இன்றைய திகதியில் ஏராளமான இளைய தலைமுறையினர் தங்களது கைகளில் மொபைல்களையும், லேப்டொப்களையும், வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ மடிக்கணனியுடனும் தான் இருக்கிறார்கள். அத்துடன் அவர் தங்களின் விருப்பப்படியே அமர்ந்திருக்கிறார்கள் அல்லது நிற்கிறார்கள். இதன் காரணமாக அவர்களுக்கு இளம் வயதிலேயே முதுகெலும்பில் வலி ஏற்படுகிறது. ஆனால் இதனை அலட்சியப்படுத்தியோ அல்லது புறகணித்தோ விடுகிறார்கள். ஒரு சிலர் தான் இதற்கு ஓரளவிற்கு நிவாரணத்தை தேடுகிறார்கள்.

அண்மைய ஆய்வுகளின் படி 20 முதல் 30 வயதிற்குள் இருக்கும் ஒவ்வொரு ஐம்பதாவது தெற்காசியர்களுக்கு முதுகெலும்பு தொடர்பான பிரச்சினை ஏற்படுகிறது என்று கண்டறியப்படுகிறது. அத்துடன் இதற்கு காரணம் என்று 3 விடயங்களை முன்வைக்கிறார்கள். அலுவலகமோ அல்லது வீடோ அவர்கள் ஆரோக்கியமாக அமர்ந்து பணியாற்றாமல் தங்களின் விருப்பம் போல் ஒழுங்கற்ற முறையில் முதுகெலும்பிற்கு அதிகளவிலான தொல்லை உண்டாகும் வகையிலேயே அமர்கிறார்கள். அத்துடன் விரைவில் மன அழுத்தத்திற்கும் ஆளாகிறார்கள். தங்களின் வாழ்க்கை முறையையும், பணியாற்றும் முறையையும் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இதன் காரணமாக இவர்களுக்கு 60 வயதிற்கு மேல் வரக்கூடிய முதுகெலும்பு வலி தொடர்பான பிரச்சினைகள் முப்பதுகளிலேயே தொடங்கிவிடுகிறது. நான்கு மணித்தியாலத்திற்கு மேலாக ஒரேயிடத்தில் அமர்ந்து பணியாற்றுபவர்களும், ஒரேயிடத்தில் நின்றுக் கொண்டே பணியாற்றுபவர்களுக்கும் இப்பிரச்சினை வருவதற்கு அதிகளவு வாய்ப்புண்டு. இதன்போது முதுகெலும்பைச் சுற்றியுள்ள தசைகள் முதுகெலும்புகளில் உள்ள தண்டுவடப்பகுதியில் தேவைக்கும் அதிகமான அழுத்தத்தை கடத்துகின்றன. இதனால் தண்டுவடப்பகுதியில் உள்ள டிஸ்க்குகள் எனப்படும் வட்டுகள் பாதிப்பிற்குள்ளாகி, வலியை ஏற்படுத்துகின்றன. ஒரு சிலருக்கு தண்டுவடப்பகுதியில் உள்ள டிஸ்க்குகள் நகர்ந்து பிரச்சினையை அதிகப்படுத்தவும் செய்கின்றன. இதனால் கால் சோர்வு, கழுத்து வலி ஆகியவையும் உடன் வருகின்றன.

இதனை பிஸியோதெரபி எனப்படும் இயன்முறை மருத்துவம் மூலம் குணப்படுத்த இயலும். அத்துடன் முதுகெலும்பு வலி வராதிருக்க, தினமும் குறிப்பிட்ட நேரத்தில் உடற்பயிற்சியை செய்யவேண்டும். சரியான நேரத்தில் சத்தான உணவை எடுத்துக் கொள்ளவேண்டும். பணியாற்றும் போது தொடர்ச்சியாக நான்கு மணித்தியாலம் வரை ஒரேயிடத்தில் அமர்ந்து பணியாற்றாமல் ஒவ்வொரு மணித்தியாலத்திற்கு ஒரு முறை எழுத்து கைகால்களையும் தங்களது பணியாற்றும் இடத்தையும் மாற்றியமைத்துக் கொண்டு சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் பணியாற்றத் தொடங்கலாம். அமரும் போதும், உறங்கும் போதும், நிற்கும் போதும் மருத்துவர்கள் பரிந்துரைத்த நிலையை உறுதியாக கடைபிடித்தால் முதுகெலும்பு வலியிலிருந்து குணமடையலாம்.

வைத்தியர்.மா. கோட்டீஸ்வரன்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்