(மா.உஷாநந்தினி)
(படப்பிடிப்பு - எஸ்.எம்.சுரேந்திரன்)
பசியால் வாடும் தன் குழந்தைகளுக்கு உணவளிக்க வழியின்றி, வறுமையால் வாடும் ஓர் ஏழைத் தாயின் கண்ணீர் நிரம்பிய வாழ்க்கையைக் கூறும் புராணக் கதையொன்றின் சிறு பகுதியை பரதநாட்டியத்தில் சோகரசம் ததும்ப வெளிப்படுத்தியிருந்தார், இந்தியாவின் முன்னணி பரதநாட்டியக் கலைஞரான கலாநிதி ராஜஸ்ரீ வாரியர்.
ராஜஸ்ரீ வாரியரின் பரதநாட்டிய நிகழ்வு, கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் சுவாமி விவேகானந்தர் கலாசார நிலையத்தில் பெப்ரவரி 26ஆம் திகதி நடைபெற்றது.
கேரளாவைச் சேர்ந்த பரதநாட்டியக் கலைஞரான ராஜஸ்ரீ வாரியர், நடன ஆசிரியர், இசைக் கலைஞர், கவிஞர், எழுத்தாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர். மலையாளக் கவிதைகளையும் நாட்டுப்புறக் கதைகளையும் பரதநாட்டியத்தில் இணைத்து நாட்டியக்கலை வடிவத்தில் புதிய பரிமாணங்களைக் கொண்டு வந்தவர்.
இவரது நாட்டியமானது “நாட்டியக் கலா மந்திர்” நடனப்பள்ளியின் ஸ்தாபக இயக்குநரும் பரதநாட்டியக் கலைஞருமான வாசுகி ஜெகதீஸ்வரன், கண்டிய நடனக் கலைஞர் உபேக்கா சித்ரசேனா உள்ளிட்ட கலைஞர்கள் மற்றும் கலையார்வலர்கள் முன்னிலையில் நிகழ்த்தப்பட்டது.

பரதநாட்டியத்தை ஒரு மொழியாக அணுகி, நடனத்தின் ஊடாக கதை கூறும் பாங்கை, தனக்கான தனித்துவமாக்கிக் கொண்ட ராஜஸ்ரீ வாரியர், இந்த நிகழ்வில், மூன்று படைப்புகளுக்கு நடனமாடியதோடு, அவற்றின் முக்கிய அம்சங்களையும் சபைக்கு விபரித்தார்.
முதலாவது நடனமாக “சாரதா அலாரிப்பு” அமைந்திருந்தது. இது, அவரது கற்பனையில் உருவாக்கப்பட்ட படைப்பு. சாரதா அலாரிப்பு என்றால் “இரவை வரவேற்பது” என்று பொருள். இந்த நடனம் கருப்பொருள் சார்ந்த ஒரு நாட்டியப் படைப்பாக ஆடப்பட்டது.
இரண்டாவதாக, சிவ ஸ்துதி நடனம் ஆடப்பட்டது. முதலில் சிவ தத்துவங்கள், சிவனின் பல்வேறு வடிவங்களும் காண்பிக்கப்பட்டது.
“சவம்” நிலையிலிருந்து “சிவன்” எப்படி உருவாகிறார், சங்கரராக எப்படி மாறுகிறார் என்பதை அவரது நாட்டியத்தினூடாக புரிந்துகொள்ள முடிந்தது. ஜீமுதவாகனன், திரிபுராந்தகன், அர்த்தநாரீஸ்வரர் போன்ற சிவ தத்துவ வடிவங்களும் வெளிப்பட்டன.
“சிவன் கையில் உள்ள மான், நமது அலைபாயும் மனதைக் குறிக்கிறது. அந்த மனதைக் கட்டுப்படுத்தி, சிவன் தன் கையில் வைத்திருப்பதாக நாம் கருதலாம். ஒவ்வொருவரும் தங்களது மனதை கட்டுப்படுத்த வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது...” என தனது படைப்பின் அம்சத்தை நிகழ்வு வேளையில் விபரித்த ராஜஸ்ரீ வாரியர், இந்த தத்துவத்தின் பின்னணியில் உள்ள கதையொன்றையும் நாட்டியத்தில் இணைத்திருந்தார்.
அத்துடன், தனது நாட்டியத்தில் ஓரங்கமாக காண்பிக்கப்பட்ட திரிபுராந்தகரின் சிறப்பைப் பற்றி சபைக்கு விளக்கியவர், நமக்குள் இருக்கும் மூன்று அகங்காரங்களைப் பற்றிக் கூறினார்.
“நான்" என்ற அகங்காரம், “எனது" என்ற எண்ணம், “என்னுடையது அல்லாதது" என்கிற மற்றொன்றிலிருந்து தன்னை வேறுபடுத்திப் பார்க்கும் பிரிவினை ஆகியவற்றை சுட்டிக்காட்டி, அவர் ஆடிய நடனம், இந்த அகங்காரங்கள் மனிதர்களின் இயல்புகளோடு பொருந்திப் போவதை உணர்த்தியது. அதற்காக, அவர், தனது முகபாவனையிலும் உடல்மொழியிலும் கொண்டுவந்த கர்வம், மமதை சபையோரை ஈரத்தது.
அதனோடு இணைந்தவாறு “ஆடும் அழகைப் பாரடி...” என்று ஒலித்த தமிழ் கீர்த்தனைக்கு நடன அமைப்பினை உருவாக்கியளித்த ராஜஸ்ரீ வாரியர், துர்கா ராகத்தில் அமைந்த அந்தக் கீர்த்தனைக்கு இசையமைத்தவர் யார் என்ற விபரம் தெரியாது என்றும் இந்தக் கீர்த்தனையை தனக்கு அறிமுகப்படுத்தியவர் இந்தியாவின் முன்னணி பரதநாட்டியக் கலைஞர் சி.வி.சந்திரசேகரரே என்றும் சபையில் கூறினார்.
இக்கீர்த்தனைக்கு நடராஜரின் திருநடனத்தை அவர் அழகுற காண்பித்தார் . கைகளை கடலலை போல் வளைத்து ஆடியதும், குழந்தையை சீராட்டுவது போன்ற பாவனையும், விறுவிறுப்பான மிருதங்க தாள ஓட்டத்துக்குக் கொஞ்சம் கூட குறையாத விரல்களின் அசைவும், பாதங்களை தட்டித் தட்டி எழுப்பிய தாளமும் ரசனைக்கு சரியான விருந்துதான்.

நிறைவு நடனமாக, சதாசிவ பிரம்மேந்திரரால் சமஸ்கிருத மொழியில் இயற்றப்பட்ட “மானச சஞ்சரரே..." என்ற பெரும்பாலானவர்களுக்கு பரிச்சயமான கீர்த்தனைக்கு “குசேல விருத்தம்” செய்து காட்டினார்.
குசேலர், கிருஷ்ணர் கதையை அடிப்படையாகக் கொண்ட இந்த நாட்டியப் படைப்பு, குசேலரின் மனைவியின் பார்வையாக அமையப்பெற்றது.
குடும்ப வறுமை காரணமாக குசேலரை விட அவரது மனைவியும் பிள்ளைகளுமே அதிக துன்பத்தை எதிர்கொண்டவர்கள். கணவரான குசேலர் எந்நேரமும் கிருஷ்ணரை நினைத்து தியானத்தில் இருப்பவர். அவர் குடும்பத்தின் மீதோ குடும்பத்தை ஆட்டிப் படைக்கும் வறுமையின் மீதோ வறுமையால் வாடும் மனைவி, பிள்ளைகளின் மீது கவனம் செலுத்துவதில்லை. பசியால் வாடும் குழந்தைகளைக் கண்டு சதா கண்ணீர் வடிப்பவள் மனைவியே. அந்த வகையில், வறுமையின் கொடுமையை அதிகமாக அனுபவிக்கும் ஓர் ஏழைத் தாயின் கண்ணீரை தனது நாட்டியத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக காட்டிய விதத்தால், சபையோர் முகங்களிலும் சோக ரேகைகள் படர்ந்ததைப் பார்க்க முடிந்தது.

நடன நிகழ்வின்போது ராஜஸ்ரீ வாரியர் வீரகேசரிக்கு வழங்கிய பேட்டியில்,
“பொதுவாக, நான் நேரடி அணிசேர் வாத்தியக் குழுவினர் (Live Orchestra) இணைந்த மேடையில் ஆடுவதே வழக்கம். அதற்குக் காரணம், நான் நிறைய “மனோதர்மம்" செய்வேன். “மனோதர்மம்" என்றால் அந்த நேரத்தில் தோன்றக்கூடிய புதிய யோசனைகளைச் செயற்படுத்துவது.
நேரடி இசையின்போது சொற்கள் மற்றும் பாவங்களில் நிறைய புதிய மாற்றங்களைச் செய்யமுடியும். இசைக்கருவிகள் நேரடியாக இசைக்கப்படும்போது நாம் நாட்டியத்தில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், இது பதிவு செய்யப்பட்ட இசை என்பதால், எனது கைகள் கயிற்றால் கட்டப்பட்டிருப்பதைப் போல் உணர்கிறேன். சூழ்நிலை அப்படி!” என்று கூறியிருந்தார்.
அவரது கருத்துப்படி, அணிசேர் கலைஞர்களின் நேரடி வாத்தியப் பங்களிப்பின்றி, பதிவு செய்யப்பட்ட இசையுடனான பாடல்கள் பின்னணியில் ஒலிக்க, ராஜஸ்ரீ வாரியரின் நாட்டியம் நிகழ்த்தப்பட்டபோதிலும், கருப்பொருள் வெளிப்பாடு, உணர்வு ரீதியான எந்தவொரு அம்சத்திலும் குறை காணமுடியாதளவு திருப்தி, பார்வையாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும்!



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM