வவுனியா ஓமந்தை பறநட்டான்கல் முச்சக்கரவண்டி மற்றும் வேன் மோதியோற்பட்ட விபத்தில் 5 பேர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் முச்சக்கரவண்டி சாரதி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

இச் சம்பவம் இன்று அதிகாலை 12.25 மணியளவில்  இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவில் உள்ள உறவினர் வீட்டில் இடம்பெற்ற நிகழ்விற்குச் சென்றுவிட்டு இரவு வவுனியாவிற்கு முச்சக்கரவண்டியில் திரும்பிக் கொண்டிருந்தபோது ஓமந்தை பறநட்டான்கல் பகுதியில் இன்று அதிகாலை 12.25மணியளவில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற சொகுசு வேன் முச்சக்கரவண்டியுடன் மோதியுள்ளது.

இதில் முச்சக்கரவண்டி கடுமையாக சேதமடைந்துள்ளதுடன் இதில் பயணித்த மலையாண்டி செல்வகுமார் 4 3வயது, செல்வகுமார் லக்சன் வயது 13, செல்வக்குமார் டிலக்சன் வயது 11, ஜெயச்சந்திரன் றொசான் வயது 16, லோகநாதன் டிலக்சன் வயது 14 ஆகிய ஜந்து பேரும் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முச்சக்கரவண்டி சாரதியின் நிலைமை மேசமாகவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சொகுசு வேனின் சாரதியை விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்துள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் ஓமந்தை பொலிசார் தெரிவித்துள்ளனர்.