தமிழ் மக்­க­ளுக்­காக தன்னை அர்ப்­ப­ணித்த அண்ணன் அமிர்­த­லிங்­கத்தின் பய­ணமே இன்­று­வரை தொடர்­கின்­றது. அத்­த­கைய அவரின் பய­ணத்­திற்கு முடிவு காணப்­ப­ட­வேண்­டு­மாயின்  இலங்­கையில் உள்ள தமிழ் மக்­க­ளு­டைய பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­பட வேண்டும். அவ்­வாறு தீர்க்­கப்­ப­டா­விட்டால்  இந்­நாட்­டிற்கு ஓர் எதிர்­காலம் இல்லை. அதுவே உண்மை. ஆகவே இவை விரைவில் முடி­விற்கு வர­வேண்டும் என்று  எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்தார்.

மேலும் நாட்­டி­லுள்ள சிங்­கள மக்கள் மத்­தி­யிலும் ஒரு மாற்றம் ஏற்­பட்­டிக்­கின்­றது. தற்­போ­துள்ள இந்­நி­லைமை தொட­ரு­மாயின் தங்­க­ளுக்கும் அது எவ்­வித நன்­மை­யையும் தரப்­போ­வ­தில்லை என்­பதை அவர்கள் உணரத் தொடங்­கி­யுள்­ளார்கள். அத்­துடன் இந்­நாடு தற்­போ­துள்ள நிலையில் இருந்தும் பொரு­ளா­தார கஷ்­டங்­க­ளி­லி­ருந்து மீட்­கப்­பட வேண்­டு­மாயின் இங்­குள்ள பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­ட­வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார். 

அமிர்­த­லிங்­கத்தின் 90 வது பிறந்­த­தினம் தொடர்­பான   நினைவுப் பேருரை நேற்று யாழ்ப்­பாணம்  பொது நூல­கத்தில் நடை­பெற்­றது. இந்­நி­கழ்வில் பிர­தம விருந்­தி­ன­ராக கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே  இரா.சம்­பந்தன் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

 

அவர் மேலும்  உரை­யாற்­று­கையில்,

13 ஆவது அர­சி­ய­ல­மைப்புத் திருத்­தத்தின் அடிப்­ப­டையில் நடை­பெற்ற மாகா­ண­சபைத் தேர்­தல்­களில் நாங்கள் போட்­டி­யி­ட­வில்லை. 1988 ஆம் ஆண்டு நாங்கள் பகி­ரங்­க­மாக ஒரு வி்டயத்தை கூறினோம்.  13 வது அர­சி­ய­ல­மைப்புத் திருத்தம் ஒரு முன்­னேற்­ற­க­ர­மா­னது. அதில் மாகா­ண­ச­பைகள் உரு­வாக்­கப்­ப­டு­கின்­றன. முத­ல­மைச்சர் அமைச்­சர்கள் உறுப்­பி­னர்கள் அதி­காரப் பகிர்வு என்­பன காணப்­ப­டு­கின்­றன. அந்த வகையில் அது முன்­னேற்­ற­க­ர­மா­னது ஆனாலும் அது எமது மக்­களின் பிரச்­சி­னைக்கு தீர்­வாக அமைய முடி­யாத கார­ணத்­தினால் தமிழர் விடு­த­லைக்­கூட்­டணி அதனை நிரா­க­ரித்­தது.

தந்தை செல்­வா­வினால் ஆரம்­பிக்­கப்­பட்டு அமிர்­த­லிங்கம் அண்ணன் உடைய உத­வி­யுடன் பின்னர் அவரால் தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுக்­கப்­பட்ட எமது பாதை மிகவும் கடி­ன­மான பாதை­யாக இருந்­துள்­ளது. எமது பிரச்­சி­னையை நாடு சுதந்­திரம் அடை­வ­தற்கு முன்­ன­ராக தீர்த்­தி­ருக்­க­வேண்டும். ஆனால் நாங்கள் உறு­தி­யாக இருந்த கார­ணத்­தினால் தமிழ் மக்கள் சார்பில் ஒரு அர­சியல் கட்சி உறு­தி­யாக இருந்து செயற்­பட்­டதன் கார­ணத்­தி­னாலும் அப்­பா­தையில் எமது மக்­களும் ஒற்­று­மை­யாக இருந்து பய­னித்­ததன் கார­ண­மா­கவும் இவ்­வ­ளவு தூரம் எமது இலக்கை நோக்கி நியா­ய­மான ஒரு பய­ணத்தை நாம் செய்­துள்ளோம். 

அண்ணன் அமிர்­த­லிங்கம் 1989 ஆம் ஆண்டு இறந்­தி­ருந்­தாலும் அவர் ஆரம்­பித்த அந்­தப்­பாதை அந்தப் பயணம் இன்று வரை தொடர்­கின்­றது. முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்­காவின் காலத்தில் அர­சி­ய­ல­மைப்பு  திருத்தம் ஒரு  சட்­ட­மாக பாரா­ளு­மன்­றத்­திற்கு கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருந்­தது.    அதில் பொதுப்­பட்­டியல் இருக்­க­வில்லை. இவற்­றை­விட பல விட­யங்கள் சம்­பந்­த­மாக அது மிகவும் தூரம் செல்­வ­தாக காணப்­பட்­டது. 

ரணில் விக்­கி­ர­சிங்­கவின் காலத்தில் ஒஸ்­லோவில் ஓர் அறிக்கை வெளி­யி­டப்­பட்­டது.  உள்­ளக சுய­நிர்­ண­யத்தின் அடிப்­ப­டையில் தமிழ் மக்கள் வாழ்ந்து வரு­கின்ற பிர­தே­சங்­களில் ஒரு சமஷ்டி முறை­யி­லான ஆட்சி முறை குறித்து  ஆரா­யப்­பட வேண்டும் என்­ப­துவே ஒஸ்­லோவில் வெ ளியி­டப்­பட்ட அறிக்­கையின் சாராம்சம் என்­ப­துடன் அது ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது. 

இதே­போன்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ஷ­சவின் காலத்தில் அதி­கூ­டிய அதி­காரப் பகிர்­வுடன் தீர்வு வர­வேண்டும் மக்­க­ளி­னு­டைய பாது­காப்பு உறு­தி­செய்­யப்­பட வேண்டும் மக்­க­ளி­னு­டைய அடை­யா­ளங்­களும் உறு­தி­செய்­யப்­பட வேண்டும். அயல் நாடான இந்­தி­யாவின் அர­சியல் யாப்பை கற்­க­வேண்டும் போன்ற விட­யங்­களை   வலி­யு­றித்தி நிபுணர் குழு மற்றும் சர்­வ­கட்சிக் குழு தங்­க­ளது வரை­பு­களை சமர்ப்­பித்­தி­ருந்­தன. 

இவை அனைத்தும் அமர்த்­த­லிங்­கத்தின் காலத்­திற்குப் பின்னர் நடை­பெற்­றவை. ஆனால் இவ்­வ­ளவு தூரம் நாங்கள் பய­ணித்­ததன் கார­ணத்­தி­னாலும்   13 வது அர­சி­ய­ல­மைப்புத் திருத்­தத்தை தமிழர் விடு­த­லைக்­கூட்­டணி 1988 ஆம் ஆண்டு அதனை நிரா­க­ரித்து அது ஒரு முடி­வான தீர்­வாக அமை­யாது எனக் கூறி­யதன் கார­ணத்­தி­னா­லுமே  இக் கரு­மங்கள் நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றன. 

இன்­றைக்கும் நாங்கள் இக் கரு­மத்தில் ஈடு­பட்­டு­வ­ரு­கின்றோம். எமது மக்­க­ளு­டைய இறை­மையின் அடிப்­ப­டையில் மக்­க­ளி­னு­டைய உள்­ளக சுய­நிர்­ணய உரிமை அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு நாங்கள் சரித்­திர ரீதி­யாக வாழ்ந்து வந்து பிர­தே­சங்­களில் எமக்கு போதி­ய­ளவு சுயாட்சி கிடைக்க வேண்டும் என்று நாங்கள் வலி­யு­றித்­தி­வ­ரு­கின்றோம். 

மேலும் இலங்­கையில் ஏற்­ப­டுத்­தப்­படும் அர­சியல் தீர்­மா­னங்கள் இரா­ணு­வத்­தி­ன­ரு­டைய கை ஓங்­கு­வ­தனால் ஏற்­ப­டக்­கூ­டாது என்றும் அது அர­சியல் ரீதி­யா­கவே ஏற்­ப­ட­வேண்டும் என்­ப­தையே நாம் இந்­தி­யா­விற்கு தெளி­வாக கூறி­வ­ரு­கின்றோம். அத்­துடன் இக்­க­ருத்­தையே அமிர்­த­லிங்­கமும் தெ ளிவா­கவும் உறு­தி­யா­கவும் தெரி­வித்­தி­ருந்தார்.

 

சில தினங்­க­ளுக்கு முன்னர்  நாங்கள் அமெ­ரிக்­காவின் தெற்கு மற்றும் மத்­திய ஆசி­யாவின் உதவிச் செய­லா­ளரை சந்­தித்­தி­ருந்­த­போது இந்தக் கரு­மங்­களை அவர்­க­ளுக்கு தெளி­வாக விளக்­கிக்­கூ­றி­யி­ருந்தோம். எமக்கு எந்­த­வி­த­மான தீர்வு வேண்டும் என்­பதை அவ­ரி­டத்தில் தெரி­வித்­தி­ருந்தோம். இன்று சர்­வ­தேச சமூகம் எங்­க­ளு­டைய நிதா­ன­மான நியா­ய­மான போக்கின் அடிப்­ப­டையில் மிகவும் கூடு­த­லான ஆத­ர­வினை வழங்­கக்­கூ­டிய நிலமை ஏற்­பட்­டுள்­ளது.  

நாங்கள் தொடர்ச்­சி­யாக ஒரு ஆயுதப் போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­த­போதும் நியா­ய­மான தீர்­வொன்றைக் காண்­ப­தற்கு எப்­போதும் தயா­ராக இருந்­துள்ளோம்.  நாம் வைத்­தி­ருக்­கின்ற நிலைப்­பாடு நியா­ய­மா­னது நாங்கள் அநீ­தி­யாக எத­னையும் கேட்­க­வில்லை. நியா­ய­மற்ற முறை­யிலும் எத­னையும் கேட்­க­வில்லை. அதுவே எமது பல­மாகும்.   தற்­போது சர்­வ­தேச ஆத­ரவு பெரி­த­ளவில் நமக்கு உள்­ளது. அது அதி­க­ரித்­துக்­கொண்டும் வரு­கின்­றது. இவற்­றிற்­கெல்லாம் மேலாக எமது மக்கள் ஒற்­று­மை­யாக இருக்க வேண்டும். 

1956 ஆம் ஆண்­டுக்குப் பின்னர் எமது மக்கள் குறிப்­பிட்ட ஒரு கொள்­கைக்குப் பின்னால் ஒற்­று­மை­யாக இருந்­துள்­ளார்கள். அதனை நாம் மதிக்­கின்றோம் ஏனேனில் அது மிகவும் பெறு­ம­தி­யான ஒரு விடயம். அதனை எல்­லோரும் ஏற்­றுக்­கொள்­ள­வேண்டும். அத்­த­கைய ஒற்­று­மையை நாம் குலைத்­து­வி­டக்­கூ­டாது. நாங்கள் நியா­ய­மான கோரிக்­கையின் பின்­னா­லேயே ஒரு­மித்து நிற்­கின்றோம். இது தெளி­வாக வேண்டும். 

நாங்கள் வாழ்­வதும் மறை­வதும் சக­ஜ­மான ஒரு விடயம்.  அண்ணன் அமிர்­த­லிங்கம் சிறந்த ஒரு சட்­டத்­த­ரணி. ஆனால் அவர் தனது தொழி­லையோ தனது குடும்­பத்­தையோ சரி­வர கவ­னிக்­க­வில்லை.  மாறாக அவர் தன்னை முழு­மை­யா­கவே தமிழ் மக்­க­ளுக்­காக அர்ப்­ப­ணித்­தி­ருந்தார். அவர் இறக்கும் வரையில் இடம்­பெற்ற சலக கரு­மங்­க­ளிலும் அவர் பெரும் பங்­காற்­றி­யி­ருந்தார். அவர் மறைந்த பின்­னரும் அவ­ரது பய­ணமே இற்­றை­வரை தொடர்­கின்­றது. அவர் தொடக்­கி­வைத்த அவரின் பயணத்திற்கு விரைவில் ஒரு முடிவு வரும். எமது மக்களுக்கு நியாயமான நிதானமான ஒழுக்கமான ஒரு அரசியல் தீர்வு கிடைக்கவேண்டும். அதனைப் பெற்றுத்தருவதற்கு சர்வதேச சமூகமும் அதன் பங்களிப்பைச் செய்யவேண்டும். 

சிங்கள மக்கள் மத்தியிலும் ஒரு மாற்றம் ஏற்பட்டிக்கின்றது. அவர்களும் உணர்கின்றார்கள் இந்நிலமை தொடருமாயின் தங்களுக்கும் அது எவ்வித நன்மையையும் தரப்போவதில்லை என்பதை அவர்கள் உணரத் தொடங்கியுள்ளார்கள். இந்நாடு தற்போதுள்ள நிலையில் இருந்து மீட்கப்படவேண்டுமாயின் பொருளாதார கஷ்டங்களிலிருந்து நீக்கப்படவேண்டுமாயினும் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும். அந்த வகையில் இந்நாட்டிலுள்ள தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் இந்நாட்டிற்கு ஓர் எதிர்காலம் இல்லை. அதுவே உண்மை. ஆகவே இவை விரைவில் முடிவிற்கு வரவேண்டும் என்றார்.