நீட் தேர்வுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த தலித் இனத்தைச் சேர்ந்த தமிழக மாணவி அனித்தா நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பிளஸ்டூவில் 2000 மதிப்பெண்களுக்கு 1176 மதிப்பெண்களை எடுத்திருந்தும் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காத விரக்தியிலும் வேதனையிலுமே அனித்தா இத்தகைய முடிவை எடுத்துள்ளார் என உறவினர்கள் நண்பர்கள் கருத்து தெரிவித்துள்ளதுடன் சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டுவிட்டர் என்பனவும் பதிவுகளை வெளியிட்டுள்ளன.

தமிழகத்தை மட்டுமல்லாது இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள அனித்தாவின் மரணம் தொடர்பாக பொது மக்கள் சமூக ஆர்வலர்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக மத்திய மாநில அரசுக்கெதிராக  கண்டனங்களை தெரிவிக்கின்றனர்.

சுமை தூக்கும் கூலித் தொழிலாளியின் மகளான அனித்தா பத்து வருடங்களுக்கு முன்னரே தனது தாயை இழந்து தந்தையின் அரவணைப்பில் மாத்திரம் அடிப்படை வசதிகள் கூட இல்லாத பின்தங்கிய  நிலையில் இருந்தும் சாதிக்க வேண்டும் என துடித்த திறமையுள்ள இளம் மாணவி ஆவார்.

தமிழக அரசின் கல்வி முறையில் பிளஸ்டூவில் 1176 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதல் மாணவியாக வந்தும் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு இந்திய மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள தடைதாண்டல் பரீட்சையில் 700 மதிப்பெண்களுக்கு 86 புள்ளிகளை மாத்திரம் பெற்ற அனித்தாவால் மருத்துவ கல்வியை தொடர முடியாது போனது.

தமிழக அரசின் கல்வி முறையில் கல்வி பயிலும் மாணவர்களால் “நீட் பரீட்சை”யை எதிர் கொண்டு வெற்றி பெறுவது கடினம் எனவும் தமிழக மாணவர்களுக்கு நீட் பரீட்சையிலிருந்து தமிழக மாணவர்கள் விலக்களிக்கப்படல் வேண்டும் என நீதி மன்றில் வழக்குத் தாக்கல் செய்தும் உச்ச நீதி மன்றம் அவரின் கேகாரிக்கையை நிராகரித்து விட்டது.

அனித்தாவிற்கு ஏற்பட்டுள்ள அநியாயத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதுமுள்ள மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ரஜினி, கமல், பார்த்தீபன் உள்ளிட்ட பல நடிகர்களும் தங்களது அனுதாபங்களையும், மத்திய, மாநில அரசுக்கு எதிராக கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

உயிரிழந்த அனித்தாவின் குடும்பத்திற்கு தமிழக அரசு 7 இலட்சம் ரூபாவை இழப்பீட்டுத் தொகையாக அறிவித்துள்ளது.