அகில தனஞ்சயவை நாம் நல்ல லெக்பிரேக்குகள் வீசும் ஒரு ஓஃப் ஸ்பின்னர் என்று தான் நினைத்தோம் ஆனால் அவரோ 4 விக்கெட்டுகளைக் கூக்ளியில் கைப்பற்றினார். சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்ததும், அவரிடம் உள்ள கட்டுப்பாடும் அபாரமானதும் பாராட்டத்தகுந்ததென இந்திய அணியின் தலைவர் விராட் கோலி தெரிவித்தார்.

பல்லேகலயில் நேற்று நடைபெற்ற 2 ஆவது ஒருநாள் போட்டியில் மாயாஜால சுழற்பந்துவீச்சாளர் அகில தனஞ்சயவின் பந்தில் இந்திய அணித் தலைவர் விராட் கோலி போல்ட் முறையில் ஆட்டமிழந்தார். 

இந்நிலையிலேயே விராட் கோலி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கோலி மேலும் தெரிவிக்கையில்,

நான் 3 ஆம் நிலையில் களமிறங்கியிருந்தாலும் கூட அந்தக் குறிப்பிட்ட பந்தில் நான் ஆட்டமிழந்திருப்பேன். தனஞ்சய அப்படி அபாரமாகவே பந்து வீசினார். 

நாங்கள் அவரை நல்ல லெக்பிரேக்குகள் வீசும் ஒரு ஓஃப்  ஸ்பின்னர் என்று நினைத்தோம், ஆனால் அவரோ 4 விக்கெட்டுகளைக் கூக்ளியில் முறையில் கைப்பற்றினார்.

அவருக்கு எதிராக அடுத்த முறை இன்னும் எச்சரிக்கையாக இருப்போம். சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்ததும், அவரிடம் உள்ள கட்டுப்பாடும் அபாரமானது, பாராட்டத்தகுந்தது.

இதேவேளை, மிகவும் விறுவிறுப்பான ஆட்டம். ரசிகர்களும், வீரர்களுக்கும்  நல்ல பொழுதுபோக்காக அமைந்தது. இறுதியில் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சியடைகிறேன். 230 ஓட்டங்கள் விரட்டலில் இரண்டு 100 ஓட்டக் கூட்டணி விநோதமானதுதான்.

230 ஓட்ட விரட்டலில் ஒரு விக்கெட்டுக்கு  110 ஓட்டங்கள் எனும்போது அனைவருக்கும் துடுப்பெடுத்தாடக்கூடிய வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று விரும்பினோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கோலி நேற்று தனது வழக்கமான 3 ஆம் நிலையில் களமிறங்கவில்லையென்பதுடன்  4 ஓட்டங்களுடன் அகில தனஞ்சயவின்  கூக்ளியில்  போல்ட்  முறையில்  ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.