பேராசிரியர் அங்குரன் தத்தா தொகுக்கப்பட்டு, கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தின் கலாசார பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார மையத்தால் ஜனவரி 2026இல் வெளியிடப்பட்ட ‘இலங்கையில் இராமாயணம்’ என்ற இந்த நூல் இலட்சியமிக்க, பன்முகத்தன்மை கொண்ட படைப்பாகும்.
இந்நூல் இலங்கைத் தீவை இராவணனின் புராணக்கதை நிலமாக மட்டும் பார்க்காமல், காவிய நினைவுகளின் வாழும் ஆவணமாகச் சித்தரிக்கிறது. இராமாயணம் சுற்றுலா, மதம் அல்லது தேசியவாத நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் இக்காலத்தில், இந்த நூல் மிகவும் நிதானமாக, பல நூற்றாண்டுகளாக இலங்கை எவ்வாறு இராமாயணக் காவியத்தை ஏற்றுக்கொண்டது, உள்ளூர்மயமாக்கியது மற்றும் தனது நிலப்பரப்புடன் தொடர்புபடுத்தியது என்பதை ஆராய்வதாக உள்ளது.
இதன் விளைவாக, இந்த நூல் படைப்பானது, ஒரே நேரத்தில் கல்விசார் ஆய்வு, கலாசார ஆவணப்படுத்தல், கதைசார் வரைபடவியல் எனப்பல தளங்களில் பிரதிபலிப்புக்களைச் செய்துள்ளது.
இந்நூலின் கருத்தியல் பின்னணி எளிமையானது, அதேசமயம் ஆழமானது. இராமாயணம் என்பது வால்மீகி உரைக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டவொரு நிலையான வேத நூல் அல்ல, மாறாக அதுபுவியியல், சடங்கு முறைகள், இலக்கியத் தழுவல்கள் மற்றும் கலைக்கற்பனைகள் மூலம் பரிணமிக்கும் நாகரிகத் தொடர்ச்சி என்பதை தர்க்க ரீதியாக வெளிப்படுத்துகிறது.
எனவே, இலங்கை என்பது இந்தியக் காவியம் அரங்கேறிய மேடை மட்டுமல்ல, அது அந்தக் காவியத்தின் நீட்சியின் பங்கேற்பாளராகவும் உள்ளது என்ற அணுகுமுறை மிகவும் முக்கியமானது, ஏனெனில் குறித்த விடயமானது ஒரு வரலாற்றுக் காவியத்தை உரைசார்ந்த அதிகாரத்திலிருந்து கலாசாரப் பரவல் என்ற நிலைக்கு மாற்றுகிறது.
நூலில் நான்கு பகுப்பாய்வுக் கட்டுரைகளைத் தொடர்ந்து, இலங்கையில் உள்ள சுமார் ஐம்பது இடங்களை உள்ளடக்கிய ‘இராமாயண பாரம்பரியப் பாதை’ பற்றிய விரிவான வழிகாட்டியுடன் நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வாசகர்களை முதலில் இராமாயண மரபுகளின் தத்துவார்த்த மற்றும் வரலாற்றுச் சான்றுகளைப் புரிந்துகொள்ளச் செய்து, பின்னர் அந்த மரபுகள் நிலப்பரப்பில் எவ்வாறு பதிந்துள்ளன என்பதை உணர வைக்கிறது. கல்விசார் ஆய்வை அனுபவபூர்வமான ஈடுபாட்டுடன் இணைக்கும் வகையில் இந்த வடிவமைப்பு அமைந்துள்ளது.
முதல் தொகுப்புக் கட்டுரைகள் வரலாற்று மற்றும் உரைசார் அடிப்படைகளை கொண்டிருக்கின்றன. கல்வெட்டுச் சான்றுகள், உள்ளுர் மரபுகள், கோயில் வரலாறுகள் மற்றும் இலக்கியக் குறிப்புகளை ஒன்றிணைப்பதன் மூலம், இராவணன், சீதை, இராமன் மற்றும் விபீஷணன் போன்ற ஆளுமைகள் இலங்கையின் கலாசாரத்துக்குள் எவ்வாறு நுழைந்தனர் என்பது ஆராயப்பட்டுள்ளது.
நூலில் காவியத்துடன் தொடர்புடைய பெயர்களைக் கொண்ட பண்டைய கல்வெட்டுகள் பற்றிய விவாதம் எச்சரிக்கையுடன் கையாளப்பட்டுள்ளது. இதுவொரு வரலாற்று ஆதாரத்திற்கான வெற்றிக் கூச்சலாக அமையாமல், பெயர்கள், சன்னதிகள் மற்றும் சடங்குகள் எவ்வாறு புராணக்கதைக்கும் வாழும் இடத்திற்கும் இடையே தொடர்ச்சியை உருவாக்குகின்றன என்பதில் அதிகமான கவனம் செலுத்துகிறது.
இலங்கையின் பன்முக மதச் சூழலில் இந்நூல் காட்டியுள்ள அக்கறை குறிப்பாகப் பாராட்டத்தக்கது. இராமாயணம் இந்து மதக் கட்டமைப்புக்குள் மட்டும் பார்க்கப்படாமல், பௌத்த மற்றும் தமிழ் மரபுகளுடனான அதன் தொடர்பிலும் ஆராயப்படுகிறது. பாலி நூல்கள் மற்றும் சிங்கள இலக்கியத் தழுவல்களை உள்ளடக்கியிருப்பது, இந்தக் இராமாயணக் காவியம் குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டுமே சொந்தமானது என்ற குறுகிய எண்ணத்தை மாற்றுகிறது.
இத்தொகுப்பின் மிகச்சிறந்த அறிவுசார் பங்களிப்புகளில் ஒன்று, இந்தக் காவியத்தை ‘நினைவகம், வரைபடம் மற்றும் புவிப் பதிவு’ என்று வரையறுப்பதாகும். இந்த உருவாக்கம் தொன்மத்திற்கும் வரலாற்றிற்கும் இடையிலான வேறுபாட்டை வாசகர்களிடையே மீண்டும் சிந்திக்கச் செய்கிறது.
இராமாயண நிகழ்வுகள் ‘உண்மையிலேயே நடந்ததா’ என்று கேட்பதை விட, நிலப்பரப்புகளே எவ்வாறு நினைவுச் சின்னங்களாக மாறுகின்றன என்பதை இந்நூல் ஆராய்கிறது. அதற்காக இலங்கையின் மலைகள், குகைகள், ஆறுகள் மற்றும் கோயில்கள் கதையின் நங்கூரங்களாகச் செயற்படுகின்றன.
புத்தகத்தின் இரண்டாம் பாதி—இராமாயண பாரம்பரியப் பாதை—அதன் தனித்துவமான அம்சமாகும். காவிய நிகழ்வுகளின் வரிசைப்படி காலவரிசையாக ஒழுங்கமைக்கப்பட்ட இப்பாதை, இலங்கையை கதை நிலப்பரப்பாக மாற்றுகிறது.
இராவணனின் இறையாண்மை மற்றும் தொழில்நுட்பக் கற்பனையுடன் தொடர்புடைய இடங்களிலிருந்து தொடங்கி, சீதையின் சிறைப்பிடிப்பு, அனுமானின் தேடல், இறுதியாக நடந்த போர் மற்றும் பிராயச்சித்தச் செயல்கள் வரை, புவியியல் பயணம் காவியத்தின் போக்கைப் பிரதிபலிக்கிறது. இந்த வரிசைமுறை வழிகாட்டியை வெறும் இடங்களின் பட்டியலாக மாற்றாமல், ஒரு தொடர்ச்சியான அனுபவப் பாதையாக மாற்றியுள்ளமை சிறப்பானதாகும்.
சீதையுடன் தொடர்புடைய இடங்களின் சித்தரிப்பு மிகவும் உணர்ச்சிகரமானது. அவரது சிறைப்பிடிப்பு, பிரார்த்தனை மற்றும் சகிப்புத்தன்மையைக் வெளிப்படுத்தப்படும் இடங்கள் வாய்மொழி மரபுகள் மற்றும் உள்ளுர் சடங்கு முறைகள் மூலம் விளக்கப்பட்டுள்ளன.
தாவரவியல் மற்றும் சூழலியல் சூழல்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், கோயில் கட்டடக்கலையில் மட்டுமல்ல, இயற்கையான நிலப்பரப்புகளிலும் நிலைத்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது.
அதேபோல், அனுமானின் பயணத்துடன் தொடர்புடைய இடங்கள் தெய்வீகத் தலையீட்டின் அடையாளங்களாக விளக்கப்பட்டு, காவியத்தின் தார்மீக பரிமாணங்களை விரிவுபடுத்துகின்றன.
