பெண் நோயியல் என்று கூறும்போது பெண்கள் பருவமடைதல், மாதவிடாய் போக்கு ஒழுங்காக நடைபெறுதல், மாதவிடாய் காலங்களில் அதிகூடிய வயிற்றுவலி ஏற்படல், கர்ப்பப்பை கட்டிகள், சூலகக்கட்டிகள், குழந்தைப் பாக்கியம், கர்ப்ப காலம், பிரசவத்திற்கு பின்னரான காலம், மெனோபோஸ் பருவம் என பல வகைகளைக் கொண்டுள்ளது. இவற்றில் மாற்றங்களும் குறைகளும் ஏற்படும் போது வைத்திய ஆலோசனைகள், பரிசோதனைகள் என நாடுகின்றோம். இதன்போது தெரியும் மாற்றங்களை அறிந்து பரிகாரம் தேடுகின்றோம். ஆனால் பேண் நோயியலின் ஒவ்வொரு படிகட்டுகளிலும் பெண்ணின் மனநிலை மாற்றங்கள் உளவியல் தாக்கங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை கருத்தில் கொண்டு நோய்க்கான காரணங்களை அறிந்து அதிலிருந்து விடுபடுவதற்கு ஆலோசனை வழங்குவதும் நோய்க்கான உரிய தீர்வைக் கொடுப்பதும் அவசியமாக உள்ளது.
மனச்சோர்வு மன அழுத்தம் என்று எந்தப்பெண்ணும் தமது வாயால் தமது நிலைமையை சொல்வதில்லை. சொல்லவும் தோன்றாது. கூட இருப்பவர்களும் இவை ஒரு மனச்சோர்வின் மன அழுத்தத்தின் வெளிப்பாடு என புரிந்து கொண்டு அதற்கு பரிகாரத்தை தேடமுன்வருவதில்லை. ஆனால் இவற்றுக்கு மாறாக இவையாவும் பெண்களின் தனிப்பட்ட குணத்தின் தாக்கம் என நினைத்து குடும்பங்களில் சண்டைகளும் சச்சரவுகளும் அதிகரிக்கின்றன. இதனால் இவ்வாறான நிலைமைகள் ஏன் தோன்றுகிறது. இதற்கு என்ன பரிகாரம் என நாம் ஆராய்ந்து பார்ப்பதன் மூலம் வாழ்வில் அமைதியையும் மகிழ்ச்சியையும் நிலைநாட்ட முடியும்.
பெண்களின் வாழ்க்கை படிகட்டுகளை பார்த்தால் மனச் சோர்வும் மன அழுத்தமும் எங்கிருந்து ஆரம்பிக்கின்றதென அறியலாம். பெண்களில் கல்வி பயிலும் காலத்தில் சரியான முறையில் கற்று கல்வியில் சித்தியடைய முடியாவிட்டால் சோர்வடைவார்கள். தாம் நினைத்த துறையில் கல்வி கற்க முடியவில்லை என்றால் சோர்வு மற்றும் சிறுவயதில் குடும்பத்தவர்களால் அல்லது சூழவுள்ளவர்களால் அல்லது கல்வி பயிலும் இடத்தில் துஷ்பிரயோகங்களுக்கு (Abuse) ஆளாகியிருந்தால் வெளியில் சொல்ல முடியாது. மனச் சோர்விலும் மன அழுத்தத்திலும் சிக்கி விடுகின்றனர். மேலும் காதல் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்கள், காதல் தோல்விகள் மற்றும் விரும்பியவாறு வாழ்க்கையை ஆரம்பிக்க முடியவில்லை என நினைத்தே மனச்சோர்வுகள் ஏற்படும். இதைவிட உரிய வயதில் திருமணங்கள் நடக்க வில்லை என சிலருக்கு ஒரு தாக்கம் இருந்த வண்ணம் இருக்கும்.
அடுத்ததாக இவையெல்லாம் தாண்டி திருமணமான பெண்களில் கணவர் எதிர்பார்த்தவாறு நடந்துகொள்ளாவிட்டால் ஏமாற்றம். அதாவது அவரது பழக்கவழக்கங்கள், குடித்தல், புகைத்தல் என ஒருபுறம் இருக்க சரியான முறையில் தாம்பத்திய உறவில் நாட்டம் காட்டி திருப்திகரமான தாம்பத்திய உறவில் ஈடுபடாத கணவர்மாரை நினைத்து யாரிடமும் கூறமுடியாத தர்மசங்கடமான நிலையில் மாட்டிக்கொண்ட பெண்கள் எத்தனைப் பேர். வெளியில் ஒரு பேருக்காக கணவன் மனைவி என்று வாழ்ந்தாலும் பெண்ணுக்குள் மறைந்திருக்கும் சோகம் இறுதியில் மனநோயாகவே வெளிப்படுகின்றது. இதனையும் விட தமது கணவர் தம்மையும் விட ஆசையான வேறு ஒரு பெண்ணுடனும் தவறான தொடர்பு வைத்து உள்ளார் என்ற நிலைமையை அறிந்த பெண்களின் மனத்தாக்கமும் தீவிரமாகத்தான் உள்ளது.
