முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ மற்றும் அண்டை நாடான இந்­தி­யா­வு­ட­னான உற­வுகள் குறித்து அமெ­ரிக்கா அதி­க­ளவு கரி­சனை கொண்­டி­ருப்­பதை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிற்கும் இலங்­கைக்கு விஜயம் செய்­துள்ள தெற்கு மத்­திய ஆசியப் பிராந்­தி­யத்­துக்­கான அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்தின் பதில் உதவிச் செய­லாளர் அலிஸ் வெல்­ஸ்க்கும் இடை­யி­லான சந்­திப்பு  நேற்று வெள்­ளிக்­கி­ழமை இலங்­கைக்­கான  அமெ­ரிக்க தூதுவர் அதுல் கேசாப்பின் இல்­லத்தில் நடை­பெற்­றி­ருந்­தது.

இச்­சந்­திப்பின் ஒரு கட்­டத்தில் பதில் உதவிச் செய­லாளர் அலிஸ் வெல்ஸ்,

"முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தொடர்ந்தும் தீவிர அர­சி­யலில் இறங்­கி­யுள்ளார். ஆகவே அது உங்­க­ளுக்கு  தாக்கம் செலுத்­து­வ­தாக உள்­ளதா?" என்ற தொனிப்­பட வினா­வொன்றை எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்­த­னி­டத்தில் தொடுத்­துள்ளார்.

அச்­ச­ம­யத்தில் பதி­ல­ளித்த சம்­பந்தன்,

"புதிய அர­சி­ய­ல­மைப்பு உட்­பட ஏனைய விட­யங்­களில்  மஹிந்த கொண்­டி­ருக்கும் புரிதல் தொடர்­பாக சில மாறு­பட்ட நிலை­மைகள் காணப்­ப­டு­கின்­றன, இருப்­பினும் யதார்த்த நிலை­மை­களை வெளிப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவும் அது தொடர்பில் அவ­ருக்கு தெளி­வு­ப­டுத்து­வ­தற்­கா­கவும் நான் நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்ளேன். அண்­மையில் கூட நான் அவரை நேர­டி­யாக சந்­தித்­துள்ளேன். அவ்­வா­றான சந்­திப்­புக்­களை மேலும் முன்­னெ­டுப்­ப­தற்கு எதிர்­பார்த்­தி­ருக்­கின்றேன்" என்று குறிப்­பிட்டார்.  

இதே­வேளை இந்­தி­யா­வுடன் கூட்­ட­மைப்பு கொண்­டி­ருக்கும் தொடர்­புகள், தமிழ்நாட்­டுடன் கொண்­டி­ருக்கும் உற­வுகள் தொடர்­பா­கவும் பதில் உதவிச் செய­லாளர் அலிஸ் வெல்ஸ் கேள்வி எழுப்­பி­யி­ருந்தார். 

இதன்­போது பதி­லு­ரைத்த சம்­பந்தன்,

" இந்­திய மத்­திய அர­சாங்­கத்­துடன் நேர­டி­யான தொடர்­பு­களைக் கொண்­டி­ருக்­கின்றோம். அவர்கள் தமிழ் மக்­களின் விட­யத்தில் கூடி­ய­ள­வான கரி­ச­னையைக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். தமி­ழ­கத்­தினைப் பொறுத்­த­வ­ரையில் அவர்கள் உணர்வு ரீதி­யான பேரா­த­ர­வினைக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்" என குறிப்­பிட்டார்.

இச்­ச­ம­யத்தில் இலங்­கைக்­கான அமெ­ரிக்க தூதுவர் அதுல் கேசாப் குறுக்­கீடு செய்து  "தமிழ் நாட்டில் தற்­போது அர­சியல் சூழலில் மாற்­றங்கள் இடம்­பெ­று­கின்­றன. விரைவில் அந்த மாற்­றங்கள் சாத­க­மான நிலை­மைக்கு நிச்­ச­ய­மாக மாறும்" என்று குறிப்பிட்டுள்ளதாக அறிய முடிகின்றது.  

இக் கலந்துரையாடலின் மூலம்  மஹிந்த ராஜபக்ஷவின் விடயத்திலும் இந்தியாவுடன் கொண்டிருக்கும் உறவு தொடர்பிலும் அமெரிக்காவின் கரிசனை சமகால அரசியல் சூழலில் அதிகரித்துள்ளது என்பதை அறியமுடிகின்றது.