இலங்கையில் இரு காரணங்களுக்காக தாய் தன் வயிற்றில் வளரும் கருவை கலைக்க முடியும் என அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பாலியல் வன்முறையால் உருவான கரு மற்றும் மரபணு பிறள்வுக்குள்ளான கருக்களை கலைப்பதற்கு சட்ட ரீதியாக அனுமதியளிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படவுள்ளதாக கொழும்பு சுகாதார கல்விப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது சிறப்பு சமூக வைத்திய நிபுணரான வைத்தியர் கபில ஜயரட்ண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வைத்திய நிபுணர் கருத்து தெரிவிக்கையில்,

“தாயொருவர் கர்ப்பம் தரித்து 20 வது வாரத்தில் சிசுவின் மரபணு பிறள்வை வைத்தியர்களால் இனங்காண முடியும் பிறப்பு குறைப்பாடுடைய பிரசவத்தினால் தாய்மார்கள் வாழ் நாள் முழுவதும் உடல், உள ரீதியாக பல்வேறு துன்பங்களை அனுபவிக்கின்றனர்.

இக் குறைப்பாடுடைய பிரசவத்தால் பிரசவிக்கப்பட்ட குழந்தையும் வாழ் நாள் முழுவதும் உயிர் வாழ சிரமப்படுகிறது.

குறித்த விடயம் தொடர்பான உத்தேச சட்டத்திற்கு அமைச்சரவையில் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. பாராளுமன்றின் அனுமதி மாத்திரமே எஞ்சியுள்ளது.

குறிப்பிட்ட சட்டம் பாராளுமன்றின் அனுமதியுடன் நடைமுறைக்கு வந்ததன் பின்னர் அரச வைத்தியசாலையொன்றில் கருக்கலைப்புக்கான சிபாரிசுகளை உரிய இரு வைத்திய நிபுணர்கள் செய்கின்ற பட்சத்தில் கருவை கலைப்பதா?  அல்லது கருவை சுமப்பதா? என்ற முடிவை தாய் எடுக்க முடியும் ” என தெரிவித்தார்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட பெண்ணியல் நோய் நிபுணரான வைத்தியர் யு.டி.பி ரத்னசிறி “ இச் சட்டத்தை நடைமுறைப்படுத்த ஏற்கனவே அரசியல், சமூகம், மதம் மற்றும் கலாச்சாரம் சார்ந்த விடயங்கள் தடையாக உள்ள போதிலும் தாய்மார்களின் துன்பத்தை போக்க இச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டியுள்ளது” என தெரிவித்தார்.