அழுத்தம் என்பது பெரிய விடயமல்ல. இளம் வீரர்களின் மனநிலையை சீர்செய்து அடுத்த இருபோட்களிலும் வெல்வதே எனது நோக்கம் என இலங்கை அணியின் தற்போதைய தலைவர் லசித் மாலிங்க தெரிவித்தார்.

இந்திய அணிக்கிடையிலான 4 ஆவது ஒருநாள் தொடர் நாளை கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ள நிலையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே மாலிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

ஐ.பி.எல். போட்டிகளில் 3-5 வருடம் விளையாடியுள்ளேன். எனவே இந்திய வீரர்கள் எனது பந்துவீச்சு நுட்பங்களை சரியான முறையில் கற்றுள்ளனர். இருந்தாலும் நான் எதிர்காலத்தில் பந்துவீச்சு நுட்பங்களை மாற்றியமைந்து விளையாட நினைத்துள்ளேன்.

இப் போட்டி எனக்கு சவாலாக இருக்கும். எமது அணியில் திறமையான மற்றும் அனுபவமுள்ள இளம் வீரர்கள் உள்ளனர். தேசிய அணிக்காக நான் கடந்த 14 வருடங்களாக விளையாடி வருகின்றேன். இம்முறை இளம் வீரர்களை வழிநடத்தும் பொறுப்பு எனக்கு மிகவும் சவாலானதாக இருக்கும். கடந்த போட்டிகளில் நாம் தோல்வியடைந்துள்ளோம். 

கடந்த 19 மாதங்களாக முழங்களால் உபாதை காரணமாக போட்டிகளில் விளையாட முடியாமல் போனது. தற்போது நான் பூரண குணமடைந்துள்ளேன். என்னால் இப்போது 10 ஓவர்கள் எவ்வித தடையுமில்லாது பந்துவீச முடிகின்றது. 

அந்தவகையில் நாம் அடுத்த இரு போட்டிகளையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றோம். நான் தற்போது 299 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளேன். அது குறித்து நான் பெருமையடைகின்றேன். எனது நாட்டுக்காக எதையாவது சாதிக்கத் துடிக்கின்றேன்.

தெரிவுக்குழுவில் சனத் இருக்கும் போது கடந்த 2014 ஆம் ஆண்டு எனக்கு தலைமைப்பொறுப்பு கொடுக்கப்பட்டது நான் அதனை சரியாக செய்து அணியை வெற்றிபெறச் செய்தேன்.

அந்தவகையில் தற்போதும் தெரிவுக்குழுவில் சனத் இருக்கும் போது எனக்கு தலைமைப்பொறுப்பு கிடைத்துள்ளது. எனது தலைமையில் இளம் இலங்கை அணியை வழிநடத்தி அடுத்த இரு போட்டிகளையும் வெற்றிபெறச்செய்வேன்.

கடந்த காலத்தில் எமது அணியில் பல அனுபவ வீரர்கள் இருந்தனர். இப்போது நல்ல திறமையான இளம் வீரர்கள் உள்ளனர். அவர்கள் இலங்கையின் எதிர்கால வீரர்கள்.

சந்திமல் மற்றும் கப்புகெதர ஆகியோர் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாத நிலையேற்பட்டுள்ளது. கப்புகெதரவுக்கு பதிலாக டில்சசான் முனவீர அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். நாளைய களநிலைமைகளின் அடிப்படையில் வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும்.

கடந்த போட்டிகளில் யார் தலைமைப் பொறுப்பையேற்று வழிநடத்தினார்கள் என்பது பற்றி ஆராய்ந்து பார்க்கள் நான் விரும்பவில்லை. அது நிறைவடைந்துவிட்டது. எனக்கு கொடுத்துள்ள பொறுப்பு அடுத்த இருபோட்டியிலும் இலங்கை அணியை வழிநடத்தும் படி. நான் இளம் வீரர்களுக்கு எனது அனுபவத்தை பகிர்ந்து அவர்களுடன் பேசி மனநிலையை சீர்செய்து கிரிக்கெட் விளையாட்டை முன்னோக்கி எடுத்துச்செல்லவே நான் எதிர்பார்த்துள்ளேன்.

வீரர்களின் மனநிலையை புரிந்து அதை முதலில் சீர்செய்துகெள்ள எதிர்பார்க்கின்றேன். அது சரியாகும் பட்சத்தில் நல்ல பெறுபேறுகளை பெறமுடியும் என எண்ணுகின்றேன்.

அழுத்தும் என்பது எனக்கு பெரிய விடயமாக கருதவில்லை. இதைவிட மிகவும் மோசமான அழுத்தங்களின் போது போட்டிகளில் விளையாடி பந்து வீசியுள்ளேன். 

எனது அணி வீரர்களுடன் பேசி அவர்களது மனநிலையை திடமாக்கி அழுத்தங்களை இல்லாமல் செய்வதே எனது தலைமைப்பொறுப்பின் முக்கிய நோக்கம். அழுத்தத்தை மறந்து நாம் பதினொருவரும் விளையாடும் போது நல்ல பிரதிபலனை அடையமுடியும்.

கடந்த போட்டிகளில் என்னால் விக்கெட்டுகளை பெறமுடியாது போனது. எனக்கு 300 விக்கெட்டுகளை கைப்பற்றுவது என்பது குறிக்கோள் அல்ல. நல்லமுறையில் பந்துவீசி அணியை வெற்றிப்பாதைக்கு  வழிநடத்துவதே தற்போதைய குறிக்கோள். பந்தை நன்றாக வீசும் போது விக்கெட்டை கைப்பற்ற முடியுமென நினைக்கின்றேன். 

தற்போது பல பிரச்சினைகள்  வெளிக்கிழம்பியுள்ளன. வீரர்களுக்கும் முகாமைத்துவத்திற்கும் இடையில் எவ்வித பிளவுகளுமில்லை. நாம் முகாமைத்துவத்துடன் நல்ல மனநிலையில் உள்ளோம். எதிர்வரும் போட்டிகளில் திறமையாக செயல்பட்டு வெற்றிபெறுவதே எமது இலக்கு என அவர் மேலும் தெரிவித்தார்.