திருமண பந்தத்தில் குழந்தை பாக்கியம் தாமதமடைவது அடுத்த வேதனையாக உள்ளது. பல வருடங்கள் ஆகிறன. பல சிகிச்சைகள் எடுக்கின்றோம். பலன் எதுவும் இல்லையே. பலரது பல பல கேள்விகளுக்கு பதில் எம்மிடம் இல்லையே என பதுங்கி வாழ வேண்டிய சூழலில் ஆரம்பிக்கின்றது மனச்சோர்வு. வாழ்க்கையில் சொந்தங்கள் சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் தோற்றுவிக்கும் எனத் தான் நம்பினோம். ஆனால் மாமியின் தொல்லை, மச்சாளின் தொல்லை, மாமனார் தொல்லை என முகங்கொடுக்கும் பெண்களும் மன அழுத்தத்தால் அவதிப்படுகின்றனர்.
அடுத்த கட்டமாக வாழ்க்கையில் பொருளாதார சிக்கல் வேலைவாய்ப்பு இல்லாத பிரச்சினை அதிகரித்து வரும் விலைவாசிகளுக்கு முகங் கொடுக்க முடியாத சூழ்நிலை என்ற சிக்கல்களும் மனதில் பதிகின்றன. சிலரில் ஆசை ஆசையாக கர்ப்பம் தரித்து அந்த கரு கலைந்து இயற்கையான கரு கலையும் நிலை (Miscarriage) ஏற்பட்டால் ஏமாற்றத்தில் சோர்ந்து விழுகின்றனர் பெண்கள். அத்துடன் சிலரது வாழ்க்கையில் பத்து மாதம் வயிற்றில் சுமந்து குழந்தையை பிரசவித்து குழந்தையில் பாரிய நோய் ஏதும் கண்டறியப்பட்டாலோ அல்லது குறைபாடாக இருந்தாலோ, ஏன் சரியாக தாய்ப்பால் ஊட்டி குழந்தையை பராமரிக்க முடியாமல் போனாலோ அல்லது குடும்ப உறுப்பினர்களது உதவிகள் இல்லாமலும் கணவரது சரியான ஒத்துழைப்பும் பங்களிப்பும் இல்லாமலும் திணருகின்ற போது மனஅழுத்தம் ஆரம்பிக்கின்றது.
மேலும் சிலசமயம் சரியான கால இடைவெளி இல்லாமல் அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்து அவர்களைச் சரியான முறையில் பராமரிக்க முடியாலும் சரியான முறையில் கல்வியில் வழிநடத்த முடியாமலும் சரியான ஒழுக்கத்தையும் பழக்கங்களையும் கொண்டுவர முடியாமலும் அவதிப்படுகின்ற போது ஏற்படும் மனத்தாக்கம் மனச்சோர்வாக வெளிப்படுகின்றது.
அடுத்ததாக கணவர் வெளிநாட்டில் பணி புரிவதால் ஏற்படும் பிரிவுத்துயரும் வருத்தத்தை ஏற்படுத்துகின்றது. கணவர் உள்நாட்டில் பணி புரிந்தாலும் தம்மிடம் போதிய நேரம் செலவழிப்பதில்லை என ஏங்கித் தவிக்கும் பெண்களும் மனத்தாக்கலுக்கு ஆளாகின்றனர். இவையெல்லாம் தாண்டி வளர்ந்து வரும் பிள்ளைகளின் கல்வி நிலை, எதிர்காலநிலை, திருமணம் செய்து வைக்க வேண்டிய நிலை அதில் ஏற்படும் சிக்கல்நிலை என்று மனத்தாக்கம் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இறுதியில் மெனோபோஸ் பருவம் அடைந்த போது ஏற்படும் ஹோர்மோன் தாக்கம் மனஅழுத்தத்தை பன்மடங்காக்கும்.
எனவே பெண்கள் அவர்களது இயற்கையான உடற்தொழில் மாற்றத்தாலும் ஹோர்மோன் மாற்றத்தாலும் எளிதில் மனத் தாக்கங்களுக்கு ஆளாகக் கூடியவர்கள். அவர்களது வாழ்க்கையிலும் பல படிகட்டுகள் சவால் நிறைந்ததாகத் தான் உள்ளன. சோகங்களை வெளியில் சொல்ல முடியாது வேதனைப்பட்டு இறுதியில் மனச்சோர்விலும் மன அழுத்தத்திலும் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இவற்றைப் புரிந்து கொண்டு சரியான வைத்திய அலோசனை பெற்றால் இதில் இருந்து விடுபட முடியும். எனவே இதற்குக் கூட இருப்பவர்களின் புரிந்துணர்வும் ஒத்துழைப்பும் மிக அவசியம். வைத்திய நிபுணர்கள் இதற்குரிய மன உளவியல் மருத்துவ நிபுணர்களை சந்திக்குமாறு சிபார்சு செய்தால் அதனை அலட்சியப்படுத்தாது ஒரு புற்றுநோய் என்றால் எவ்வளவு பயப்படுகிறீர்களோ அதுபோல் இவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வைத்திய ஆலோசனைப் படி நடக்க வேண்டும். மருந்துகள் ஒழுங்காக எடுக்க வேண்டும். இதன்மூலம் சமாதானமும் மகிழ்ச்சியும் குடும்பங்களில் நிலவும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM