கடல் அரிப்பால் கிழக்கு மாகாணத்தைப் பாதுகாக்க விஞ்ஞான வேலைத்திட்டம் அவசியம் - ரவூப் ஹக்கீம்

Published By: Vishnu

22 Jan, 2026 | 04:42 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

கடல் அரிப்பால் கிழக்கு மாகாணம் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அரசாங்கம் இதுதொடர்பில் கவனம் செலுத்தி, அங்கு எஞ்சி இருக்கும் நிலங்களை பாதுகாத்துக்கொள்ள விஞ்ஞான ரீதியில் வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) இடம்பெற்ற தித்வா புயலின் பின்னரான நாட்டின் நிலைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

இயற்கை அனர்த்தத்தில் கடல் அரிப்பு விவகாரம் கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் மிக மோசமாக பாதித்து வருகிறது. நிந்தவூர் பிரதேசம் மாேசமாக பாதிக்கப்பட்டு, தற்போது அது மலிகைக்காடு, கல்முனை பிரதேசமும் கடலரிப்பால் பல இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில்தான், சுமார் 5ஆயிரம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்ற சாய்ந்தமருது மலிகைக்காட்டு பிரதேசத்தின் மையவாடிக்கு மாற்றுக்காணியை பெற்றுக்கொடுக்கின்ற அவசியம் மற்றும் இருக்கின்ற மையவாடியை பாதுகாத்துக்கொள்கிறன அவசியத்தை வலியுறுத்த விரும்புகிறோம். ஏற்கனவே தீர்மானம் எடுக்கப்பட்டதன் பிரகாரம் கடலாேர பாதுகாப்பு திணைக்களம் அதற்காக 20 மில்லியன் ரூபா ஒதுக்கி இருப்பதாக அறியக்கிடைக்கிறது. அதனால் அந்த 20 மில்லியன் ரூபாவை வைத்துக்கொண்டு நிந்தவூரில் இருந்து கல்முனை கடற்கரை பள்ளிவாசல் வரையும் திருக்கோவில் இருந்து ஏனைய பிரதேசங்களுக்கும் இவற்றை எப்படி பாதுகாப்பது என்ற பிரச்சினை இருக்கிறது. அதனால் இந்த தொகையை கூட்டித்தரவேண்டும் என்பது மாத்திரமல்லாது, நிரந்தர பாதுகாப்பு அணை ஒன்றை அமைக்க வேண்டும். 

கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் மினாரா கோபுரம் வரையும் கடல் அரிப்புக்குள்ளாகி வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் நிரந்தமான அணை ஒன்றை கட்டுவதன் மூலம்தான் இந்த சரித்திர முக்கியத்துவம்வாய்ந்த பள்ளிவாசலை பாதுகாக்க முடியும். அதேபோன்று அதற்கு அண்மையில் இருக்கும் 100 வருட பழைமைவாய்ந்த மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசலின் நிலம் பாரியளவில் கடல் அரிப்புக்குள்ளாகி இருக்கிறது. இவ்வாறு அந்த பகுதியில் பல கட்டிடங்கள் இந்த கடல் அரிப்புக்குள்ளாகியுள்ளன.அதனால் அரசாங்கம் இதுதொடர்பில் கவனம் செலுத்தி, எஞ்சி இருக்கும் நிலங்களை பாதுகாத்துக்கொள்ள விஞ்ஞான ரீதியில் வேலைத்திட்டம் மேற்கொள்ள வேண்டும்.

மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் வழங்குவதாக தெரிவித்த 25 ஆயிரம் ரூபா போன்ற அடிப்படை உதவிகளை வழங்க முடியுமாகி இருக்கின்றபோதும். சிறு வியாபார நிலையங்களை கட்டியெழுப்புவதற்காக இரண்டு இலட்சம் ருபா வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அரசாங்கத்தின் சுற்றுநிருபத்தில் இருக்கும் குளறுபடி காரணமாக இந்த பணத்தை எவ்வாறான வியாபார நிலையங்களுக்கு வழங்குவது என்ற பிரச்சினையில் பிரதேச செயலாளர்கள் இருக்கிறார்கள்.

பெறுமதி சேர் வரி செலுத்தும் வியாபார நிலையமாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருப்பதே பிரச்சினையாகும். மூதூரில் அதிகமாக கருவாடு வாடிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த தொழில் பெறுமதி சேர் வரிக்கு உற்படுகிறதா இல்லையா என தெரியாமல் அங்கிருக்கும் பிரதேச செயலாளர் தடுமாற வேண்டிய நிலைவரம் ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறான இன்னும் சில பிரச்சினைகள் காரணமாக பிரதேச செயலகங்களால், இந்த பணத்தை உரிய நேரத்துக்கு உரிய மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

மேலும் தித்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீள் குடியேற்றம் செய்யும்போது மீள் கட்டுமானம் செய்யும்போது மீண்டும் அவை பாதிப்புக்குள்ளாகாது என்பதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். அதேநேரம் இந்த அனர்த்தத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கண்டி மாவட்டமும் மண் சரிவினாலும் வெள்ள அனர்த்தத்தினாலும் பாரியளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளை துப்புறவு செய்யும் பணிக்கு கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் இருந்து எமக்கு உதவி செய்த அனைவருக்கும் இந்த சந்தர்ப்பத்திவல் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அதேநேரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆரம்ப நிவாரணதொகை வழங்கப்படுள்ளபோதும் இன்னும் அதிகமானவர்களுக்கு அது வழங்கப்படாமல் இருக்கின்றது. குறிப்பாக வீடுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5மில்லியன் ரூபா வழங்குவதா அல்லது இரணடரை மில்லியன் ரூபா கொடுப்பதா என்ற விடயத்திலும் பல குழப்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதனால் 5இலட்சம் ரூபா வழங்கும் நடவடிக்கையில் இருந்து ஒதுங்கிக்கொள்வதாக கிராம சேவகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.சுற்றறிக்கைகள் தெளிவில்லாமல் இருப்பதே இதற்கு காரணமாகும். 

அத்துடன் கண்டி மாவட்டத்தில் பல அரச பாடசாலை கட்டிடங்கள் மீள திருத்தி அமைக்கப்பட வேண்டி இருக்கின்றனபோதும் கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் அந்த கட்டிடங்களை இதுவரை பார்வையிட செல்லாமல் இருக்கிறது. அதனால் அந்த கடடிடங்களை பயன்படுத்த முடியாத நிலை இருக்கிறது. எனவே இதுதொடர்பில் நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட கட்டிடங்களை மீள நிர்மாணிக்க தேவையான பணத்தை ஒதுக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மெகசின் சிறையிலுள்ள கைதிகளுக்கு போதைப்பொருள் வழங்க...

2026-08-08 19:25:51
news-image

சிறைச்சாலை மோதல்கள்: 5 வாரங்களில் 36...

2026-08-08 16:46:41
news-image

நீதித்துறையின் சுயாதீனத்தை சிதைக்க ஜனாதிபதி அநுர...

2026-08-08 16:01:44
news-image

வலப்பனை மல்லியப்பூ தோட்ட அம்மன் ஆலய...

2026-08-08 18:38:24
news-image

சிறைச்சாலை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவசியம்:...

2026-08-08 15:22:29
news-image

வெவ்வேறான இடங்களில் இரு வீதி விபத்துக்கள்:...

2026-08-08 17:53:59
news-image

ஆக்கிரமிக்கப்பட்ட வீதியை வைத்து தெற்கில் குழப்பம்...

2026-08-08 17:26:46
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன்...

2026-08-08 17:21:58
news-image

அரசியல் கைதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் -...

2026-08-08 17:10:55
news-image

இலங்கையர்களை இலக்கு வைத்து இணையவழிப் பண...

2026-08-08 17:08:46
news-image

இந்திய மீனவர்களின் ஊடுருவல் தென்பகுதி வரை...

2026-08-08 17:08:36
news-image

தூய்மையான இலங்கைக்கான மக்கள் பணி" -...

2026-08-08 16:46:57