கல்வி அமைச்சு முதல் பாடசாலைகள் வரை அனைத்து அதிகாரிகளும் வினைத்திறனுடனும் மனிதாபிமானத்துடனும் அர்ப்பணிப்புடனும் சேவையாற்றவேண்டும் - பிரதமர்

13 Feb, 2026 | 04:56 PM
image

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகளின் போது, கொழும்பிலிருந்துகொண்டு கிராமங்கள் பற்றிய தீர்மானங்களை எடுக்கப்போவதில்லை எனவும், கட்டமைப்புக்குழுக்கள் மூலம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் ஊடாகத் தேவைகளுக்கேற்ப திட்டங்களை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கல்வி அமைச்சு முதல் பாடசாலைகள் வரை அனைத்து அதிகாரிகளும் வினைத்திறனுடன் செயற்பட அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

புதிய கல்விச் சீர்திருத்தம் மற்றும் கல்விப் பிரச்சினைகள் தொடர்பாக ஹம்பாந்தோட்டை மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் வியாழக்கிழமை (12) ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

பிரிவெனாதிபதிகள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள், அதிபர்கள் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்வைக்கப் பிரதமர் இதன்போது வாய்ப்பளித்தார். அதிபர் சம்பள முரண்பாடு, பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி, தேசிய மற்றும் மாகாண பாடசாலைகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளதால் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் பிரிவெனா கல்வியை மேம்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து அதிகாரிகள் இதன்போது கருத்துகளை முன்வைத்தனர்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்:

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து 2025ஆம் ஆண்டு முதல் நாம் கலந்துரையாடி, தரவுகளைச் சேகரித்துத் தயாராகி வந்தோம். அதில் அதிகாரிகள் என்ற ரீதியில் நீங்கள் மிகுந்த ஆர்வத்துடன் எமக்கு ஒத்துழைப்பு வழங்கினீர்கள். நாம் ஆரம்பித்துள்ளது ஒரு கடினமான, நீண்ட பயணம். எதிர்காலத்திலும் உங்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்.

சமூகத்தின் வேண்டுகோளுக்கு இணங்கவே புதிய கல்விச் சீர்திருத்தங்களை நாம் ஆரம்பித்தோம். பலர் இதற்காகப் பல்வேறு சந்தர்ப்பங்களில் முயற்சித்தனர். எமது அரசியல் நீரோட்டத்தில் நாம் புரிந்துகொண்ட விடயம் என்னவென்றால், இந்நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமானால் கல்வியில் மாற்றத்தை  ஏற்படுத்த வேண்டும் என்பதாகும். எமது பெறுமதியான சொத்து மனித வளமே. அந்த வளத்தை நாம் சரியாகக் கட்டியெழுப்ப வேண்டும்.

எமது நாட்டில் நிலவும் பல நெருக்கடிகளுக்கான தீர்வுகள் கல்வியிலேயே உள்ளன. பொருளாதாரப் பிரச்சினைகள், சமூகப் பிரச்சினைகள், போதைப்பொருள், வன்முறை, அரசியல் கலாசாரத்தின் வீழ்ச்சி, ஊழல், விரயம் மற்றும் மனித உறவுகளின் வீழ்ச்சி ஆகிய அனைத்துக்கும் தீர்வு கல்வியிலேயே தங்கியிருக்கின்றது. அரசாங்கம் என்ற ரீதியில் நாம் எதிர்பார்க்கும் மாற்றத்தை நாட்டில் ஏற்படுத்த வேண்டுமானால், கல்வி முறையில் மாற்றம் ஏற்படுவது அத்தியாவசியமாகின்றது.

கல்வி முறையில் உள்ள அழுத்தத்தைக் குறைக்கவும், பாடசாலை இடைவிலகலைக் கட்டுப்படுத்தவும், வேலைவாய்ப்பைப் பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பிள்ளைகளுக்கு எதிர்காலம் குறித்து நம்பிக்கையை ஏற்படுத்தவும் இக்கல்வி முறை அவசியமாகும்.

பாடசாலைக் கட்டமைப்பில் கிராமப்புற, நகர்ப்புற, தேசிய, மாகாண மற்றும் கஷ்டப் பிரதேச பாடசாலைகள் எனப் பல்வேறு சமத்துவமின்மைகள் காணப்படுகின்றன. இது இவ்வாறு தொடர முடியாது. அனைவரும் எமது பிள்ளைகள்; அவர்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்கப்பெற வேண்டும்.

பாடசாலைகளை ஆரம்பிப்பதோ அல்லது வகுப்புகளை அதிகரிப்பதோ அரசியல் தீர்மானமாக இருக்கக்கூடாது. அது கட்டமைப்புக்குழுவினால் எடுக்கப்படும் தீர்மானமாக அமைய வேண்டும். உங்கள் பிரிவைப் பற்றியும், கிராமத்தின் பொருளாதார நிலை மற்றும் மக்கள் தொகை பற்றியும் கட்டமைப்புக்குழுவின் பிரதிநிதிகளான நீங்களே அறிவீர்கள். உங்களின் தீர்மானங்களின்படி, தேவைகளுக்கேற்ப திட்டங்களைத் தயாரித்து, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களுடன் கலந்துரையாடி எமக்கு அனுப்புங்கள். நாம் தேவையான நிதி ஒதுக்கீடுகளையும் ஏனைய வசதிகளையும் வழங்க நடவடிக்கை எடுப்போம். நாம் கொழும்பிலிருந்துகொண்டு கிராமத்தின் தேவைகள் குறித்துத் தீர்மானம் எடுக்கமாட்டோம்.

சம்பள முரண்பாட்டைக் குறைக்க நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதிபர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் தற்போது தயாராக உள்ளது. பிரிவெனா கல்வியில் புதிய சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் கல்வி அமைச்சின் பிரிவெனா குழுவின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்குப் பிரிவெனாதிபதிகளின் ஒத்துழைப்பு எமக்குத் தேவைப்படுகின்றது.

அதிகாரிகளின் மந்தகதியால் ஏற்படும் தாமதங்கள் காரணமாகவே பெரும்பாலான ஆசிரியர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்குச் செல்கின்றனர். எனவே, கல்வி அமைச்சு முதல் பாடசாலை வரை அனைத்து அதிகாரிகளும் வினைத்திறனுடனும் மனிதாபிமானத்துடனும் செயற்பட அர்ப்பணிக்க வேண்டும்" எனப் பிரதமர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரிவெனாதிபதிகள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திட்வா சவாலை வெற்றிகொள்ளல்: 9 மாவட்டங்களில்...

2026-03-11 06:33:44
news-image

மக்களுக்கு வசதியான, பாதுகாப்பான, செயற்திறனான மற்றும்...

2026-03-11 06:31:06
news-image

ஜனாதிபதி அலுவலகத்தின் பழைய பாராளுமன்ற சபா...

2026-03-11 06:24:40
news-image

மத்திய கிழக்கில் வசிக்கும் உறவுகளை தொடர்புகொள்ள...

2026-03-11 06:13:51
news-image

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு பிலிப்பைன்ஸில் 'ஷிரீன்...

2026-03-11 06:10:57
news-image

எரிபொருள் விநியோகத்தை தடையின்றி முன்னெடுப்பதற்காகவே விலை...

2026-03-11 06:06:15
news-image

விமான நிலையத்தில் 32 கோடி ரூபாவுக்கும்...

2026-03-11 06:03:11
news-image

ஈரானிய கப்பல்களுக்கு நல்லெண்ண விஜயத்துக்கான அழைப்பே...

2026-03-11 06:00:45
news-image

மின்சார சபையின் மறுசீரமைப்பு : நான்கு...

2026-03-11 05:54:48
news-image

வீசாவுக்கான செல்லுபடியாகும் காலத்தை நீடிக்கும் யோசனைக்கு...

2026-03-11 05:45:00
news-image

உள்நாட்டு நிர்வாகத் தவறுகளை மத்திய கிழக்கு...

2026-03-11 05:43:34
news-image

மத்திய கிழக்கு போர் சூழல்; பாதிப்புக்கள்...

2026-03-11 05:40:18