அவுஸ்திரேலியாவை திக்குமுக்காடவைத்து வெற்றிகொண்டு வரலாறு படைத்தது ஸிம்பாப்வே

13 Feb, 2026 | 04:47 PM
image

(ஆர். பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி)

கொழும்பு, ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண பி குழு போட்டியில் அவுஸ்திரேலியாவை திக்குமுக்காட வைத்த ஸிம்பாப்வே 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டு வரலாறு படைத்தது.

இதன் மூலம் ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஸிம்பாப்வே வெற்றியீட்டியுள்ளது.

2007இல் நடைபெற்ற முதலாவது அத்தியாத்தில் அவுஸ்திரேலியாவை ஸிம்பாப்வே 5 விக்கெட்களால் வெற்றிகொண்டிருந்தது.

இப்போது 19 வருடங்களுக்கு பின்னர் அவுஸ்திரேலியாவை மீண்டும் சந்தித்த ஸிம்பாப்வே அபார வெற்றியை ஈட்டியது.

இன்றைய போட்டியில் சகலதுறைகளிலும் ஸிம்பாப்வே பிரகாசித்து அவுஸ்திரேலியாவை வெற்றிகொண்டதன் மூலம் பி குழுவுக்கான அணிகள் நிலையில் 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது.

இக் குழுவில் இலங்கை 4 புள்ளிகளுடன் 3.050 என்ற மிகச் சிறந்த நிகர ஓட்டவேகத்துடன் முதலிடத்தில் இருக்கிறது.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஸிம்பாப்வே, 20 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது.

ஸிம்பாப்வே சார்பாக  துடுப்பெடுத்தாடிய நான்கு வீரர்களும் தமது இன்னிங்ஸ்களை நன்கு திட்டமிட்டு விளையாடிமை ஏனைய அணிகளுக்கு எடுத்துக்காட்டாக இருந்தது.

ஸிம்பாப்வேயின் மொத்த எண்ணிக்கையில் 86 ஓட்டங்களே பவுண்டறிகளில் வந்தன. மற்றைய 83 ஓட்டங்கள் ஒற்றைகள், இரட்டைகளாக கிடைத்தன.

ப்றயன் பெனெட், தடிவன்ஷே மாருமணி ஆகிய இருவரும்  ஆரம்ப விக்கெட்டில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது தடிவன்ஷே மாருமணி 35 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

அதனைத் தொடர்ந்து ப்றயன் பெனெட், ரெயான் பியூரி ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 70 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

மொத்த எண்ணிக்கை 131 ஓட்டங்களாக இருந்தபோது மாக்கஸ் ஸ்டொய்னிஸ் வீசிய பந்தை ரெயான் பியூரி ஓங்கி அடித்தபோது அந்தப் பந்து ஸ்டொய்னிஸில் கையைப் பதம்பார்த்து காயப்படுத்தியது.

ஸ்டொய்னிஸ் உடனடியாக சிகிச்சைக்காக களத்தை விட்டு வெளியேறியதும் அவரது ஓவரைப் பூர்த்தி செய்ய அழைக்கப்பட்ட கெமரன் க்றீன் முதல் பந்திலேயே ரெயான் ப்யூரியை ஆட்டம் இழக்கச் செய்தார்.

நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய ப்றயன் பெனெட் 56 பந்துகளில் 7 பவுண்டறிகள் உட்பட 64 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

அணித் தலைவர் சிக்கந்தர் ராஸா 13 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 25 ஓட்டங்களைப் பெற்றார்.

அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத மூன்றாவது விக்கெட்டில் 38 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

கெமரன் க்றீன் 6 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் மார்க்ஸ் ஸ்டொய்னிஸ் 17 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

170 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 19.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 146 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

அவுஸ்திரேலிய அணியில் அதிரடிக்கு பெயர்பெற்ற ட்ரவிஸ் ஹெட், கெமரன் க்றீன், டிம் டேவிட் ஆகியோர் இடம்பெற்றபோதிலும் அவர்களால் எதையும் சாதிக்க முடியாமல் போனது.

அவுஸ்திரேலிய இன்னிங்ஸில் மூவர் மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கையைத் தொட்டனர்.

அவர்களில் தனித்து போராடிய மெட் ரென்ஷோ 44 பந்துகளில் 65 ஓட்டங்களைப் பெற்றார்.

க்லென் மெக்ஸ்வெல் சிரமத்திற்கு மத்தியில் 32 ஓட்டங்களையும் பதில் அணித் தலைவர் ட்ரவிஸ் ஹெட் 17 ஓட்டங்களையும்    பெற்றனர்.

காயத்துக்குள்ளான மாக்கஸ் ஸ்டொய்னிஸ் 6 ஓட்டங்ளை மாத்திரமே பெற்றார்.

பந்துவீச்சில் ப்ளெசிங் முஸராபனி 17 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ப்றட் இவான்ஸ் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டயலொக் ஜனாதிபதி கிண்ண நொக் அவுட்...

2026-03-10 15:09:09
news-image

இலங்கை அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக...

2026-03-09 19:42:23
news-image

நியூஸிலாந்தை 96 ஓட்டங்களால்  வீழ்த்தி மூன்று...

2026-03-08 23:35:05
news-image

சம்பியன் ஆவதற்கான ஜாவா லேன், செரெண்டிப்...

2026-03-08 21:38:46
news-image

இந்தியா 255 ஓட்டங்களைக் குவித்தது; சஞ்சு...

2026-03-08 21:20:47
news-image

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து களத்தடுப்பை...

2026-03-08 18:54:43
news-image

ரி20 உலகக் கிண்ணத்தில் வரலாற்று வெற்றிக்கு...

2026-03-08 20:25:49
news-image

புனித பத்திரிசியார் - யாழ்ப்பாணம் கல்லூரி...

2026-03-08 10:58:26
news-image

119ஆவது வடக்கின் சமர்: திசோன் சகலதுறைகளிலும்...

2026-03-08 15:52:35
news-image

சம்பியன்ஸ் லீக்: சம்பியன் பட்டத்திற்கு கடும்...

2026-03-07 15:09:28
news-image

19ஆவது வடக்கின் சமர்:  அபிஜோய்ஷாந்த் குவித்த...

2026-03-06 18:54:08
news-image

இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா இறுதிப் போட்டியில்...

2026-03-05 23:47:04