), ஜேக்கப் பெத்தெல், டொம் பென்டன், சாம் கரன், வில் ஜெக்ஸ், ரெஹான் அஹ்மத், லியாம் டோசன், ஜொவ்ரா ஆச்சர், ஆதில் ராஷித்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய ஒலிம்பிக் குழு தேர்தல்: ஜஸ்வர்...

2026-04-20 10:52:16
news-image

ஐசிசி அங்குரார்ப்பண மகளிர் சவால் கிண்ண...

2026-04-17 18:02:57
news-image

19 வயதுக்குட்பட்ட பெண்கள் மும்முனை ரி20...

2026-04-17 16:33:18
news-image

குவின்டன்  டி கொக் குவித்த அபார...

2026-04-17 05:47:10
news-image

பங்களாதேஷ் செல்லவுள்ள இலங்கை மகளிர் குழாம்...

2026-04-16 19:06:39
news-image

நியூஸிலாந்து ஏ அணியுடனான உத்தியோகப்பற்றற்ற டெஸ்டில்...

2026-04-16 18:55:58
news-image

இலங்கை விளையாட்டுத்துறையில் பெண்களுக்கு தேசிய ஒலிம்பிக்...

2026-04-16 16:27:53
news-image

பெங்களூருவின் பந்துவீச்சில் சரிந்தது லக்னோவ்; அணிகள்...

2026-04-15 23:47:23
news-image

108ஆவது அகில இங்கிலாந்து சிரேஷ்ட (மாஸ்டர்ஸ்)...

2026-04-15 17:22:54
news-image

ஒன்பது விஸ்டன் விருதுகளில் ஏழு விருதுகளை...

2026-04-15 16:39:56
news-image

உலக கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் வீரர்கள்...

2026-04-15 14:40:20
news-image

நூர் அஹ்மதின் துல்லிய பந்துவீச்சின் உதவியுடன்...

2026-04-15 00:09:03