- மா.உஷாநந்தினி
சுவாமி விவேகானந்த கலாசார நிலையம், கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இணைந்த ஏற்பாட்டில் 'ஸ்ரீ தியாகராஜ ஆராதனை" கொழும்பு, பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் கடந்த 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை வேளையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு வருகைதந்த முதன்மை விருந்தினர்களான இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, அவரது துணைவியார் தனுஜா ஜா ஆகியோருடன் இந்து வித்தியா விருத்திச் சங்கத்தின் தலைவர் த.முத்துக்குமாரசாமி, அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் அபிராமி கைலாசபிள்ளை, எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (வீரகேசரி) பத்திரிகை நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி எம்.செந்தில்நாதன், கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் பாரதி கென்னடி மற்றும் பல கர்நாடக இசைக் கலைஞர்கள், நடனக் கலைஞர்கள், இசை ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
வாழ்நாளில் ஒரு முறையேனும் தியாகராஜ ஆராதனையில் பங்கேற்று, 'தியாக பிரம்மத்தின்" ஒரு கீர்த்தனையாவது பாடிவிடவேண்டும் என்பதே, சங்கீதத்தில் அகரம் பயில ஆரம்பிக்கும் ஒவ்வொருவரினதும் பெருங்கனவு.
இசைமணம் கமழும் தியாகராஜ ஆராதனை இக்காலத்திலும் பழமை மாறாமல் நிகழ்த்தப்படுவது தனிச்சிறப்பு.
கர்நாடக இசைக் கலைஞர்களால் பூஜிக்கப்படும் சங்கீத மும்மூர்த்திகளில் முதல்வரான ஸ்ரீ தியாகராஜருக்கு இசையால் அர்ச்சனை செய்யப்படும் மகத்தான நிகழ்வான 'தியாகராஜ ஆராதனை" இந்தியாவில் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாற்றில் தியாகராஜர் சுவாமி நினைவிடத்தில் விமரிசையாக நடைபெறுவதைப் போன்று, இலங்கையிலும் பல்வேறு கர்நாடக இசைக் கலைஞர்களின் பங்கேற்பில் ஆண்டுதோறும் ஆராதனை நிகழ்த்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இம்முறை கொழும்பில் நடைபெற்ற தியாகராஜ ஆராதனையை பல்வேறு இலங்கை, இந்திய இசைக்கலைஞர்கள் ஒன்றிணைந்து நிகழ்த்தினர்.
தவில், நாதஸ்வர மங்கள வாத்திய இசையுடன் ஆரம்பமான தியாகராஜ ஆராதனை நிகழ்வில் முதலாவதாக, தியாகராஜரின் சிறப்புமிகுந்த பஞ்ச ரத்தினக் கீர்த்தனைகள் பாடப்பட்டன. கீர்த்தனைகளுக்கு அணிசேர்ப்பதாக வீணை, மிருதங்கம், வயலின் முதலான பக்கவாத்தியங்கள் இசைக்கப்பட்டன.
பஞ்சரத்தினக் கீர்த்தனைகளில் முதல் கீர்த்தனையாக 'ஜகதாநந்த காரக...." என்று தொடங்கும் 'நாட்டை" ராகக் கீர்த்தனையை கலைஞர்கள், ஒருமித்த குரலில், சேர்ந்து பாட ஆரம்பித்த நொடியிலேயே, அரங்கம் முழுவதும் அந்த இசையும் பாடலும் நிறைந்துவிட்டன.
கீர்த்தனையின் முதலடியும் அதன் ராக அசைவும் முழுமையான சங்கீதப் புலமை அற்றவர்களுக்கும் கூட பரிச்சயமானதே.
ஆதி தாளம் போட்ட அத்தனைக் கைகளும் ஒரே விதமாக அசைந்தது கண்கொள்ளாக் காட்சி! விறுவிறுப்பான தாள, ராக சஞ்சாரங்களோடு பாடி, வாத்தியங்களை இசைத்த கலைஞர்களின் பக்கமாக சபையோரின் பார்வை திரும்பியதை பார்க்க முடிந்தது.
நாட்டை, கௌளை, ஆரபி, வராளி, ஸ்ரீராகம் ஆகிய ராகங்களில் ரத்தினங்கள் போல அமையப்பெற்ற தியாகராஜரின் பஞ்சரத்தினக் கீர்த்தனைகளும் ஆராதனையில் அடுத்தடுத்து பாடப்பட்டன. ஒவ்வொரு ராகத்திலும் உருவான ஒவ்வொரு கீர்த்தனையும் தனித்துவமானது.
'ஸ்ரீராகம்" என்ற ராகத்தைக் கொண்ட ஐந்தாவது கீர்த்தனை தொடக்கத்தில், ஒரு பெண்மணி, நீண்ட வினாடிகளுக்கு இசைத்த தனி வயலினிசை நெகிழவைத்தது.
பஞ்சரத்தினக் கீர்த்தனைகளின் அறுதியாக மிருதங்கக் கலைஞர்கள் ஒன்றுபோல் தனி ஆவர்த்தனம் வாசித்தபோது, மேள வாத்தியக் கலைஞர்களும் வாய்ப்பாட்டுக் கலைஞர்களும் பார்வையாளர்களும் கூட தாளம் போட்டு, கைதட்டி உற்சாகப்படுத்தினர்.
பஞ்சரத்தினக் கீர்த்தனைகளையும் பாடி நிறைவு செய்த வேளையில், அவற்றுக்கு மகுடம் சூட்டியது போல, மிருதங்கத் தாள ஓட்டம் மேலும் விறுவிறுப்படைந்தது.
அதைத் தொடர்ந்து, தியாகராஜ சுவாமிகள் தனது வாழ்க்கைச் சரிதத்தில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பாடிய கீர்த்தனைகள் குழுக்களாக பாடப்பட்டன.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம், கொழும்பு கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகம், கொழும்பு சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம், இசை அர்ச்சனை அகடமி, ஆலாபனா சங்கீத சபா ஆகியவை சார்பில் வாத்திய மற்றும் வாய்ப்பாட்டுக் கலைஞர்கள் தனிக் குழுக்களாக தியாகராஜர் கீர்த்தனைகளை வழங்கியிருந்தனர்.
இசை, மொழிகளுக்கு அப்பாற்பட்ட ஒரு கலை வடிவம் என்பதை உணர்த்தும் விதத்தில் கொழும்பு கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகத்தின் சார்பாக சிங்கள மொழி பேசும் கலைஞர்களும் தியாகராஜ ஆராதனையில் பங்கேற்றமை மற்றுமொரு சிறப்பம்சம்.
தியாகராஜரின் கீர்த்தனைகள் திராட்சை ரசத்துக்கு ஒப்பானவை. திராட்சை பழத்தை பிழியும்போது சொட்டும் இனிப்பான சாற்றைப் போல தியாகராஜரின் கீர்த்தனைகளைப் பாடுகிறபோதும், அவற்றை செவி சாய்த்துக் கேட்கின்றபோதும் அதேபோன்ற இனிமையை சுவைப்பதற்கு நிகரான சுகானுபவத்தைப் பெறமுடியும் என சங்கீதகாரர்கள் சொல்வதுண்டு.
அதைவிட தியாகராஜரின் கீர்த்தனைகளில் சொட்டக்கூடிய பக்தி ரசம், சிருங்கார ரசமும் ஆராதனையின்போது வாய்ப்பாட்டுக் கலைஞர்களின் குரல் வழியாக உணர்வுபூர்வமாக வெளிப்பட்டதாக கலையன்பர்கள் மன நிறைவோடு கூறியதையும் இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும்.
பொதுவாக, இலங்கையில் நிகழக்கூடிய இசை விழாக்களில் கலந்துகொள்வதற்காக வருகைதரும் பார்வையாளர்களில், பெருமளவினர், விதைநெற்கள் போன்ற 'தேர்ந்த கலைஞர்களாகவும் கலை ஆர்வலர்களாகவும்" விளங்குவதாக இந்தியக் கலைஞர்கள் கூறுவதுண்டு.
அவ்விதமாக இசையறிந்த, இசையை ஆராதிக்கின்ற, இசைக்கலைஞர்களின் வித்தையை மதிப்பிடும் ஆற்றல் கொண்ட பார்வையாளர்கள் நிறைந்த ஒரு விழாவாக தியாகராஜ ஆராதனை விளங்கியது.
ஆராதனைக்கு வருகைதந்திருந்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நிகழ்வில் உரையாற்றியபோது,
"இலங்கை, இந்திய இசைக்கலைஞர்களை ஒன்றிணைத்து, பக்தி மற்றும் மெல்லிசையின் புனிதமான சந்திப்பை உருவாக்குவதாக தியாகராஜ ஆராதனை விளங்குகிறது.
ஸ்ரீ தியாகராஜர் கர்நாடக இசையின் மிகச் சிறந்த சங்கீத அமைப்பாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார். ஒரு புனிதராகவும் இசை மேதையாகவும் வணங்கப்படுகிறார். தமிழ்நாட்டின் ஒரு மாபெரும் பெருமகனான அவர், தனது வாழ்க்கை முழுவதையும் ராம வழிபாட்டுக்காக அர்ப்பணித்தவர் ஆவார்.
கர்நாடக இசையின் பாரம்பரியத்தைப் பற்றி நாம் பேசும்போது, இலங்கையில், இங்கே அமர்ந்திருக்கும் நாம் அனைவரும், பல நூற்றாண்டுகளாக பகிர்ந்து கொண்டுவருகின்ற ஆழமான கலாசாரப் பிணைப்புகளில் ஒன்றாக கர்நாடக இசையும் அமைந்திருப்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்" என்றார்.
இந்தியாவில் தமிழ்நாட்டின் திருவாரூரில் பிறந்து, திருவையாற்றில் தனது வாழ்க்கையில் பெருமளவு நாட்களை கழித்து, கர்நாடக சங்கீதத்தில் பல படைப்புகளை அளித்து, இசையுலகில் பெருமகானாகப் போற்றப்படும் தியாகராஜருக்கான இசைச் சமர்ப்பணமாக கொழும்பில் இம்முறையும் தியாகராஜ ஆராதனை சிறப்புற நடந்தேறியமை கலையன்பர்களுக்கு நிச்சயமாக மனநிறைவைத் தந்திருக்கும்!
படப்பிடிப்பு - எஸ்.எம்.சுரேந்திரன்













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM