(ஆர். பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி)
கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (22) நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை 19 ஓட்டங்களால் பரபரப்பான வெற்றியை ஈட்டியது.
குசல் மெண்டிஸ், ஜனித் லியனகே ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டங்கள், துனித் வெல்லாலகேயின் அபார சகலதுறை ஆட்டம் என்பன இலங்கையின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.
குசல் மெண்டிஸ் அரைச் சதம் குவித்ததுடன் ஜனித் லியனகே, துனித் வெல்லாலகே ஆகிய இருவருடன் பெறுமதியான இரண்டு இணைப்பாட்டங்களிலும் ஈடுபட்டார்.
அதேவேளை, இலங்கை ஓட்டவேகத்தை அதிகரிக்கச் செய்வதிலும் எண்ணிக்கையை உயரச் செய்வதிலும் ஜனித் லியனகே, துனித் வெல்லாலகே ஆகியோர் பெரும் பங்காற்றினர்.
துனித் வெல்லாலகே 2 விக்கெட்களைக் கைப்பற்றியதுடன் அற்புதமான ஒரு பிடி உட்பட 3 பிடிகள் எடுத்து அணிக்கும் ரசிகர்களுக்கும் உற்சாகத்தைக் கொடுத்தார்.
இந்த வெற்றியுடன் மூன்று போட்டிகள் கொண்ட தம்ரோ சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் இலங்கை முன்னிலை அடைந்துள்ளது.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 271 ஓட்டங்களைப் பெற்றது.
ஆரம்பத்தில் மந்த கதியில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, மத்திய வரிசை வீரர்களின் சுமாரான வேககத்தைக் கொண்ட துடுபாட்ட உதவியுடன் கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெற்றது.
பெத்தும் நிஸ்ஸன்க (21), காமில் மிஷார (27) ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 63 பந்துகளில் 50 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
ஆனால், அவர்கள் இருவரும் 20 பந்துகள் இடைவெளியில் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.
இரண்டு வருட இடைவெளிக்குப் பின்னர் ஒருநாள் அணிக்கு மீளழைக்கப்பட்ட தனஞ்சய டி சில்வா 10 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் சரித் அசலன்க 17 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (26.3 ஓவர்களில் 124 - 4 விக்)
இந் நிலையில் குசல் மெண்டிஸுடன் ஜோடி சேர்ந்த ஜனித் லியனகே 5ஆவது விக்கெட்டில் 94 பந்துகளில் 88 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகம் அளித்தார்.

ஜனித் லியனகே 46 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது அரைகுறை மனதுடன் பந்தை அடிக்க முயற்சித்து பந்துவீச்சாளர் ஆதில் ராஷித்திடமே பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார்.
பவன் ரத்நாயக்க ஓட்ட வேகத்தை அதிகரிக்க முயற்சித்து 10 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார். (239 - 6)
அடுத்து களம் புகுந்த துனித் வெல்லாலகே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்ட வேகத்தை அதிகரிக்கச் செய்ததுடன் குசல் மெண்டிஸுடன் பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் 14 பந்துகளில் 32 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 271 ஓட்டங்களாக உயர்த்தினார்.
மறுபக்கத்தில் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய குசல் மெண்டிஸ் 117 பந்துகளில் 11 பவுண்டறிகள் உட்பட 93 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

துனித் வெல்லாலகே 12 பந்துகளில் 3 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 25 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் ஆதில் ராஷித் 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
272 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 49.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 252 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
மொத்த எண்ணிக்கை 12 ஓட்டங்களாக இருந்தபோது ஸக் குரோவ்லி 6 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்ததால் இங்கிலாந்தின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

எனினும் அனுபவசாலிகளான பென் டக்கெட், ஜோ ரூட் ஆகிய இருவரும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்கள் குவித்ததுடன் 2ஆவது விக்கெட்டில் 117 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கைக்கு நெருக்கடியைக் கொடுக்க முயற்சித்தனர்.
ஆனால், இருவரும் 15 ஓட்டங்கள் இடைவெளியில் ஆட்டம் இழந்ததால் இலங்கை அணியினர் ஆசுவாசம் அடைந்தனர்.
பென் டக்கெட் 62 ஓட்டங்களையும் ஜோ ரூட் 61 ஓட்டங்களையும் பெற்றனர்.

அதன் பின்னர் இங்கிலாந்து வீரர்கள் அடிக்கடி விக்கெட்களை இழந்தனர்.
ஜேக்கப் பெத்தெல் (15), அணித் தலைவர் ஹெரி ப்றூக் (6), ஜொஸ் பட்லர் (19), சாம் கரன் (5) ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர்.
மத்திய வரிசையில் ரெஹான் அஹ்மத் (27), ஜெமி ஓவர்ட்டன் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 38 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கையை 200 ஓட்டங்களாக உயர்த்தினர்.
கடைசிக் கட்டத்தில் ஜெமி ஓவர்ட்டன் தனித்து போராடி இலங்கைக்கு பெரும் சோதனையைக் கொடுத்தார். ஆனால் இங்கிலாந்தின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 20 ஓவர்கள் தேவைபட்ட நிலையில் ஜெமி ஓவர்ட்டனின் விக்கெட்டை ப்ரமோத் மதுஷான் கைப்பற்றி இலங்கைக்கு வெற்றியை ஈட்டிக்கொடுத்தார்.
ஜெமி ஓவர்ட்டன் 34 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் ப்ரமோத் மதுஷான் 39 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெவ்றி வெண்டசே 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் துனித் வெல்லாலகே 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: துனித் வெல்லாலகே.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM