இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் பொது ஆவணமொன்றை தயாரிப்பதற்கு இலங்கை தமிழரசுக் கட்சியும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும் தீர்மானித்துள்ளன. தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளையும் உள்ளடக்கி, இந்த அரசியல் தீர்வு தொடர்பான ஆவணத்தை முன்வைப்பதற்கு ஆலோசிக்கப்பட்டிருக்கின்றது.
இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி என்பவற்றின் தலைவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் இம்மாதம் முதல் ஆரம்பமாகும் என்று நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே புதிய அரசியலமைப்பில் இடம்பெற வேண்டிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் திட்டவரைவொன்றினை தயாரிக்கும் வகையிலேயே பொது ஆவணத்தை தயார்படுத்துவதற்கு இந்த இரு கட்சிகளும் முடிவு செய்துள்ளன.
தாம் ஆட்சிக்கு வந்தால் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதன் மூலமாக தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணப்படும் எனவும் தேசிய மக்கள் சக்தி வாக்குறுதி வழங்கியிருந்தது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலின் போதும் இந்த வாக்குறுதியினை தேசிய மக்கள் சக்தி முன்வைத்திருந்தது. ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாணப்படும் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டிருந்தது. நல்லாட்சி அரசாங்க காலத்தில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விட்ட இடத்திலிருந்து ஆரம்பிப்பதன் மூலம் துரிதமாக அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்று இந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் வரையில் மாகாண சபை முறைமை அமுல்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆட்சிக்கு வந்தவுடன் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்த தேசிய மக்கள் சக்தி, தற்போது ஆட்சிக்கு வந்து ஒரு வருடமும் நான்கு மாதமும் கடந்துள்ள நிலையிலும் இன்னமும் புதிய அரசியலமைப்புக்கான முயற்சிகளை ஆரம்பிக்கவில்லை. இம்மாதம் இதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார கூறியிருக்கின்றார்.
இதேபோன்றே பிரதமர் ஹரிணி அமரசூரியவும் புதிய அரசியலமைப்புக்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறி வருகின்றார். ஆனால், இன்னமும் இதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.
அரசாங்கமானது புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் விடயத்தில் இழுத்தடிப்பு போக்கையே கடைப்பிடித்து வருகிறது. வழங்கிய வாக்குறுதிகளை உரிய வகையில் நிறைவேற்றுவதற்கு இதுவரை நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவில்லை. ஆனாலும், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்று கூறி வருகின்றது.
அரசாங்கமானது புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கின்றதோ, இல்லையோ என்பதை விட இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பிலும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் குறித்தும் தமிழ்த் தேசியக் கட்சிகள் தமக்குள் ஆராய்ந்து ஒரு நிலைப்பாட்டுக்கு வரவேண்டியது அவசியமானதாகும்.
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகள் பொது இனக்கப்பாட்டுக்கு வர வேண்டும் என்று பல வருடங்களாகவே கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது. தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன, அதனை பூர்த்தி செய்யக் கூடிய அரசியல் தீர்வு எத்தகையதாக அமைய வேண்டும் என்பது தொடர்பில் திட்ட வரைவொன்று தயாரிக்கப்பட வேண்டியது அவசியமானதாகும். அவ்வாறு தயாரிக்கப்பட்டால்தான் புதிய அரசியலமைப்பில் இடம்பெற வேண்டிய அரசியல் தீர்வு குறித்தோ அல்லது எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அரசியல் தீர்வுக்கான செயற்பாடுகள் குறித்தோ கலந்துரையாடல்களை நடத்த முடியும்.
அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைமைகள் மத்தியில் ஓர் இணக்கப்பாடான நிலைமை ஏற்பட வேண்டும். தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இணைந்த வடக்கு, கிழக்கில் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தக் கூடிய சமஷ்டி தீர்வையே எதிர்பார்த்துள்ளனர்.
தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையில் அரசியல் தீர்வு அமைய வேண்டியது இன்றியமையாததாகவுள்ளது. தெற்கில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக் கூடிய தீர்வினை வழங்குவதற்கு இதுவரை நடவடிக்கையினை எடுக்கவில்லை. இதனால்தான், மூன்று தசாப்தகால கொடூர யுத்தம் நாட்டில் இடம்பெற்றிருந்தது.
நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக் கூடிய தீர்வுக்காக போராட்டங்கள் இடம்பெற்று வந்துள்ளன. அன்று மிதவாத தமிழ்த் தலைவர்கள் ஜனநாயக வழியில் அஹிம்சைப் போராட்டங்களை நடத்தியிருந்தனர். அந்த அஹிம்சைப் போராட்டங்கள் தெற்கின் அரசாங்கங்களினால் கணக்கெடுக்கப்படாத நிலையிலேயே 1980களில் ஆயுதப் போராட்டமாக அது பரிமாணமடைந்தது. தமிழ் இளைஞர், யுவதிகள் ஆயுதமேந்தி போராடும் நிலைமை உருவானது.
இன்று ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 16 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக அஹிம்சா வழியில் போராடும் நிலைமை தொடர்கின்றது.
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதன் மூலம் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை காண்பதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதி வழங்கியிருக்கின்றது. ஆனால், அரசாங்கம் வழங்கவுள்ள அரசியல்தீர்வு எத்தகையது என்பது தொடர்பில் இன்னமும் அறுதியானதும் உறுதியானதுமான நிலைப்பாடு அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில்தான் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பில் பொது ஆவணமொன்றை தயாரிக்க வேண்டியதன் தேவை எழுந்திருக்கின்றது. உண்மையிலேயே இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மத்தியில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட வேண்டும். அந்தக் கலந்துரையாடல்களில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டு அதற்கேற்ற வகையில் அரசியல் தீர்வு திட்டவரைவு தயாரிக்கப்பட வேண்டும். அது பொது ஆவணமாக தயாரிக்கப்படலாம்.
ஆனால், தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன, அவர்களுக்கான அரசியல்தீர்வு என்ன என்பது தொடர்பில் தீர்க்கமான நிலைப்பாடு எடுக்கப்பட வேண்டும்.
இதற்கான முயற்சிகளை ஆரம்பிப்பதற்கு தற்போது இலங்கை தமிழரசுக் கட்சியும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும் தீர்மானித்துள்ளமை வரவேற்கத்தக்க செயற்பாடாகும். ஆனால், இந்த இரு கட்சிகளின் தலைவர்கள் மட்டும் இந்த விடயம் குறித்து ஆராயாமல், தமிழ்த் தேசிய தரப்பில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் அனைவரையும் உள்ளடக்கி கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மத்தியிலேயே முரண்பாடான நிலைமைகள் நிலவுகின்றன. 13ஆவது திருத்தச் சட்டத்தினை அடிப்படை தீர்வாகக் கொள்ளும் விடயத்திலும் சில தரப்பினர் முரண்படுகின்றனர்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய முன்னணியினர் 13ஆவது திருத்தச் சட்டத்தினை ஆரம்பத் தீர்வாகக் கொள்ள முடியாது என்று கருதுகின்றனர். ஆனால், ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளைப் பொறுத்தவரையில் அதனை அரசியல் தீர்வின் ஆரம்பப் புள்ளியாகக் கருதி அடுத்த கட்டம் நோக்கி செல்லலாம் என்ற நிலைப்பாடு காணப்படுகின்றது.
ஆனாலும், இணைந்த வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தும் வகையிலான சமஷ்டி தீர்வையே தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைமைகள் விரும்புகின்றனர். ஆனால், தெற்கின் அரசியல் தலைமைகள் அத்தகைய தீர்வுக்கு உடன்படுமா என்ற விடயத்தில் பெரும் கேள்வி எழுகின்றது.
ஆனாலும், தமிழ் மக்களின் அபிலாஷைகளை உள்ளடக்கிய தீர்வு இதுதான் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றினை தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைமைகள் ஒன்றிணைந்து தயாரிக்க வேண்டும். அதன் அடிப்படையில் தெற்கின் அரசாங்கத்துடன் பேச்சுகளை ஆரம்பிக்க முடியும். பின்னர் ஓரளவுக்கு விட்டுகொடுப்புகளை மேற்கொண்டு இணக்கப்பாடான தீர்வுக்கு வர முடியும்.
எனவே, தற்போதைய நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து அரசியல் தீர்வு தொடர்பான திட்ட வரைவை தயாரிப்பது நன்மை பயர்க்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM