ஹட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியின் பழைய மாணவர் ஒன்றியத்தின் பொதுக்கூட்டத்தில் புதிய நிர்வாக சபையினரை தெரிவு செய்வதில் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக 2011/2015 ஆம் ஆண்டின் நிர்வாக சபையினரே அடுத்த ஒரு வருடத்திற்கு ஒன்றியத்தின் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என ஒன்றியத்தின் ஆலோசனை சபையினர் கோரிக்கை முன்வைத்தனர்.

மேற்படி கல்லூரியின் பொதுக்கூட்டம் 24/01/2015 ஞாயிற்றுக்கிழமையன்று கல்லூரியின் தோமஸ் மண்டபத்தில் காலை 10 மணியளவில் இடம்பெற்றது. ஒன்றியத்தின் தலைவர் கல்லூரி அதிபர் எம்.சாந்தகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்திருந்த பழைய மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

2011 ஆம் ஆண்டிலிருந்து ஒன்றிய செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் நிர்வாகசபையினர் மற்றும் அங்கத்தவர்கள் தமது செயற்பாடுகளை நூல் வடிவில் அனைவருக்கும் கையளித்திருந்தனர். பொருளாளரின் அறிக்கையும் சபையோரினால் ஏக மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் பிறகு பழைய நிர்வாக சபை கலைக்கப்பட புதிய நிர்வாக சபையை கூட்டும் அறிவித்தலை முன்வைத்தார் ஒன்றியத்தலைவர். அதன் பிறகு நிர்வாகிகளை தெரிவு செய்வதில் குழப்ப நிலை ஏற்பட்டது.

இதை முடிவுக்கு கொண்டு வரும் பட்சத்தில் ஒன்றியத்தின் மூத்த ஆலோசனை சபையினர் தமக்குள் கலந்தாலோசித்து அடுத்த ஒரு வருடத்திற்கு பழைய நிர்வாக சபையே ஒன்றிய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர். இதை ஒன்றியத்தலைவர் சபைக்கு அறிவிக்கவே முன்னைய நிர்வாக சபை அங்கத்தவர்கள் தமது பொறுப்புகளை மீண்டும் ஏற்றனர்.

இதன் படி நடப்பு வருடத்திற்கான ஒன்றியத்தின் இணைச்செயலாளர்களாக ஆர்.ராஜபதி மற்றும் ஏ.எல்மோ , உபதலைவராக கே.வீரசிங்க, பொருளாளராக ஆர்.செந்தில்நாதன் ஆகியோர் மீண்டும் தமது கடமைகளை பொறுப்பேற்றதோடு குழுக்களின் உறுப்பினர்களும் மீண்டும் அதில் இணைந்து கொண்டனர்.

( க.கிஷாந்தன்)