ஜெனிவாவில் அமைந்துள்ள  ஐக்கிய நாடுகள் மனித  உரிமை பேரவையில் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடை பெறவுள்ள 37ஆவது கூட்டத் தொடரில் இலங்கை  விவகாரம் தொடர்பாக  நான்கு அறிக்கைகள்   தாக்கல் செய்யப்படவுள்ளன.  

இலங்கை தொடர்பாக நான்குக்கும்  மேற்பட்ட அறிக்கைகள் தாக்கல் செய்யப்படும்  என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் இதுவரை நான்கு அறிக்கைகள் அங்கு சமர்ப்பிக்கப்படுவது உறுதியாகியிருக்கிறது.  ஐக்கியநாடுகள்   மனித  உரிமை ஆணையா ளர் செயிட் அல் ஹுசைன் இலங்கை தொட 

ர்பான ஒரு அறிக்கையையும், இலங்கை அரசாங்கம்  ஒரு அறிக்கையை யும்  37 ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கவுள்ளன.  அத்துடன் ஐக்கியநாடுகள் சபையின் இரண்டு விசேட நிபுணர்களும்  இலங்கை தொடர்பாக  தலா ஒவ்வொரு அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளனர். அந்தவகையில் நான்கு அறிக்கைகள்  மார்ச் மாதம்  தாக்கல் செய்யப்படவுள்ளன. 

 2015 ஆம் ஆண்டு   ஜெனிவா மனித உரிமை பேரவையில் 30 ஆவது கூட்டத் தொடரில்  இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியிருந்தது.  அந்த பிரேரணையை  அமுல்படுத்துவதற்கு மேலும்    இரண்டு வருடகால அவகாசம் கடந்த மார்ச் மாதம் வழங்கப்பட்டது. 

அதன்படி  2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம்  நடைபெறவுள்ள  ஐ.நா.வின்  மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடரில்  இலங்கை தொடர்பான இடைக்கால அறிக்கையையும் 2019 ஆம் ஆண்டு  மார்ச் மாதம் நடைபெறவுள்ள  ஜெனிவா மனித  உரிமை பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான  இறுதி அறிக்கையையும்  ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல்  ஹுசைன் சமர்ப்பிக்கவேண்டும். 

அந்தவகையில் 2015 ஆம் ஆண்டு ஜெனிவா பிரேரணையை  இலங்கை எவ்வாறு அமுல்படுத்துகின்றது என்பது தொடர்பாக  எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள  37 ஆவது கூட்டத் தொடரில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட்  அல் ஹுசைன் விபரமான அறிக்கையொன்றை தாக்கல் செய்யவுள்ளார். 

அந்த அறிக்கையில் இலங்கையின்  பொறுப்புக்கூறல் பொறிமுறையின் தாமதம் தொடர்பில்    விமர்சனங்கள் முன்வைக்கப்படலாம் என   எதிர்பார்க்கப்படுகிறது. 

இதேவேளை  2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆகும்போது இலங்கையானது  2015 ஆம் ஆண்டு  பிரேரணையை எவ்வாறு அமுல்படுத்தியது என்பது தொடர்பாக இலங்கை அரசாங்கமும் ஒரு விரிவான அறிக்கையை  ஐ.நா. மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளது. 

இதன்போது பிரேரணையின் அமுலாக்கத்தில் முன்னேற்றம்  எதிர்கொள்ளப்படும் சவால்கள், முன்னெடுக்கப்பட்டுள்ள சாதனைகள், முன்னேற்றங்கள் தொடர்பாக  இலங்கை தனது அறிக்கையில் தெளிவுபடுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.  இலங்கையின் சார்பில் இக்கூட்டத் தொடரில்  வெளிவிவகார அமைச்சர் பங்கேற்று உரையாற்றுவார். 

அதேபோன்று அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட பயங்கரவாதத்தை எதிர்க்கும்போது மனித உரிமையை காப்பாற்றுதல் தொடர்பான ஐ.நா. வின் விசேட  தூதுவர் பென் எமர்சன் தனது இலங்கை விஜயம் தொடர்பான அறிக்கையை  ஐ.நா. மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளார். 

அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுவிட்டு நாடுதிரும்புவதற்கு  முன்னதாக   கொழும்பில்  நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இலங்கை மீது கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அதாவது  நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாட்டில் இலங்கை தாமதம் அடைந்துள்ளது  என்பது மட்டுமன்றி   ஒரு இடத்தில்  அந்த செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பென் எமர்சன் குற்றஞ்சாட்டியிருந்தார்.  

இலங்கை அரசாங்கம் தொடர்ந்து இவ்வாறு பொறுப்புகளை நிறைவேற்றாமல் இருப்பின் இலங்கை விவகாரம் ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு செல்லும் எனவும் அவர்  எச்சரிக்கை விடுத்திருந்தார். எனவே அவரின் இலங்கை  தொடர்பான அறிக்கையும் முக்கியத்துவம் மிக்கதாக காணப்படுகின்றது.  

மேலும்  எதிர்வரும் ஒக்டோபர் மாதளவில்  இலங்கைக்கு வரவுள்ள தன்னிச்சையாக தடுத்துவைத்தல்,  உண்மை, நீதி, நட்டஈடு, மீள் நிகழாமை தொடர்பான   ஐ.நா.வின் விசேட  நிபுணர் ஒருவர் இலங்கையின்  நிலைமையை மதிப்பீடு செய்யவிருக்கிறார். 

அவரும் தனது அறிக்கையை 2018 ஆம் ஆண்ட மார்ச் மாதம்  ஜெனிவா மனித உரிமை பேரவையில் 37 ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கவிருக்கிறார். அந்தவகையில்  நான்கு அறிக்கைகள்    எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை தொடர்பில்  ஜெனிவா  மனித உரிமை பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளன. 

எனினும்  அடுத்தமாதம்   11 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பிக்கவுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 36 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக  உத்தியோகபூர்வமாக எந்த நிகழ்ச்சியும் இடம்பெறாது. எனினும் அரச சார்பற்ற நிறுவனங்களில்  உபக்கூட்டங்கள் இலங்கை  தொடர்பாக  நடத்தப்படும் என தெரியவருகிறது.