பெத்தும் குவித்த அபார சதம் இலங்கையை சுப்பர் 8க்கு அழைத்துச் சென்றது

Published By: Vishnu

17 Feb, 2026 | 12:27 PM
image

(பல்லேகலை அரங்கிலிருந்து நெவில் அன்தனி)

கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (16) நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தீர்மானம் மிக்க ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண பி குழு போட்டியில் பெத்தும் நிஸ்ஸன்க குவித்த அபார சதத்தின் உதவியுடன் இலங்கை சுப்பர் 8 சுற்று தகுதியைப் பெற்றது.

இந்தப் போட்டியில் சகலதுறைகளிலும் அற்புதமான ஆற்றல்களை வெளிப்படுத்திய இலங்கை 8 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றி பெற்றது.

பெத்தும் நிஸ்ஸன்க குவித்த ஆட்டம் இழக்காத அபார சதம், குசல் மெண்டிஸ் பெற்ற அரைச் சதம் என்பன இலங்கையின் வெற்றியை சுலபமாக்கின.

அவுஸ்திரேலியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 182 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 18 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 184 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.

பெத்தும் நிஸ்ஸன்க ஆரம்பம் முதல் கடைசிவரை மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 52 பந்துகளில் 10 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் உட்பட 100 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

ரி20 உலகக் கிண்ணத்தில் பெத்தும் நிஸ்ஸன்க குவித்த முதலாவது சதம் இதுவாகும். அத்துடன் இந்த வருட ரி20 உலகக் கிண்ணத்தில் சதம் குவித்த முதலாவது வீரர் என்ற சாதனையை பெத்தும் நிஸ்ஸன்க நிலைநாட்டினார்.

ரி20 உலகக் கிண்ணத்தில் மஹேல ஜயவர்தனவுக்குப் பின்னர் சதம் குவித்த இரண்டாவது  இலங்கை  வீரர் பெத்தும் நிஸ்ஸன்க ஆவார்.

அது மட்டுமல்லாமல் பல்லேகலை மைதானத்தில் ரி20 உலகக் கிண்ண சதம் குவித்த முதலாவது இலங்கையர் என்ற பெருமையையும் பெத்தும் நிஸ்ஸன்க தனதாக்கிக்கொண்டார்.

சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் பெத்தும் நிஸ்ஸன்க பெற்ற இரண்டாவது சதம் இதுவாகும். இலங்கை சார்பாக சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் இரண்டு சதங்கள் குவித்த முதலாவது  இலங்கை   வீரர் என்ற பெருமையையும் பெத்தும் நிஸ்ஸன்க பெற்றுக்கொண்டார்.

இந்த வருட ரி20 உலகக் கிண்ணத்தில் முதல் இரண்டு போட்டிகளில் பிரகாசிக்கத் தவறிய காமில் மிஷாரவுக்குப் பதிலாக இன்றைய போட்டிக்கு இலங்கை அணியில் இணைத்துக்கொள்ளப்பட்ட மூத்த வீரர் குசல் ஜனித் பெரேரா ஒரு ஓட்டத்தை மாத்திரம் பெற்று ஆட்டம் இழந்தார். (8 - 1)

எனினும் பெத்தும் நிஸ்ஸன்கவும் குசல் மெண்டிஸும் இரண்டாவது விக்கெட்டில் 66 பந்தகளில் 97 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.

குசல் மெண்டிஸ் 38 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 51 ஓட்டங்களைப் பெற்றார்.

இந்த வருட உலகக் கிண்ணப் போட்டியில் தொடர்ச்சியாக 3 அரைச்  சதங்கள் குவித்த முதலாவது வீரர் என்ற சாதனையை குசல் மெண்டிஸ் நிலைநாட்டினார்.

குசல் மெண்டிஸ் ஆட்டம் இழந்ததும் பெத்தும் நிஸ்ஸன்க சதம் குவிப்பதற்கு மிகுந்து ஒத்துழைப்புடன் துடுப்பெடுத்தாடிய பவன் ரத்நாயக்க 28 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பெத்தும் நிஸ்ஸன்கவும் பவன் ரட்நாயக்கவும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 34 பந்துகளில் 79 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கையின் வெற்றியை உறுதிசெய்தனர்.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அவுஸ்திரேலியா 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 181 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்பத்தில் அவுஸ்திரேலியாவுக்கு ஓட்டங்களை அள்ளிக்கொடுத்த இலங்கை பந்துவீச்சாளர்கள் 9ஆவது ஓவரிலிருந்து துல்லியமாக பந்துவீசி எதிரணியைக் கட்டுப்படுத்தினர்.

அணிக்கு மீண்டும் திரும்பிய அணித் தலைவர் மிச்செல் மார்ஷ் (54), ட்ரவிஸ் ஹெட் (56) ஆகிய இருவரும் 51 பந்துகளில் 104 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு ஸ்திரமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஆனால், அதன் பின்னர் விக்கெட்கள் அடுத்தடுத்து வீழ்ந்தன. (130 - 4 விக்.)

இந் நிலையில் ஜொஷ் இங்லிஸ் (27), க்லென் மெக்ஸ்வெல் (22) ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 30 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைக் கட்டியெழுப்ப முயற்சித்தனர்.

ஆனால், க்ளென் மெக்ஸ்வெல் உட்பட 6 விக்கெட்கள் 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தன.

துஷான் ஹேமன்த 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வெ வ்வேறு வியூகங்களுடன் பந்துவீசிய துஷ்மன்த சமீர 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: பெத்தும் நிஸ்ஸன்க.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பத்து வீரர்களுடன் விளையாடி ஜாவா லேனின்...

2026-03-15 01:31:22
news-image

பொன் அணிகளின் போர் வெற்றிதோல்வியின்றி முடிவு

2026-03-15 01:32:27
news-image

வெற்றிதோல்வியின்றி முடிவடைந்த நீல வர்ணங்களின் சமரில்...

2026-03-15 01:19:21
news-image

யாழ். இந்துவை வீழ்த்தி கடந்த வருட...

2026-03-15 01:15:04
news-image

149ஆவது நீலவர்ணங்களின் சமர்: சென் தோமஸ்...

2026-03-14 04:44:29
news-image

ஆதம் ஹில்மி குவித்த சதத்தின் உதவியுடன்...

2026-03-14 04:39:33
news-image

சென். பட்றிக்ஸ் அணிக்கு கடைநிலை வீரர்...

2026-03-13 21:00:51
news-image

இந்துக்களின் சமரில் அடுத்தடுத்த அத்தியாயங்களில்  சுபர்ணன்...

2026-03-13 21:06:05
news-image

கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமானது 15ஆவது இந்துக்களின்...

2026-03-13 15:07:11
news-image

15ஆவது இந்துக்களின் சமர்: யாழ். இந்துவின்...

2026-03-13 01:26:48
news-image

புனித அந்தோனியார் 157, திரித்துவம் 66...

2026-03-12 21:22:49
news-image

ஹார்மிஷன் துடுப்பாட்டத்திலும் ஆதித்தியா பந்துவீச்சிலும் அபாரம்;...

2026-03-12 20:22:39