வடமாகாண சபையின் மிகுதி காலம் மிகவும் குறைந்த காலமாக இருப்பதினால் இருக்கின்ற காலத்தினுள் சரியான திட்டங்களை மேற்கொள்ள சகலரது ஒத்துழைப்பும் தேவைப்படுவதாக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்தார்.

மன்னாரில் வைத்து ஊடகங்களுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை  கருத்த தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், 

வடக்கு மாகாண சபையின் அமைச்சரவை முதலமைச்சரினால் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் சுகாதார, சுதேச, வைத்தியத்துறை, சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு அமைச்சரானது என்னிடம் மாற்றி முதலமைச்சரினால் வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபையின் ஆயுள்காலத்தின் இறுதிக்கட்டத்தில் இவ்வாறான மாற்றத்தின் ஊடாக சுகாதார அமைச்சுப்பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் மிகுதி காலம் மிகவும் குறைந்த காலமாக இருப்பதினால் இருக்கின்ற காலத்தினுள் என்ன மாதிரியான செயற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் வினைத்திறனாக எனது அமைச்சு சம்பந்தமான திட்டங்களை மேற்கொண்டு, மாகாண சபையினுடைய மொத்த நகர்வுகளுக்கும் என்னாலான பங்களிப்பைச் செய்ய முடியும் என்பது ஒரு கேள்விக்குறியாக உள்ளது.

காலம் குறுகியதாக இருந்தாலும், ஏற்கனவே நடை முறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்களினுடைய நிலை என்ன? இருக்கின்ற காலத்துக்குள்ளே முடிக்கப்பட வேண்டிய திட்டங்களின் தற்போதைய நிலை என்ன? என்பது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது.

ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் சரியான முறையில் முடித்து வைக்க வேண்டிய தேவையுள்ளது. இவ் வருடத்துக்கு என சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்கள் இவ் வருடத்துக்குள் முடிவடைவதற்கு வேண்டிய சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு சரியான காலத்துக்குள் அவற்றை நிறைவுக்கு கொண்டுவர வேண்டிய கடமை என்னிடம் சுமத்தப்பட்டுள்ளது.

ஆகவே விரைந்து செயற்பட வேண்டிய ஒரு நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். புதிதாக உள் நுழைந்துள்ளமையினால் சம்பந்தப்பட்ட துறை சார்ந்தவர்களின் ஆலோசனைகளைப் பெற்று அவர்களின் உதவியோடு வினைத்திறனான செயல் திட்டங்களை கொண்டு இறுதி வருடத்தை வெற்றி கரமாக முடித்துவிட வேண்டும் என்பதே எனது நோக்கம்.

அந்த வகையில் மாகாண சபையின் இறுதி காலத்தில் முதலமைச்சருக்கு பக்க பலகமாக நிக்க வேண்டிய தேவை எங்களுக்குள்ளது. அந்த வகையில் ஆக்கபூர்வமான விடையங்கள் தொடர்பில் நான் கவனம் செலுத்தி வருகின்றேன். 

சம்பந்தப்பட்ட அனைவரினதும் ஒத்துழைப்பு எனக்கு தேவைப்படுகின்றது. அவர்களின் ஒத்துழைப்போது பணிகளை செய்து முடிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.