ஸ்கொட்லாந்தை வீழ்த்தி இன்னும் சாதிப்போம் என்ற செய்தியுடன் ரி20 உலகக் கிண்ணத்திலிருந்து விடைபெற்றது நேபாளம்

Published By: Vishnu

18 Feb, 2026 | 03:52 AM
image

(நெவில் அன்தனி)

ஸ்கொட்லாந்துக்கு எதிராக மும்பை வான்கேட் விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண சி குழு போட்டியில் 7 விக்கெட்களால் நேபாளம் அமோக வெற்றியீட்டியது.

2014இல் ரி20 உலகக் கிண்ண தகுதிகாண் முதல் சுற்றில் 2 போட்டிகளில் வெற்றியீட்டிய நேபாளம், ரி20 உலகக் கிண்ண பிரதான முதல் சுற்றில் ஈட்டிய முதலாவது வெற்றி இதுவாகும்.

இன்றைய போட்டியில் ஸ்கொட்லாந்து வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பே அதிகமாக இருந்தது. ஆனால், நேபாளம் தலைகீழ் வெற்றியை ஈட்டி எதிர்காலத்தில் இதனைவிட சாதிப்போம் என்ற செய்தியை கொடுத்துவிட்டு விடைபெற்றது.

நேபாள வீரர்கள் தங்களது வெற்றியை கொண்டாடும் வகையில் மும்பை வான்கேட் விளையாட்டரங்கை சுற்றிவந்து ரசிகர்களுக்கு கைகளை அசைத்து நன்றி தெரிவித்து விடைபெற்றனர்.

சோம்பால் காமியின் துல்லியமான பந்துவீச்சு, திப்பேந்த்ரா சிங் ஆய்ரீ குவித்த ஆட்டம் இழக்காத அரைச் சதம் என்பன நேபாளத்தின் வெற்றியில் பிரதான பங்காற்றின.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றது.

ஜோர்ஜ் மன்சே (27), மைக்கல் ஜோன்ஸ் ஆகிய இருவரும் 60 பந்துகளில் 80 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் பெற்ற மைக்கல் ஜோன்ஸ் 2ஆவது விக்கெட்டில் ப்றெண்டன் மெக்முலெனுடன் மேலும் 52 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

மைக்கல் ஜோன்ஸ் 45 பந்துகளில் 8 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 71 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்த சொற்ப நேரத்தில் ப்றெண்டன் மெக்முலென் 25 ஓட்டங்களுடன் களம் விட்டு வெளியேறினார்.

இந்த மூவரை விட அணித் தலைவர் ரிச்சி பெறிங்டன் (10), மார்க் வொட் (10 ஆ.இ.) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றனர்.

பந்துவவீச்சில் சோம்பால் காமி 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நந்தன் யாதவ் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

171 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நேபாளம் 19.2 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

குஷால் புர்த்தெல் 43 ஓட்டங்களையும் ஆசிப் ஷெய்க் 33 ஓட்டங்களையும் பெற்றதுடன் 55 பந்துகளில் 74 ஓட்டங்களைப் பகிரந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

எனினும், மூன்று விக்கெட்கள் 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்ததும் நேபாளத்தின் ஓட்ட வேகம் குறைந்தது.

அணித் தலைவர் ரோஹித் பௌடெல் 16 ஓட்டங்களைப் பெற்றார்.

தொடர்ந்து அனுபவசாலியான திப்பேந்த்ரா சிங் ஆய்ரீ, குய்சான் ஜா ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 36 பந்துகளில் 73 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றியை உறதிசெய்தனர்.

திப்பேந்த்ரா சிய் ஆய்ரீ 23 பந்துகளில் 4 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 50 ஓட்டங்களுடனும் குய்சான் ஜா ஒரு பவுண்டறி, 2 சிக்ஸ்கள் உட்பட 24 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் மைக்கல் லீஸ்க் 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஆட்டநாயகன்: திப்பேந்த்ரா சிங் ஆய்ரீ.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச ரி20இல் இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து...

2026-09-16 13:59:44
news-image

சுப்பர் லீக் கடைசிப் போட்டியில் புளூ...

2026-09-15 21:08:58
news-image

இங்கிலாந்துடனான ரி20 தொடர் தோல்விகளுக்கு முடிவு...

2026-09-15 19:18:47
news-image

சுப்பர் லீக் முதல் சுற்று இன்றுடன்...

2026-09-15 14:49:55
news-image

சாதனை வீரர் ருமேஷ் தரங்கவின் சேதமடைந்த...

2026-09-15 13:52:00
news-image

விமானத்தில் சேதமான 5 ஈட்டிகள் :...

2026-09-15 13:36:58
news-image

சுப்பர் சிக்ஸில் விளையாட  புளூ ஸ்டார் ...

2026-09-14 22:08:25
news-image

புளூ ஸ்டார் கழகத்தின் சுப்பர் சிக்ஸ்...

2026-09-14 14:18:46
news-image

இலங்கையை வீழ்த்தி ஆசிய சம்பியனான இந்தியா...

2026-09-14 11:13:41
news-image

91.09 மீற்றர்! இலங்கையின் ரூமேஷ் பத்திரகே...

2026-09-14 09:51:50
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ண சம்பியன்...

2026-09-14 05:36:19
news-image

றினோனை வீழ்த்தி முதல் சுற்றில் தோல்வி...

2026-09-13 21:10:41