மத்திய மற்றும் தெற்கு இலங்கையில் போர் நடைபெற்ற இடங்களாகக் கருதப்படும் இடங்கள் உள்ளுர் மரபுகளின் அடிப்படையில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. ‘ராம் சேது’ பற்றிப் பேசும்போது, அதுகுறியீட்டுப் பாலமாக நுணுக்கமான முறையில் கையாளப்பட்டுள்ளது. புவியியல் உண்மைத்தன்மை பற்றிய விவாதங்களுக்குள் செல்லாமல், அப்பாலத்தின் கற்பனை, பக்தி ஆகியவற்றின் அடிப்படையில் நூல் கவனம் செலுத்தியுள்ளது.
போருக்குப் பிந்தைய நிகழ்வுகளின் மீதான ஆய்வும் சமமான ஈடுபாட்டைக் கொண்டுள்ளது. இராமனின் பிராயச்சித்தச் செயல்கள் மற்றும் விபீஷணனின் முடிசூட்டு விழாவுடன் தொடர்புடைய கோயில்கள் காவியத்தின் தார்மீகத் தீர்வின் பகுதியாக முன்வைக்கப்படுகின்றன. இதுபோரின் வெற்றியிலிருந்து தார்மீகப் பொறுப்பை நோக்கி கவனத்தை மாற்றுகிறது. இதன் மூலம், இராமாயணத்தை ஒரு மீட்டெடுக்கும் தர்மமாக இந்நூல் முன்மொழிகிறது.
இந்நூலின் காட்சிப்பரிமாணம் தனிப்பாராட்டுக்குரியது. மூத்த இலங்கை கலைஞர்கள் மற்றும் இளைய தலைமுறையினரின் கலைப்படைப்புகள் உரைசார் பகுப்பாய்விற்கு வலுசேர்க்கின்றன. பாரம்பரியமாக பௌத்த கதைகளுடன் தொடர்புடைய ‘கண்டி முறை சுவர் ஓவிய பாணியை’ இராமாயணக் கருப்பொருள்களுக்குப் பயன்படுத்தியிருப்பது, புத்தகம் முன்னிலைப்படுத்த விரும்பும் கலாசாரப் பரிமாற்றத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
பதிப்பாசிரியர் பார்வையில், இந்தத் தொகுதி அறிவுசார் தெளிவுடன் உள்ளது. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பரந்த நாகரிக உரையாடலுக்குள் கட்டுரைகளும் பாரம்பரியப் பாதையும் எவ்வாறு பொருந்துகின்றன என்பதை முன்னுரையும் முடிவுரையும் சிறப்பாக விளக்குகின்றன. தூதரக நிறுவனங்களின் ஆதரவுடன் வெளிவந்தாலும், இந்தப் புத்தகம் கல்விசார் தொனியை வெளிப்படுத்தியுள்ளது.
சுருக்கமாகச் சொன்னால், ‘இலங்கையில் இராமாயணம்’ தெற்காசிய காவிய ஆய்வுகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பாகும். இராமாயணத்தை வெறும் கண்மூடித்தனமான நம்பிக்கையாகவோ அல்லது முழுமையான சந்தேகமாகவோ பார்க்காமல், அதையொரு தொடர்தேச்சியான கலாசார நிகழ்வாக—இலக்கிய உரை, புனிதக்கதை, புவியியல் நினைவகம் மற்றும் கலைத்தூண்டுதல் என்றவாறு அணுகுவதே இந்நூலின் மிகப்பெரிய வெற்றியாகும்.
ஆய்வாளர்களுக்கு இதுவொரு சிறந்த முன்மாதிரி நூலாகும்; யாத்ரீகர்கள் மற்றும் பயணிகளுக்கு இதுவொரு பயணத்தை ஆழமான தேடலாக மாற்றுகிறது. கலைஞர்களுக்கு இது காவியத்தின் முடிவில்லாத கற்பனை ஆற்றலை உறுதிப்படுத்துகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, இது இலங்கையை எதிரியின் தேசமாகப் பார்க்காமல், தொன்மம், நினைவகம் மற்றும் தொடர் நிலப்பரப்பு ஆகியவற்றைக் கொண்டது என்றவாறு வாசகர்களை சிந்திக்கச் செய்கிறது.
பாரம்பரிய, அடையாளம் குறித்த துருவமுனைப்பட்ட விவாதங்கள் நடக்கும் தற்போதைய சூழலில், இந்நூல் ஆக்கபூர்வமான அணுகுமுறையை முன்மாதிரியாகக் காட்டுகிறது. நிலப்பரப்புகள் எவ்வாறு நினைவில் கொள்கின்றன. கலாசாரங்கள் எவ்வாறு மரபுவழிக் கதைகளைக் கையாளுகின்றன என்பதை இந்நூல் வெளிப்படுத்தியுள்ளது.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM