(நெவில் அன்தனி)
பத்தாவது ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணத்தில் இதுவரை இரண்டு இலகுவான வெற்றிகளை ஈட்டி மிகச் சிறந்த நிகர ஓட்ட வேக அடிப்படையில் பி குழுவில் முன்னிலையில் இருக்கும் இலங்கைக்கு உண்மையான சோதனை கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று நடைபெறவுள்ள அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது.
அயர்லாந்து, ஓமான் ஆகிய அணிகளை கொழும்பிலும் கண்டியிலும் இலகுவாக வெற்றிகொண்ட இலங்கை, மூன்றாவது வெற்றியை ஈட்டினால் இக் குழுவிலிருந்து முதல் அணியாக சுப்பர் 8 சுற்றில் விளையாட தகுதிபெறும்.
ஆனால், அயர்லாந்தை இலகுவாக வெற்றிகொண்ட பின்னர் ஸிம்பாப்வேயிடம் அடைந்த தோல்வியால் நொந்துபோயுள்ள அவுஸ்திரேலியா நெருக்கடிக்கு மத்தியில் இன்றைய போட்டியில் என்ன விலை கொடுத்தேனும் இலங்கையை வீழ்த்த முயற்சிக்கும்.
இதன் காரணமாக இலங்கைக்கு இன்றைய போட்டி இலகுவாக அமையும் என எதிர்பார்க்க முடியாது.
ஐசிசி உலகக் கிண்ணப் போட்டிகள் இலங்கையில் நடைபெற்ற போதெல்லாம் இறுதிப் போட்டி அல்லது அரை இறுதிவரை முன்னேறிய இலங்கை, இப்போது 14 வருடங்களின் பின்னர் சொந்த மண்ணில் நடைபெறும் ரி20 உலகக் கிண்ணத்தில் முதலில் சுப்பர் 8 சுற்றில் விளையாடுவதற்கான தகுதியை பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும்.
இந்த வருட ரி20 உலகக் கிண்ணப் போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்னர் முன்னாள் சம்பியன்களான இலங்கை (2014), அவுஸ்திரேலியா (2021) ஆகியன பி குழுவிலிருந்து சுப்பர் 8 சுற்றுக்கு இலகுவாக முன்னேறும் என எதிர்வுகள் கூறப்பட்டது.
ஆனால், அவுஸ்திரேலியாவை ஸிம்பாப்வே வீழ்த்தியதால் சுப்பர் 8 சுற்றுக்கான இரண்டு அணிகளைத் தீர்மானிப்பதில் நிகர ஓட்ட வேகம் முக்கிய பங்கு வகிக்கும் நிலை தோன்றியுள்ளது.
ஒருவேளை இன்றைய போட்டியில் இலங்கையையும் கடைசிப் போட்டியில் ஒமானையும் அவுஸ்திரேலியாவும் 19ஆம் திகதி ஸிம்பாப்வேயை இலங்கையும் வெற்றிகொண்டால் இந்த மூன்று அணிகளும் 6 புள்ளிகளைப் பெறுவதுடன் நிகர ஓட்ட வேகம் முதல் இரண்டு இடங்களைத் தீர்மானிக்கும்.
அத்தகைய சூழ்நிலையைத் தவிர்த்து அவுஸ்திரேலியாவை வெற்றிகொள்வதற்கு தசுன் ஷானக்க தலைமையிலான இலங்கை அணி மிகச் சிறந்த வியூகங்களுடன் கடுமையாக முயற்சிக்கவுள்ளது.
எவ்வாறாயினும் இலங்கையின் ஆரம்ப வீரர்களான பெத்தும் நிஸ்ஸன்கவும் காமில் மிஷாரவும் ஸ்திரமான ஆரம்பங்களை இந்த உலகக் கிண்ணத்தில் இட்டுக்கொடுக்காதது பெருங்குறையாக காணப்படுகிறது.
இன்றைய போட்டியில் காமில் மிஷாரவுக்குப் பதிலாக குசல் பெரெராவுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான பத்து ரி20 போட்டிகளில் 297 ஓட்டங்களைப் பெற்றுள்ள பெத்தும் நிஸ்ஸன்க இன்றைய போட்டியில் கணிசமான ஓட்டங்களைப் பெற்று சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுப்பது அவசியம்.
அதேவேளை, உபாதை காரணமாக முதல் போட்டியுடன் குழாத்திலிருந்து விலகிக்கொண்ட இலங்கையின் நட்சத்திர சுழல்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்கவுக்குப் பதிலாக ஓமான் போட்டிக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட துஷான் ஹேமன்த சிறப்பாக பந்துவீசாதது மற்றொரு குறையாக காணப்படுகிறது.
ஒருவேளை, துஷான் ஹேமன்த அணியில் இடம்பெறாவிட்டால் அவருக்குப் பதிலாக யாரை இணைத்துக்கொள்வது என்பதில் அணி முகாமைத்துவம் சிக்கலை எதிர்கொள்ளும். துஷான் ஹேமன்த இறுதி அணியில் இடம்பெறாவிட்டால் சரித் அசலன்க, ஜனித் லியனகே ஆகிய சகலதுறை வீரர்களில் ஒருவர் இணைத்துக்கொள்ளப்பட வாய்ப்புள்ளது.
குசல் மெண்டிஸ், பவன் ரத்நாயக்க, தசுன் ஷானக்க, கமிந்து மெண்டிஸ் ஆகியோர் இந்தப் போட்டியிலும் கணிசமான ஓட்டங்களைப் பெற்றுக்கொடுப்பார்கள் என நம்பப்படுகிறது.
அதேபோன்று பந்துவீச்சில் துஷ்மன்த சமீர, மதீஷ பத்திரண, மஹீஷ் தீக்ஷன, துனித் வெல்லாலகே, கமிந்து மெண்டிஸ், துஷான் ஹேமன்த (விளையாடினால்) ஆகியோர் அவுஸ்திரேலியா துடுப்பாட்ட வீரர்களுக்கு சோதனை கொடுக்கும் வகையில் கட்டுப்பாட்டுடன் இலக்குகளை நோக்கி பந்துவீசுவது அவசியமாகும்.
அவுஸ்திரேலிய அணித் தலைவர் மிச்செல் மார்ஷின் உடல் உறுப்பில் இரத்தக் கசிவு ஏற்பட்டதால் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை.
எவ்வாறாயினும் மார்ஷ் பூரண குணமடைந்து மருத்துவ ஆலோசனைகள் விளையாட அனுமதித்தால் இன்றைய போட்டியில் பங்குபற்ற வாய்ப்பு உள்ளது.
இலங்கையும் அவுஸ்திரேலியாவும் ரி20 உலகக் கிண்ணத்தில் சந்தித்துக்கொண்ட 5 சந்தர்ப்பங்களில் 4 - 1 என்ற ஆட்டங்கள் அடிப்படையிலும் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் சந்தித்துக்கொண்ட 26 சந்தர்ப்பங்களில் 16 - 10 என்ற ஆட்டங்கள் அடிப்படையிலும் அவுஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது.
எவ்வாறாயினும் இன்றைய போட்டியில் எந்த அணி சகலதுறைகளிலும் அதிசிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்துகிறதோ அந்த அணிக்கே வெற்றி கிட்டும்.

அணிகள் (பெரும்பாலும்)
இலங்கை: பெத்தும் நிஸ்ஸன்க, காமில் மிஷார அல்லது குசல் பெரேரா,, குசல் மெண்டிஸ், பவன் ரத்நாயக்க, கமிந்து மெண்டிஸ், தசுன் ஷானக்க (தலைவர்), துனித் வெல்லாலகே, துஷான் ஹேமன்த அல்லது சரித் அசலன்க அல்லது ஜனித் லியனகே, துஷ்மன்த சமீர, மஹீஷ் தீக்ஷன, மதீஷ பத்திரண.
அவுஸ்திரேலியா: மிச்செல் மார்ஷ் (தலைவர்) அல்லது மெத்யூ ஷோர்ட், ட்ரவிஸ் ஹெட், கெமரன் க்றீன், ஜொஷ் இங்லிஸ், டிம் டேவிட், க்லென் மெக்ஸ்வெல், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், மெட் ரென்ஷோ, கூப்பர் கொனலி, அடம் ஸம்ப்பா, நேதன் எலிஸ்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM