(நெவில் அன்தனி)
அஹமதாபாத் நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் கணிசமான மொத்த எண்ணிக்கைகள் பெறப்பட்ட ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண சுப்பர் 8 குழு 1க்கான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை 9 விக்கெட்களால் தென் ஆபிரிக்கா இலகுவாக வெற்றிகொண்டது.

இந்த வெற்றியுடன் தென் ஆபிரிக்கா அரை இறுதி வாயிலை அண்மித்துள்ளது. இன்றைய போட்டியில் அணித் தலைவர் ஏய்டன் மார்க்ராம், குவின்டன் டி கொக், ரெயான் ரிக்ல்டன் ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டங்கள் தென் ஆபிரிக்காவின் இலகுவான வெற்றிக்கு வழிவகுத்தன.

இந்தப் போட்டி முடிவுடன் தென் ஆபிரிக்கா மாத்திரமே பத்தாவது ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் தோல்வி அடையாத அணியாகத் திகழ்கிறது.
அதேவேளை, இந்த சுற்றுப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் சந்தித்த முதலாவது தோல்வி இதுவாகும்.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது.
ப்றெண்டன் கிங் (21), ஷாய் ஹோப் (16) ஆகிய இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் விக்கெட்கள் அடிக்கடி வீழ்ந்த வண்ணம் இருந்தது.
11ஆவது ஓவரில் 83 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களை இழந்து மேற்கிந்தியத் தீவுகள் இக்கட்டான நிலையிலிருந்தது.
எனினும் துணிச்சலுடன் துடுப்பெடுத்தாடிய ஜேசன் ஹோல்டர், ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகிய இருவரும் 8ஆவது விக்கெட்டில் 57 பந்துகளில் 89 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை வீழ்ச்சியிலிருந்து மீட்டு நல்ல நிலையில் இட்டனர்.


ரொமாரியோ ஷெப்பர்ட் 37 பந்தகளில் 3 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 52 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
ஜேசன் ஹோல்டர் 31 பந்துகளில் 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 49 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் லுங்கி எங்கிடி 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கெகிசோ ரபடா 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கோபின் பொஷ் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
177 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 16.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 177 ஓட்டங்களைக் குவித்து அபார வெற்றியீட்டியது.
தென் ஆபிரிக்காவின் முதல் மூன்று துடுப்பாட்ட வீரர்கள் சிறந்த திட்டமிடலுடன் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி வெற்றியை இலகுவாக்கினர்.
ஆரம்ப விக்கெட்டில் குவின்டன் டி கொக்குடன் 48 பந்துகளில் 95 ஓட்டங்களைப் பகிர்ந்த ஏய்டன் மார்க்ராம், பிரிக்கப்படாத இரண்டாவது விக்கெட்டில் ரெயான் ரிக்ல்டனுடன் 49 பந்துகளில் 82 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
மார்க்ராம் 46 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 82 ஓட்டங்களையும் குவின்டன் டி கொக் 24 பந்துகளில் 4 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 47 ஓட்டங்களையும் ரெயான் ரிக்ல்டன் 28 பந்துகளில் 4 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 45 ஓட்டங்களையும் குவித்தனர்.
ஆட்டநாயகன்: ஏய்டன் மார்க்ராம்















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM