பகுதிநேர பந்துவீச்சாளர்களிடம் பணிந்தது இலங்கை; தொடரை 3 - 0 என முழுமையாக சுவீகரித்தது இங்கிலாந்து

Published By: Vishnu

04 Feb, 2026 | 12:10 AM
image

(நெவில் அன்தனி)

கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற மூன்றாவதும் கடைசியுமான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 12 ஓட்டங்களால் வெற்றிகொண்ட இங்கிலாந்து, 3 போட்டிகள் கொண்ட தொடரை 3 - 0 என முழுமையாக கைப்பற்றியது.

இந்த தோல்வியை அடுத்து இன்னும் சில தினங்களில் ஆரம்பமாகவுள்ள ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியினால் ஜமாய்க்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அத்துடன் ரி20 உலகக் கிண்ணத்துக்கு சரியான வீரர்களையா முந்தைய தேர்வுக் குழுவினர் தெரிவு செய்துள்ளார்கள் என கிரிக்கெட் விமர்சகர்கள் கேள்விக் கனைகளைத் தொடுத்த வண்ணம் உள்ளனர்.

இங்கிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 129 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 19.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 116 ஓட்டங்களுக்கு சுருண்டு தோல்வியைத் தழுவியது.

இந்தப் போட்டியில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட இலங்கை, துடுப்பாட்டத்தில் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

பெரும்பாலான துடுப்பாட்ட வீரர்கள் பந்துகளை சரியாக புரிந்துகொள்ளாமல் அவசரப்பட்டு அடிகளைத் தெரிவுசெய்து விக்கெட்களைத் தாரை வார்த்தனர்.

குறிப்பாக இங்கிலாந்தின் பகுதிநேர பந்துவீச்சாளர்களைக் கூட இலங்கை துடுப்பாட்ட வீரர்களால் சரியாக எதிர்கொள்ள முடியாமல் போனது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜேக்கப் பெத்தெல், வில் ஜேக்கப்ஸ் ஆகியோர் தம்மிடையே 7 விக்கெட்களைப் பகிர்ந்து தங்களால் முழுநேர பந்துவீச்சாளர்களாக முடியும் என்பதை எடுத்துக்காட்டினர்.

ஜேக்கப் பெத்தேல் இதற்கு முன்னர் 22 போட்டிகளில் விளையாடி 4 இன்னிங்ஸ்களில் மாத்திரம் பந்துவீசி 4 விக்கெட்களையும் வில் ஜெக்ஸ் இதற்கு முன்னர் 31 போட்டிகளில் விளையாடி 8 இன்னிங்ஸ்களில் மாத்திரம் பந்துவீசி 4 விக்கெட்களையும் கைப்பற்றி இருந்தனர்.

மேலும் அவர்கள் இருவரும் 6ஆவது, 7ஆவது பந்துவீச்சாளர்களாக இங்கிலாந்து அணித் தலைவர் ஹெரி ப்றூக்கினால் பயன்படுத்தப்பட்டனர்.

அவர்கள் இருவரது சிறப்பான பந்துவீச்சுகள் காரணமாக துஷ்மன்த சமீரவின் அபரிமிதமான பந்துவீச்சு பயனற்று போனது.

13 ஓவர்கள் நிறைவில் இலங்கை 4 விக்கெட்களை இழந்து 90 ஓட்டங்களைப் பெற்று சிறந்த நிலையில் இருந்தது.

ஆனால், கடைசி 6 விக்கெட்கள் 26 ஓட்டங்களுக்கு சரிந்தன.

இதில் கடைசி 4 விக்கெட்களை வெறும் 4 ஓட்டங்களுக்கு பெத்தெல் வீழ்த்தினார்.

அது மட்டுமல்லாமல் துனித் வெல்லாலகே, துஷ்மன்த சமீர, தசுன் ஷானக்க ஆகிய மூவரை ஒரே ஓவரில்  பெத்தெல்  ஆட்டமிழக்கச் செய்தமை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒன்றாகும். மஹீஷ் தீக்ஸனவை அவர்தான் ஆட்டம் இழக்கச் செய்தார்.

முன்னதாக குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே ஆகியோரின் விக்கெட்களை வில் ஜெக்ஸ்  கைப்பற்றி இருந்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய கடைசி ரி20 போட்டியில் காமில் மிஷார முதல் ஓவரிலேயே ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார்.

பெத்தும் நிஸ்ஸன்கவும் குசல் மெண்டிஸும் அணியைக் கட்டியெழுப்ப முயற்சித்தனர். ஆனால் மொத்த எண்ணிக்கை 34 ஓட்டங்களாக இருந்தபோது பெத்தும் நிஸ்ஸன்க 23 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

தொடர்ந்த பவன் ரத்நாயக்க 13 ஓட்டங்களுடனும் குசல் மெண்டிஸ் 26 ஓட்டங்களுடனும் அடுத்தடுத்த பந்துகளில் ஒரே மொத்த எண்ணிக்கையில் ஆட்டம் இழந்தனர். (62 - 4 விக்.)

அணிக்கு மீளழைக்கப்பட்ட கமிந்து மெணடிஸ் (14) துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறியதுடன் ஜனித் லியனகே 17 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

துனித் வெல்லாலகே (9), துஷ்மன்த சமீர (0), தசுன் ஷானக்க (4), மஹீஸ் தீக்ஷன (2) ஆகிய நால்வரும அநாவசியமாக விக்கெட்களை பறிகொடுத்தனர்.

பந்துவீச்சில் ஜேக்கப் பெத்தெல் 11 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் வில் ஜெக்ஸ் 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இங்கிலாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றது.

சாம் கரன் மாத்திரமே திறமையாகத் துடுப்பெடுத்தாடி 48 பந்துகளில் 6 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 58 ஓட்டங்களைக் குவித்தார்.

ஆரம்ப வீரர் ஜொஸ் பட்லர் (25), மத்திய வரிசை வீரர் லியாம் டோசன் (14) ஆகியோரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்ற மற்றைய இருவராவர்.

பந்துவீச்சில் துஷ்மன்த சமீர 25 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் மதீஷ பத்திரண 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

தான் விளையாடிய 71 போட்டிகளிலும் பந்துவீச்சில் ஈடுபட்ட துஷ்மன்த சமீர 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்தது இதுவே முதல் தடவையாகும்.

ஆட்டநாயகன், தொடர் நாயகன் ஆகிய இரண்டு விருதுகளையும் சாம் கரன் வென்றெடுத்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோல்வியே காணாத அணிகள் மோதிய சுப்பர்...

2026-09-09 00:16:13
news-image

இமாம், ரிஸ்வான் தொடர்பான தகவல்கள் வெளியானதை...

2026-09-08 15:48:04
news-image

22ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுவது உறுதி –...

2026-09-07 21:29:19
news-image

தோல்வி அடையாத அணிகளான அப்கன்ட்றி லயன்ஸ்,...

2026-09-07 20:29:17
news-image

நியூ யங்ஸுக்கு எதிராக ஏகப்பட்ட கோல்களைத்...

2026-09-07 20:19:26
news-image

சுவிஸ் கராத்தே லீக்: இத்தோசுக்காய் கழக...

2026-09-07 16:25:36
news-image

சுப்பர் சிக்ஸுக்கு செல்ல சீ ஹோக்ஸ்...

2026-09-07 15:29:09
news-image

20 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண தகுதிகாணில்...

2026-09-07 13:12:09
news-image

ஹர்ஷித்தாவின் நிதானமான துடுப்பாட்டம் இலங்கையின் அரை...

2026-09-07 09:05:46
news-image

ரட்னம் கழகத்தை வீழ்த்தி சுப்பர் சிக்ஸ்...

2026-09-07 15:06:57
news-image

மத்தியஸ்தரின் தவறான தீர்ப்புகளுக்கு மத்தியில் டிபெண்டர்ஸ்...

2026-09-06 15:08:03
news-image

டயமண்ட் லீக் இறுதிப் போட்டியில் ருமேஷ்...

2026-09-06 10:39:58