அவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி  20 ஓட்டங்களால் திரில் வெற்றிபெற்றுள்ளது.

பங்களாதேஷ் மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி பங்களாதேஷின் மிர்பூரில் இடம்பெற்றது.

இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்படுத்தாடக் களமிறங்கியது.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 260 ஓட்டங்களைப்பெற்றது.

இந்நிலையில், பதிலுக்கு தனது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி, பங்களாதேஷ் அணியின் சஹிப் அல்-ஹசனின் அபார பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாது 217 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

43 ஓட்டங்களால் முன்னிலை வகித்த பங்களாதேஷ் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது.

ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக ஒத்துழைக்க, அவுஸ்திரேலிய அணியின் லயனின் சுழலில் சிக்கிய பங்களாதேஷ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ஓட்டங்களைப்பெற்றது.

முதல் இன்னிங்ஸில் 43 ஓட்டங்கள் முன்னிலை பெற்றிருந்ததால் பங்களாதேஷ் அணி அவுஸ்திரேலிய அணிக்கு நிர்ணயித்த வெற்றி இலக்கு 265 ஆகியது.

இந்நிலையில் 265 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி மீண்டும் வங்கப்புலிகளின் சுழலில் சிக்க, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ஓட்டங்களைப்பெற்று 20 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

20 ஓட்டங்களால் திரில்வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இப் போட்டியின் ஆட்டக்காரராக பங்களாதேஷ் அணியின் சகிப் அல் ஹசன் தெரிவுசெய்யப்பட்டார்.