இன ஒற்றுமைக்கான செயற்பாட்டுடன் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும்

23 Feb, 2026 | 11:17 AM
image

இன, மதவாதத்தை இல்லாதொழித்து இனங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி நாட்டில் நல்லிணக்கத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் செயற்பாடாகும் என்று தேசிய மக்கள் சக்தி வலியுறுத்தி வருகின்றது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவாகட்டும் பிரதமர் ஹரிணி அமரசூரிய, நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார, சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க உட்பட்ட அரசாங்கத் தரப்பினர் இதனையே தொடர்ச்சியாக எடுத்துக் கூறி வருகின்றனர்.

கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பிரித்தானியாவின் பிரதிப் பிரதமர் டேவிட் லமியுடனான சந்திப்பின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டிருக்கின்றார். அதன் மூலம் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயத்தை பிரித்தானியாவின் பிரதிப் பிரதமர் டேவிட் லமி, தமிழ் தேசியக் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பின் போது சுட்டிக்காட்டியிருக்கின்றார். ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பில் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை வலுப்படுத்தும் தமது செயற்பாடு குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விளக்கிக் கூறியதாகவும் பிரித்தானிய பிரதிப் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் ‘ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் கூறப்படுகின்ற இனங்களுக்கிடையிலான ஒற்றுமை என்பது சிறந்த விடயமாகும். ஆனால், தமிழர்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் புதிய அரசியலமைப்பு குறித்து பேசுவதில் ஜனாதிபதிக்கு நாட்டமில்லை. நாங்கள் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளைப் பற்றி பேசினால் அது இனவாதமாக நோக்கப்படுகின்றது. எனவே, இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை நாம் எதிர்க்காத போதிலும் எமது உரிமைகளை விட்டுக் கொடுப்பதற்கு நாம் தயாரில்லை’ என்று பிரித்தானிய பிரதிப் பிரதமர் டேவிட் லமியிடம் தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் எடுத்துக் கூறியிருக்கின்றனர்.

இந்தச் சந்திப்பின் போது தற்போதைய சூழ்நிலையில் நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு ஏன் அவசியம் என்பதை தெளிவுபடுத்திய தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், இது குறித்து அரசாங்கத்தினால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பிலும் எடுத்துரைத்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பிரித்தானிய பிரதிப் பிரதமர் டேவிட் லமி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடனான தனது சந்திப்பின் போது இலங்கையர்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற விடயத்தை அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியதாக சுட்டிக்காட்டியிருந்தார். இதனையடுத்தே தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் தமது நிலைப்பாட்டினை பிரித்தானிய பிரதிப் பிரதமருக்கு விளக்கியிருக்கின்றனர்.

மாகாண சபைத் தேர்தலை நடத்தாது அரசாங்கம் இழுத்தடித்து வருகின்றமை தொடர்பிலும் தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் இதன்போது சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.

உண்மையிலேயே கடந்த கால அரசாங்கங்களுடன் ஒப்பிடுகையில் இனவாதத்தையும் மதவாதத்தையும் இல்லாதொழித்து இனங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஓரளவுக்கு ஈடுபட்டு வருகின்றது. அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனாலும், இனங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்துகின்றோம் என்று கூறிக் கொண்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காணாது இழுத்தடிப்பதென்பது ஏற்றுக்கொள்ளத்தக்க நடவடிக்கையல்ல.

இன, மதவாதத்துக்கு இடமளிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெற்கிலும் வடக்கிலும் எடுத்துக் கூறி வருகின்றார். அதேபோன்றே பிரதமர் ஹரிணி அமரசூரியவும் கடந்த வாரம் மன்னாரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கையில், “இனவாதத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். இந்த நாட்டிலுள்ள அனைவரும் பாதுகாப்பாகவும் சம உரிமைகளுடனும் வாழ விரும்புகின்றனர் என்பதை நாம் அறிவோம். ஆனால், இன்னும் இனவாத முகாம்கள் ஒருவொருக்கொருவர் முரண்பாடுகளை உருவாக்க முயற்சிக்கின்றனர். இதற்கு அனுமதிக்க முடியாது” என்று எடுத்துக் கூறியிருந்தார்.

இதேபோன்றே நீதியமைச்சர் ஹர்சன நாணயக்காரவும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கையில், “நாட்டில் பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகளை எடுத்துள்ள அரசாங்கம் இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தவும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஜனாதிபதியை எவரும் சிங்கள ஜனாதிபதி என்று குறிப்பிடவில்லை. வடக்கு, கிழக்கு உட்பட மலையகத் தமிழ் மக்கள் ‘எமது ஜனாதிபதி’ என்றே ஜனாதிபதியை அன்புடன் அழைக்கின்றனர். இனவாத முரண்பாடுகளால் சிதைவடைந்த மனங்களை ஆற்றுப்படுத்துவதற்கு சட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்று சுட்டிக்காட்டியிருந்தார்.

அமைச்சர் பிமல் ரத்நாயக்கவும் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் இனவாதத்துக்கு மதவாதத்துக்கோ இடமளிக்கப் போவதில்லை என்ற விடயத்தை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றார். தெற்கிலும் வடக்கிலும் இனவாதப் பசியுடன் பெருமளவானோர் செயற்படுவதாகவும் அதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என்றும் அவர் தெரிவித்து வருகின்றார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களது இத்தகைய நிலைப்பாடு வரவேற்கத்தக்கதாகும். இன, மதவாதத்தினால்தான் நாடு இன்று குட்டிச்சுவராக மாறியிருக்கிறது. இனியும் இத்தகைய இனவாதத்துக்கோ அல்லது மதவாதத்துக்கோ இடமளிக்க முடியாது. அந்த விடயத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கை சரியானதாவே காணப்படுகின்றது.

ஆனாலும் இன, மதவாதத்துக்கு இடமில்லை என்றும் இனங்களுக்கிடையே ஒற்றுமையைக் கட்டியெழுப்ப முயற்சிப்பதாகவும் கூறி வரும் அரசாங்கம், வாக்குறுதி அளித்தபடி தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண நடவடிக்கை எடுக்கவில்லை. யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும் தமிழ் மக்களின் அடிப்படைப்படைப் பிரச்சினையான இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் எனவும் அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தது. அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை இதுவரை எடுக்கவில்லை. பொறுப்புக்கூறலை நிலைநாட்டும் விடயத்தில் அரசாங்கம் கடந்த கால அரசாங்கங்களைப் போன்றே மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயற்படுகின்றது.

காணாமல் போனோர் விவகாரமாகட்டும், அரசியல் கைதிகள் விடயமாகட்டும், யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கான நீதியாகட்டும் எந்தவிடயத்திலும் அரசாங்கம் ஆக்கபூர்வமாக செயற்படவில்லை.

அரசியல் தீர்வு காணும் விடயத்தில் வாக்குறுதிகளை வழங்கிய போதிலும் இதுவரையில் உரிய அரசியல் அமைப்பினை உருவாக்குவது குறித்தோ அல்லது அரசியல் தீர்வு குறித்தோ அரசாங்கம் பேசவில்லை. வெறுமனே வாக்குறுதிகள் வழங்கப்பட்டு வருகின்றனவே தவிர செயற்பாட்டளவில் நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என்பதே உண்மையாகும்.

இதனால்தான் ஜனாதிபதி கூறும் இன ஒற்றுமை விடயம் என்பது தமிழர் விவகாரத்தில் இன்னமும் செயல்வடிவம் பெறவில்லை என்று தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் பிரிட்டனின் பிரதிப் பிரதமர் டேவிட் லமியிடம் எடுத்துக் கூற வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும் பொதுத் தேர்தலின் போதும் வடக்கு, கிழக்கு, மலையக தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கியிருந்தனர். பாராளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரையில் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் பேராதரவினை வழங்கியிருந்தனர். அங்கு எட்டு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை தேசிய மக்கள் சக்தி பெற்றிருக்கின்றது. இவ்வாறு தேசிய மக்கள் சக்தி மீது நம்பிக்கை வைத்து தமிழ் மக்கள் வாக்களித்திருந்தனர்.

அவ்வாறு தேசிய மக்கள் சக்தியை ஆதரித்த தமிழ் மக்கள் தற்போது தமக்கு வழக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டியதன் அவசியத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். தமது அன்றாடப் பிரச்சினைகளுக்கு அடிப்படைப் பிரச்சினையான இனப்பிரச்சினைக்கும் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்களும் இந்த நிலைமைப்பாட்டிலேயே இருக்கின்றனர்.

எனவே, தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது இன ஒற்றுமைக்கான செயற்பாட்டினை மேற்கொள்வதுடன் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைக்காண இனியாவது இதயசுத்தியுடன் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுத்தால்தான் தமிழ் மக்களின் மனங்களை தொடர்ந்தும் வெல்ல முடியும் என்பதை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கவனத்தில் கொள்வது நன்று என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ்த் தேசியக் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள இணக்கம்...

2026-03-08 12:09:56
news-image

புதிய அர­சி­ய­ல­மைப்பு விவ­கா­ரத்தில் அக்­க­றை­யற்­றி­ருக்கும் அர­சாங்கம்

2026-03-01 12:37:43
news-image

இன ஒற்றுமைக்கான செயற்பாட்டுடன் தமிழர் பிரச்சினைக்கு...

2026-02-23 11:17:39
news-image

தமிழ் மக்­களின் உணர்­வு­களை புரிந்­து­கொள்­வது அவ­சியம்

2026-02-15 16:24:39
news-image

இரு துருவ நிலைப்பாட்டினை இல்லாதொழிக்க வழி...

2026-02-08 07:13:22
news-image

மௌனிக்கப்படுகிறதா ஜனநாயக உரிமை?

2026-02-01 10:00:29
news-image

அரசியல் தீர்வு திட்டவரைவை ஒன்றிணைந்து தயாரிக்க...

2026-01-25 11:17:06
news-image

இனியும் காலதாமதம் வேண்டாம்

2026-01-04 14:25:10
news-image

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அழுத்தம்...

2025-12-28 12:29:59
news-image

பாதுகாப்பான பகுதிகளில் மக்களை குடியேற்ற வேண்டும்

2025-12-14 14:48:36
news-image

இந்தியாவின் உடனடி உதவியும் இணைந்த செயற்பாட்டின்...

2025-12-07 16:13:55
news-image

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இதயசுத்தியான செயற்பாடு தேவை

2025-11-30 10:32:53