இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என தீர்ப்பு வெளியாகியுள்ளதையடுத்து ஏற்பட்ட கலவரத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

தேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங். இவர் இரண்டு பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அவர் மீது 2002 ஆம் ஆண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. நீண்ட காலம் நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் தனது பாதுகாவலர்கள் மற்றும் ஆதரவாளர்கள் புடைசூழ குர்மீத் ராம் ரஹிம் சிங் நீதிமன்றுக்கு வந்தார்.

இதற்கிடையே, தனக்கு எதிராக தீர்ப்பு அளிக்கப்பட்டால் அமைதி காக்க வேண்டும் என குர்மீத் ராம் ரஹிம் சிங் இன்று காணொளி மூலம் தனது அபிமானிகளுக்கு செய்தியை அனுப்பினார். அவரது தலைமையில் 500 க்கும் அதிகமானவர்கள் இன்று காலை வழிபாடு செய்தனர்.

இதையடுத்து, அமைதியாக இருந்த அவரது ஆதரவாளர்கள் தீர்ப்புக்கு பிறகு கலவரத்தில் ஈடுபடுவார்கள் என்று மாநில உளவுத்துறை பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்நிலையில், கலவரச் சூழல் ஏற்பட்டால் பாதுகாப்பு நடவடிக்கைகளின் தேவைக்கேற்ப ஆயுதங்களை பயன்படுத்தி பதற்றத்தை தணிக்கலாம் என்று பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் இன்று காலை அனுமதி அளித்தது. 

அதேவேளையில், இந்த தீர்ப்பு தொடர்பாக வன்முறையை தூண்டி விடாமல் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க முன்வருமாறு மக்களுக்கு அரியானா முதல் மந்திரி கத்தார் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில்,  இன்று பிற்பகல் 3 மணியளவில் தனது இருக்கைக்கு வந்த நீதிபதி இவ்வழக்கில் குர்மீத் ராம் ரஹிம் சிங்கை குற்றவாளி என உறுதிப்படுத்தி தீர்ப்பளித்தார். 

14 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் குர்மீத் ராம் ரஹிம் சிங்குக்கு அளிக்கப்படும் தண்டனை தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் 28 ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட குர்மீத் ராம் ரஹிம் சிங்-கை பாதுகாப்பாக வாகனத்தில் ஏற்றிய பொலிசார் அவரை சிறைக்கு அழைத்து சென்றனர்.

தீர்ப்பு வெளியானதும் பஞ்ச்குலா நீதிமன்றம் பகுதியில் திரண்டிருந்த குர்மீத் ராம் ரஹிம் சிங்கின் ஆதரவாளர்கள் வன்முறையில் குதித்தனர். அங்கு திரண்டிருந்த ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர். ஏராளமான வாகனங்கள் அடித்து நொருக்கப்பட்டன. இதேபோல் மாநிலத்தின் பல பகுதிகளில் வன்முறை வெறியாட்டம் அதிகரித்துள்ளது. 

சிர்சா நகரில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைமை அலுவலகம் அருகே மிக மோசமான அளவில் வன்முறை வெடித்தது. வன்முறையாளர்கள் மீது தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போலீசார் தாக்குதல் நடத்தி வருகின்றனர். போலீசார் மீதும் வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தினர். 

 பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மலவுட் மற்றும் பல்லுஅன்னா ரெயில் நிலையங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. ஒரு பெட்ரோல் குதம் தீக்கிரையானது. இன்று மாலை 5 மணி நிலவரப்படி அரியானாவில் நடந்த கலவரங்களில் பத்துக்கும் அதிகமானவர்கள் பலியானதாகவும், சுமார் 200 பேர் காயமடைந்ததாகவும் சண்டிகரில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் வெடித்துள்ள வன்முறை தொடர்பாக பஞ்சாப் மற்றும் அரியானா மாநில முதல் மந்திரிகளை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் அங்குள்ள நிலவரங்களை கேட்டறிந்தார்.

டில்லியிலும் கலவரம் வெடிக்காமல் இருக்க புதுடெல்லி மற்றும் டெல்லியின் பிறபகுதிகளில் உள்ள முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல் அருகில் உள்ள உத்தரபிரதேசம் மாநில போலீசார் உஷார் நிலையில் இருக்குமாறு அம்மாநில உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.