மும்பையில், ஐந்து மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34 ஆக உயர்வடைந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

மும்பையில் உள்ள பிந்தி பஜார் பகுதியில், நேற்று காலை, 117 ஆண்டுகள் பழைமையான ஐந்து மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. 

ஏற்கெனவே வெள்ளத்தில் தத்தளித்து வரும் மும்பையில், இந்த விபத்து மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில், ஒற்றை இலக்கத்திலிருந்த பலியானோரின் எண்ணிக்கை, தற்போது உயர்ந்துகொண்டு செல்கின்றது.

நேற்று இரவு முழுவதும் மீட்புப் பணிகள் இடம்பெற்றுள்ளன. இதில், பலியானோரின் எண்ணிக்கை 34 ஆக உயர்வடைந்துள்ளது. 25 ஆண்களும் 9 பெண்களும் இந்தக் கோர விபத்தில் உயிரிழந்துள்ளனர். 

மேலும், 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். அதில் 5 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. தீயணைப்பு படையைச் சேர்ந்த 6 அதிகாரிகள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த ஓர் அதிகாரியும் இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர்.

விபத்திற்கான காரணம் இன்னும் அதிகாரபூர்வமாக கண்டறியப்படவில்லை. ஆனால், தொடர்ந்து பெய்த பேய் மழை காரணமாகவே, கட்டிடம் இடிந்துள்ளதாகக் தெரிவிக்கப்படுகின்றது. அந்தக் கட்டடத்தில், மொத்தம் 12 குடும்பங்கள் வசித்துவந்துள்ளன. மும்பையில் கட்டிடம் இடிந்து விழுவது தொடர்கதையாக இடம் பெறுவதாகவும் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இதுவரை நான்கு இடங்களில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.