வட கொரியா சர்­வ­தேச ரீதி­யான கடும் அழுத்­தத்­தையும் எச்­ச­ரிக்­கை­க­ளை யும் மீறி தனது ஆறா­வது அணு­சக்திப் பரி­சோ­த­னையை நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை  மேற்­கொண்­டுள்­ளது.

 நீண்ட தூரம் பய­ணித்து கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கக் கூடிய வல்­ல­மையைக் கொண்ட ஏவு­க­ணையில் பொருத்­தக்­கூ­டிய அணு ஆயு­த­மொன்றை   வெற்­றி­க­ர­மாக  பரி­சோ­தித்­துள்­ள­தாக  வட கொரியா நேற்று  அறி­வித்­தை­ய­டுத்து  சர்­வ­தேச ரீதியில் பெரும் பதற்­ற­நிலை ஏற்­பட்­டுள்­ளது. 

தனது நாட்டால் மேற்­கொள்­ளப்­பட்ட இந்த ஆறா­வது அணு­சக்திப் பரி­சோ­த­னையை கச்­சி­த­மான ஒரு வெற்­றி­யாக வட கொரியா குறிப்­பிட்­டுள்­ளது.

இந்த ஐத­ரசன் குண்­டா­னது அணு குண்­டொன்றை விடவும் மிகவும் பலம் பொருந்­தி­யது என்­ப­துடன்  இதற்கு முன் தன்னால் பரி­சோ­திக்­கப்­பட்ட ஐந்­தா­வது அணு­சக்தி பரி­சோ­த­னை­யுடன் ஒப்­பி­டு­கையில் மேற்­படி அணு­சக்திப் பரி­சோ­தனை  5  மடங்கு சக்தி வாய்ந்­தது என அந்­நாடு கூறு­கி­றது. 

இதன்­போது வெளிப்­பட்ட அதிர்­வா­னது இதற்கு முந்­திய  ஐந்­தா­வது அணு­சக்திப் பரி­சோ­த­னையை விடவும் 9.8 மடங்கு அதிகம்  என அந்­நாட்டு அர­சாங்க கால­நிலை முகவர் நிலையம் தெரி­விக்­கி­றது.

வட கொரி­யாவின்  இந்த அறி­விப்­புக்கு முன்னர்  அந்தப் பிராந்­தி­யத்தில் 6.2  ரிச்டர் பூமி­ய­திர்ச்­சி­யை­யொத்த விளைவு   அவ­தா­னிக்­கப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. 

இத­னை­ய­டுத்து வட கொரியா தனது ஆறா­வது அணு­ஆ­யுதப் பரி­சோ­த­னையை  மேற்­கொண்­டி­ருக்­கலாம் என  அஞ்­சப்­பட்ட நிலையில் அந்­நாடு அதனை தற்­போது உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது. 

வட கொரி­யாவின் அணு ஆயுதப் பரி­சோ­தனை தொடர்­பான  அறி­விப்பு அந்­நாட்டின் அயல்­நா­டு­க­ளிலும் உல­க­ளா­விய ரீதி­யிலும் பெரும் எச்­ச­ரிக்கை நிலை­யொன்றை தோற்­று­வித்­துள்­ள­தாகக் கூறப்­ப­டு­கி­றது.

இந்த ஆறா­வது அணு ஆயுதப் பரி­சோ­த­னை­யா­னது வட கொரியத் தலைவர் கிம் யொங்- உன்னின் நேரடி உத்­த­ரவின் பேரில் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­தாக தெரி­வித்த வட கொரிய அர­சாங்கத் தொலைக்­காட்சி,  இது அந்­நாட்டின் அணு ஆயுத நிகழ்ச்சித் திட்­டத்தில் அர்த்­த­முள்ள முன்­ன­டி­யெ­டுத்து வைப்பு எனக் குறிப்­பிட்­டுள்­ளது.

அணு ஆயுத நிறு­வ­கத்­துக்கு விஜயம் செய்து அங்­குள்ள விஞ்­ஞா­னி­களை நேரில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டிய  வட கொரியத் தலைவர்,  அணு ஆயு­தங்கள் தொடர்­பான  வழி­காட்­டலை வழங்­கி­யுள்ளார்.

தற்­போது வட கொரி­யாவால் பரி­சோ­திக்­கப்­பட்­டுள்ள ஐத­ரசன் குண்­டா­னது ஒரு முழு நக­ரையே நிர்­மூ­ல­மாக்கப் போது­மா­ன­தாகும் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இந்­நி­லையில் வட­கொ­ரி­யாவின் இந்த அணு ஆயுதப் பரி­சோ­த­னையை ஜாக்­கி­ர­தை­யுடன் கையாள வேண்­டி­யுள்­ள­தாக தெரி­வித்­துள்ள அர­சியல் ஆய்­வா­ளர்கள்,  ஆனால் தற்­போது பரி­சோ­திக்­கப்­பட்­டுள்ள அணு ஆயு­த­மா­னது  முன்­னேற்­ற­க­ர­மா­னது என்­பது தெளி­வா­ன­தாகும் என்று கூறு­கின்­றனர்.

வட கொரியா இதற்கு முன்னர்  கடந்த ஆண்டு செப்­டெம்பர் மாதம்  மேற்­கொண்ட அணு­சக்திப் பரி­சோ­த­னை­யை­ய­டுத்து  அந்­நாட்­டுக்கு  எதி­ராக ஐக்­கிய நாடுகள் சபை தடை­களை விதித்­த­துடன் அந்­நாட்­டுக்கு அத­னது அணு­சக்தி  செயற்­பா­டு­களை கைவிட வலி­யு­றுத்தி  சர்­வ­தேச ரீதி­யாக கடும் அழுத்­தமும் கொடுக்­கப்­பட்­டது.

இத்­த­கைய சூழ்­நி­லையில் வட கொரியா அண்­மையில்  அமெ­ரிக்கா வரை சென்று தாக்கக் கூடி­யது என   தெரி­விக்­கப்­படும் ஏவு­க­ணை­களை உரு­வாக்கிப் பரி­சோ­தித்­தி­ருந்­தது.

வட கொரி­யாவின்  புதிய அணு ஆயுதப் பரி­சோ­த­னை­யா­னது அந்நாட்டின் புங்ஷி -றி அணுசக்திப் பரிசோதனை தளம் அமைந்துள்ள கில்ஜு பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளதாக  அந்நாட்டின் அயல்நாடான  தென் கொரியாவைச் சேர்ந்த  அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த அணு ஆயுதப் பரிசோதனைக்கு முன்னர் நீண்ட தூரம் பயணிக்கக் கூடிய ஏவுகணையொன்றில்  பொருத்தக் கூடிய சிறிய ஐதரசன் குண்டொன்று தன்னிடம் உள்ளதாக  வட கொரியா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.