மை லார்ட் - திரைப்பட விமர்சனம்
தயாரிப்பு : ஒலிம்பியா மூவிஸ்
நடிகர்கள் : சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், குரு சோமசுந்தரம், ஜெயபிரகாஷ், ஆஷா சரத், கோபி நயினார், வசு மித்ரா, அருள் எழிலன் மற்றும் பலர்
இயக்கம் : ராஜு முருகன்
மதிப்பீடு : 3 / 5
அழுத்தமான கதாபாத்திரங்களை தெரிவு செய்து தொடர்ந்து வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெறும் படைப்புகளில் தன் பங்களிப்பை அர்ப்பணிப்புடன் அளித்து வரும் சசிகுமார் நடிப்பில் உருவாகி, வெளியாகி இருக்கும் 'மை லார்ட் ' எனும் திரைப்படம் - எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையினதான அதிர்வை ஏற்படுத்தியதா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
தமிழகத்தில் உள்ள கோவில்பட்டி எனும் ஊரில் ரத்த உறவுகளற்ற முத்துச்சிற்பி ( சசிகுமார்) எனும் இளைஞன்- அங்கு இயங்கி வரும் வள்ளலார் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் அடைக்கலமாகி பணியாற்றி வருகிறார்.
அதே தொண்டு நிறுவனத்தில் அடைக்கலமாகி சுசீலா ( சைத்ரா ஜே. ஆச்சார்) என்ற பெண்ணும் பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் தம்பதிகள் ஆகிறார்கள்.
சுசீலாவிற்கு உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. வைத்திய சிகிச்சைக்காக அரசாங்க வைத்திய சாலையில் இருந்து தனியார் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வேண்டிய நிலை உருவாகிறது. இதற்காக கடன் வாங்குகிறார்.
அந்த கடனை திருப்பி செலுத்துவதற்காக கடன் கொடுத்தவர் சிறுநீரகங்களை வலுக்கட்டாயமாக கேட்க.. அதனால் அச்சமடைந்து அங்கிருந்து வேற இடத்திற்கு புலம்பெயர்கிறார்கள்.
ஆனால் இந்த தம்பதியினருக்கு கடன் கொடுத்தவர் அரசியல் பின்னணி கொண்டவர் என்பதால்.. அப்பகுதியில் பிரபலமான தொழிலாக திகழும் பட்டாசு தயாரிக்கும் தொழிலில் ஏற்பட்ட விபத்தில் மரணம் அடைந்து விட்டதாக கூறி, அவர்களுக்கான அரசாங்கம் வழங்கும் நிவாரணத் தொகையை பெறுகிறார்.
இதனால் முத்துச்சிற்பியும், சுசீலாவும் உயிருடன் இருந்தாலும் சட்டபூர்வமாக மரணம் அடைந்தவர்கள். இவர்கள் மீண்டும் அரசாங்க ஆவணத்தின் படி உயிருடன் வாழ வேண்டும் என திட்டமிடுகிறார்கள். அவர்களுடைய திட்டமும், எண்ணமும் பலித்ததா? இல்லையா? என்பது தான் இப்படத்தின் கதை.
இந்திய தேசிய அளவில் அதிகார பலம்+ ஆள் பலம் + பண பலம் + படைத்த பெண் அரசியல்வாதி ஒருவர் உடல் உறுப்பு மாற்று சத்திர சிகிச்சையை செய்து கொண்டால் தான் வாழ இயலும் என்ற நிலையில் இருக்கிறார்.
அதே உறுப்பை ஏமாற்று கும்பலிடம் இழந்து இயல்பான வாழ்வியலுக்கான போராட்டத்தை எதிர்கொண்டிருக்கும் விளிம்பு நிலை மனிதனும் ஒரு புள்ளியில் சந்திக்கிறார்கள்.
அதன் பிறகு என்ன நடந்தது? என்பதை இயக்குநர் ராஜு முருகன் தனக்கே உரிய படைப்பு சுதந்திரத்துடன் விழிப்புணர்வு - வள்ளலார் வழிபாடு மற்றும் கொள்கை - இன்றைய எளிய மக்களின் நாளாந்த வாழ்வியல் - தேசிய அரசியல்- என பல விடயங்களுடன் இணைத்து திரைக்கதையை அமைத்திருக்கிறார்.
படத்தில் இடம்பெறும் உரையாடல் மிகப்பெரும் கவனத்தை ஈர்க்கிறது. அதிலும் குறிப்பாக 'உலகத்திலேயே பெரிய ஜனநாயக நாடு இந்தியா தான். உலகத்திலேயே மிகப்பெரிய பிளாக் மார்கெட் நாடும் இந்தியா தான்' என்ற உரையாடல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
முதல் பாதியில் திரைக்கதையில் இருந்த அடர்த்தியும் ,வீரியமும் இரண்டாம் பாதியில் மிஸ்ஸிங். பல இடங்களில் வணிக சமரசங்கள் - தணிக்கை குழுவினருக்கான சமரசங்கள்- கதாபாத்திர வடிவமைப்பிற்கான சமரசங்கள்- என நிறைய சமரசங்கள் இருப்பதால் ஆச்சரியப்படுத்த வேண்டிய விடயம் - சாதாரண தகவலாக கடந்து செல்கிறது.
முத்துச் சிற்பி கதாபாத்திரம் வள்ளலாரின் வழிபாட்டையும், கொள்கைகளையும் கடைப்பிடிப்பது போல் வடிவமைக்கப்பட்டிருந்தாலும்... அவர் அதனை தன்னுடைய வாழ்வில் சாத்தியப்படுத்திய தருணங்கள் 'அக்மார்க்' சினிமாத்தனம் மட்டுமல்ல ஆக சிறந்த நகைமுரண். இருப்பினும் திரையில் வள்ளலாரின் வழிபாட்டை இயக்குநர் காட்சிப்படுத்தியிருப்பதை பாராட்டலாம்.
முத்துச்சிற்பியாக நடித்திருக்கும் சசிகுமார் தன் வழமையான உடல் மொழியால் அந்த கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்து ரசிகர்களை கவர்கிறார்.
முத்துச்சிற்பியை விட பல இடங்களில் அவரது மனைவி சுசீலா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கன்னட நடிகை சைத்ராவின் நடிப்பு சபாஷ் பெறுகிறது. அதிலும் மறைந்த அவரது தந்தை அவரது உடலில் ஆவியாக புகுந்து பேசும் இடத்தில் வியப்பளிக்கிறார்.
அமைச்சர் சுஜாதா மோகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை ஆஷா சரத்தின் நடிப்பு பல இடங்களில் 'அட!' போட வைத்து அவருடைய அனுபவத்தை வெளிப்படுத்துகிறது.
பத்திரிக்கையாளர் கதிர்வேலன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் குரு சோமசுந்தரம், விட்னஸ் கோபி எனும் சட்டத்தரணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் கோபி நயினார் ஆகியோரும் ரசிகர்களின் கவனத்தை கவர்கின்றனர்.
நீதியரசர் ஒருவரது உரையாடலில் இந்தியாவில் உயர் ஜாதி பிரிவினர் என குறிப்பிடப்படும் ஒரு பிரிவினரின் சொல்லாடலை இடம்பெற வைத்திருப்பது.. கதாபாத்திரங்களுக்கான சமநிலையா? அல்லது வேறு ஒன்றா? என்பது புரியாத புதிர்.
அறிமுக பாடல் காட்சியில் இசையமைப்பாளர்- ஒளிப்பதிவாளர் - இயக்குநர் - கலைஞர்கள் ஆகியோரது ஒருங்கிணைப்பு .. ரசிகர்களுக்கு போனஸ்.
'சக மனிதர்கள் மீது அன்பும் , நம்பிக்கையும் செலுத்தினால் நீ தான் கடவுள்' என்பதை சொல்ல விரும்பிய இயக்குநருக்கு நடிகர்- நடிகைகள்- தொழில்நுட்ப கலைஞர்கள் - என அனைவரும் தங்களுடைய அர்பணிப்புடன் கூடிய உழைப்பை வழங்கி இருக்கிறார்கள். ஆனால் பார்வையாளர்களுக்கு அது முழுமையாக கடத்தப்பட்டதா? என்பதில் ஒருமித்த கருத்து எழவில்லை என்பதுதான் ஒப்புக்கொள்ள வேண்டிய மறுக்க இயலாத உண்மை.
மை லார்ட் - 'வாய்'தா.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM