இலங்கை அணிக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் போட்டியில் 100 ஓட்டங்களை டோனியுடன் இணைப்பாட்டமாகப் பெற்று இந்திய அணியை வெற்றிக்கு இட்டுச் சென்ற இந்திய அணியின் பந்துவீச்சாளர் புவனேஷ் குமார், ஆடுகளத்தில் டோனி தனக்குக்சுறிய ஆலோசனையை வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கை அணிக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்டுகளை இழந்து 131 ஓட்டங்கள் என்ற நிலையில் இருந்த இந்திய அணியை வெற்றிக்கு இட்டுச் சென்ற வகையில் புவனேஷ் குமார் முக்கிய இடத்தை வகித்துள்ளார். அவர் இறுதிவரை போராடி ஆட்டமிழக்காது 53 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

இறுதிநேரத்தில் ஆடுகளத்தில் டோனி கூறியதை புவனேஸ்குமார் வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் இது தொடர்பில் கூறியதாவது,

டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்படி ஆடுவேனோ அதே போல் ஆடுமாறு நான் இறங்கியவுடன் டோனி தெரிவித்தார். அழுத்தம் எதுவும் இல்லை, நிறைய ஓவர்கள் இருக்கின்றன, முழு ஓவர்களையும் ஆடினாலே நாம் எளிதில் வெற்றி பெறுவோம் என்றார் டோனி.

7 விக்கெட்டுகள் விழுந்த பிறகு இழப்பதற்கு ஒன்றுமில்லை என்றே நான் நினைத்தேன். நான் விளையாட முடியும் என்றும் டோனிக்கு ஆதரவாகச் செயல்பட முடியும் என்றும் நம்பினேன். அதைத்தான் செய்தேன்.

நன்றாகத் தொடங்கி பிறகு மளமளவென விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது எங்களுக்கு சற்றே பதற்றத்தை ஏற்படுத்தியது. ஓய்வறையிலிருந்து எந்த ஒரு செய்தியும் அத்தருணத்தில் எமக்குகிட்டவில்லை. 47 ஓவர்களையும் ஆடினால் வெற்றி பெற முடியும் என்ற ஒரே வாய்ப்புதான் இருந்தது. அதுதான் என் திட்டமாகவும் இருந்தது.

தனஞ்ஜயாவுக்கு எதிராக ஒரு திட்டம் வைத்திருந்தேன்.  அவர் ஓஃப் ஸ்பின்னர், ஆனால் லெக்ஸ்பின், கூக்ளி என்று அவர் விதம்விதமாக வீசியது எங்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. கூக்ளியில் அவர் விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். எனவே அந்தப் பந்துகளை எதிர்கொள்ள முடிவெடுத்தேன். முதலில் அவரது பந்தைக் கணிப்பது கடினமாக இருந்தது. ஆனால் 10-15 பந்துகள் ஆடிய பிறகு அவரது மாற்றங்களை கணிக்க முடிந்தது.

வித்தியாசமாக எதுவும் செய்ய வேண்டியதில்லை என்ற நிலை இருந்ததால் சாதாரணமாகவே ஆடினோம். சிங்கிள், இரண்டு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஓடினோம், முண்டியடித்துக் கொண்டு 2 ஆவது  ஓட்டத்திற்காக ஓட வேண்டிய நிலை இல்லை, அதே போல் பெரிய ஷொட்களுக்கான தேவையும் இருக்கவில்லை, இயல்பான கிரிக்கெட்டை ஆடினோம்.

ஆனால்  டோனி, ‘நீ எப்படி விரும்புகிறாயோ அப்படியே ஆடு’ என்றார். ஒரு கட்டத்துக்கு மேல் கொஞ்சம் அடித்து ஆடலாம் என்று ஆடினேன். டோனி அடித்து ஆடு என்று கூறவில்லை, அல்லது அவர் எனக்கு பொறுப்பு எதையும் கொடுக்கவில்லை, தன்னம்பிக்கை ஏற்பட்ட போது நான் அடித்து ஆடினேன்.

ஒருநாள் போட்டிகளில் அரைச்சதம் எடுப்பேன் என்று கனவிலும் நான் நினைத்ததில்லை. ஒருநாள் கிரிக்கெட் எனது துடுப்பாட்ட பாணிக்கு ஒத்துவராது. பெரிய சிக்சர்களை அடிக்கும் துடுப்பாட்டக்காரன் நான் இல்லை. நேற்று முழுதும் டெஸ்ட் போட்டி போன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. சஞ்சய் பாங்கருக்கு நன்றி, டெஸ்ட் தொடரின் போது அவர் என் துடுப்பாட்டத்தில் நிறைய பயிற்சிகளுக்கு உதவினார் எனத் தெரிவித்தார்.