இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியினை 168 ஓட்டங்களால் இந்தியா அணி வீழ்த்தி அபார வெற்றியை பெற்று கொண்டது.

பகலிரவு போட்டியாக கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இன்று இடம்பெற்ற குறித்த போட்டியின் நாயண சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித்தலைவர் விராட் கோலி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

அதன்படி , முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்தியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 375 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இந்தியா அணி சார்பாக அதிரடியாக விளையாடிய அணித்தலைவர் கோலி 131 ஓட்டங்களையும், ரோஹித் சர்மா 104 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.டோனி 49 ஓட்டங்களையும், பாண்டி 50 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக அஞ்சலோ மெத்தியூஸ் இரண்டு விக்கெட்டுக்களை பெற்றுக்கொண்டார்.லசித் மாலிங்க , விஷ்வ பிரனாந்து மற்றும் தனஞ்சய ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையில்,  376 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி 42.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 207 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பாக அதிக பட்ச ஓட்டங்களாக அஞ்சலோ மெத்தியூஸ் 70 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.சிறிவர்தன 39 ஓட்டங்களையும்,வனிந்து ஹசரங்க 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்திய அணிச்சார்பில் பந்து வீச்சில் பும்ரா ,பாண்டியா மற்றும் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.இதன்படி , ஏற்கனவே இப்போட்டித் தொடரை கைப்பற்றியுள்ள இந்தியா அணி 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய அணித்தலைவர் விராட் கோலி தெரிவுச்செய்யபட்டார்.