கென்ய ஜனாதிபதி தேர்தலில் முறைக்கேடுகள் நிகழ்ந்துள்ளதால் உகுரு கென்யாட்டாவின் தேர்தல் வெற்றி செல்லுபடியாகாது என கென்ய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கென்ய வரலாற்றில் வாக்கெடுப்பு முடிவுகள் ரத்து செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

வாக்கெடுப்பு முடிவுகள் ரத்து செய்யப்பட்டதோடு எதிர்வரும் 60 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதி தெரிவிற்கான தேர்தல் நடத்த வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கென்ய உச்ச நீதிமன்றத்தின் இத் தீர்ப்பானது கென்யாட்டாவிற்கும் மூத்த எதிர் கட்சி தலைவர் ரெயாலா ஒடிங்காவிற்குமிடையில் புதிய போட்டியை உருவாக்கியுள்ளதாக அந் நாட்டு அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

கென்யாவின் மேற்குப் பகுதி ஒடிங்காவின் வலுவான கோட்டையாகும். எனினும் கடந்த மூன்று தேர்தல்களிலும் ஒடிங்காவிற்கு தோல்வியே பரிசாக கிட்டியது.

தனது தோல்வியை தொடர்ந்து ஒடிங்கா எல்லா தேர்தல்களிலும் மோசடி நடந்துள்ளதாக குற்றம் சாட்டி உச்ச நீதி மன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2013ஆம் ஆண்டு ஒடிங்காவின் தேர்தல் மோசடி தொடர்பான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி  செய்துள்ளது  என்பதும் குறிப்பிடத்தக்கது.