இந்து சமுத்திர வலய நாடுகள் பொது இணக்கப்பாட்டை நோக்கி நகர வேண்டியதுள்ளது. இந்திய இந்த விடயத்தில் கடல்சார் பார்வை  என்ற கொள்கையின் அடிப்படையில் இந்து சமுத்திர பாதுகாப்பு , பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் தொடர்பாடல் உள்ளிட்ட பல்துறைசார் ஒற்றுமையை நோக்காக கொண்டு பரந்தளவில்  செயற்படுவதாக இந்திய வெளிவுறவு செயலர் எஸ். ஜெயங்கர் தெரிவித்தார். 
இந்து சமுத்திர மாநாட்டின் இரண்டாவது நாள் அமர்வுகள் வெள்ளிக்கிழமை அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதன் போது உரையாற்றுகையிலேயே இந்திய வெளிவுறவு செயலர் எஸ். ஜெயங்கர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
இந்து சமுத்திரத்தில் பல முக்கிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்தியா பிராந்திய நலன்கள் மற்றும் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை நேச நாடுகளுடன் ஒன்றிணைந்து முன்னெடுத்து வருகின்றது. பூகோள அரசியலில் ஏனைய உலக கடல்களை போன்று தற்போது இந்து சமுத்திரமும் பல்வேறு முக்கியத்துவங்களை வெளிப்படுத்தி வருகின்றது.கடல்சார் கலாசாரம் மற்றும் நடவடிக்கைகளை புரிந்துக் கொள்ள வேண்டியதுள்ளது. இந்து சமுத்திரம் பல்வேற சிறப்புகளுக்கு பாத்திரமானதாக அமைந்துள்ளது. பிராந்திய நாடுகளின் கூட்டு முயற்சிகள் தனி அடையாளத்தை நோக்கி நகர்த்தப்பட வேண்டும் என்பதுடன் , சவால்களை எதிர் கொள்வதிலும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். கடல் பயங்கரவாதம் , கடத்தல்கள் போன்ற சவால்கள் இந்து சமுத்திரம் எதிர் கொண்டுள்ள சவால்களாகும். அதே போன்று உலக கால நிலை மாற்றங்களும் சவால் மிக்கதாகவே உள்ளது. அண்மையில் ஏற்பட்ட இயற்கை மற்றும் மனித நடவடிக்கைகள் காரணமான அனர்த்தங்களின் போது ஒருமித்து செயற்படுவதில் அண்மைக்கால சம்பவங்கள் பல்வேறு விடயங்களை உணர்த்துகின்றன. யெமனில் இடம்பெரும் மோதல்கள் , நேபாளத்தில் இடம்பெற்ற பூமியதிர்ச்சி , மாலைத்தீவின் தண்ணீர் பிரச்சினை மற்றும் இலங்கையின் மண்சரிவு என்பன அண்மைகால அனுபவங்களாகும். 
நேச நாடுகளுடன் இணைப்புகளை வளர்ப்பதும் பாதுகாப்பதும்  இந்தியாவின் முக்கிய கொள்கையாக காணப்படுகின்றது. மறுப்புறம் இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு என்பது அடிப்படையான விடயமாகவே காணப்படுகின்றது. இந்த நிலைப்பாட்டிலிருந்து நேச நாடுகளுடன்  ஒத்துழைப்புடன் செயற்படுதல் அந்த நாடுகளின் மனிதாபிபமான தேவைகளின் போது ஒத்துழைப்புகளை வழங்குவதும் இந்தியாவின் கொள்கையாக காணப்படுகின்றது.