இலங்கையிலுள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான முன்னணி வர்த்தக வங்கிகளில் ஒன்றாகத் திகழ்ந்து வருகின்ற மக்கள் வங்கி, சமீபத்தில் தித்வா புயலின் பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்களை வலுப்படுத்தி, மேம்படுத்துவதற்காக நிதியியல் உதவியை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
இலங்கையில் பேரனர்த்தம் ஏற்படுகின்ற வேளைகளில், நாட்டினதும், மக்களினதும் மேம்பாடு கருதி தேவையான நடவடிக்கைகளை எப்போதும் மக்கள் வங்கி முன்னெடுத்து வருவதுடன், இலாபத்தின் அடிப்படையில் அல்லாது, அரசுக்குச் சொந்தமான பொறுப்புள்ள வங்கி என்ற ரீதியில் தனது பொறுப்புணர்வை முழுமையாகப் பரிந்து கொண்டு செயற்பட்டு வருகின்றது.
அந்த வகையில் நிதி அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியவற்றின் ஆலோசனை மற்றும் ஆதரவுடன், இந்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகங்களை மேம்படுத்துவதற்காக விசேட நிகழ்ச்சித்திட்டமொன்றை மக்கள் வங்கி ஆரம்பித்துள்ளது. வங்கியின் முயற்சிகள் குறித்து, மக்கள் வங்கியின் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள், அபிவிருத்தி மற்றும் நுண்கடன் பிரிவுக்கான பிரதிப் பொது முகாமையாளர் விக்கிரம நாராயண அவர்களுடனான கலந்துரையாடலின் போது அவர் அளித்த விளக்கங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

அவற்றின் சாராம்சம் பின்வருமாறு:
வினா - நாட்டை சடுதியாக தாக்கிய புயல் காரணமாக பல நபர்கள் மற்றும் வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இச்சூழ்நிலையில் தொழில்முயற்சியாளர்கள் முகங்கொடுக்கின்ற முக்கியமான சவாலாக நீங்கள் எதனை கருதுகின்றீர்கள்?
எமது நாடு முகங்கொடுக்க நேர்ந்துள்ள இந்த அனர்த்தத்தை நாம் உற்றுநோக்குகையில், பல தசாப்த காலமாக இடம்பெற்ற போர் மற்றும் கோவிட் நெருக்கடி ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் இது வேறுபட்டது. இது தற்போது நேர்ந்துவிட்டது. இந்த அனர்த்தத்தைத் தொடர்ந்து எம்மால் மீண்டும் தலைதூக்க முடியும். இதன் போது வணிகங்கள் பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்பதுடன், சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள சேதம் அவற்றுள் ஒன்றாக இருக்கலாம்.
உதாரணத்திற்கு, கட்டடம் முழுமையாக சேதமடைந்தோ அல்லது முழுமையாக அடித்துச் செல்லப்பட்டோ இருக்கக்கூடும். அவற்றை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். இதற்கு மேலதிகமாக, பெரும்பாலானோருக்கு தொழிற்படு மூலதனத்தின் தேவைப்பாடு உள்ளது. எதிர்கால செலவுகள், மூலப்பொருட்களின் கொள்வனவு, நீர் மற்றும் மின்சார கட்டணங்களை செலுத்துதல் போன்ற செலவுகளுக்கான தேவை அவர்களுக்கு உண்டு.
தொழில்முயற்சியாளர்கள் தமது மூலதனம் மற்றும் தொழிற்படு மூலதன தேவைப்பாடுகளை தற்போது மதிப்பீடு செய்தல் வேண்டும். அவர்கள் ஏற்கனவே பெற்றுள்ள கடன்களை மீளச் செலுத்துவதற்கு தேவையான பணத்தைக் கொண்டுள்ளனரா என்பது அடுத்த பிரச்சினையாக காணப்படுகின்றது. அத்தகைய பெரும்பாலான பிரச்சினைகளுக்கு தீர்வாக, இலங்கை மத்திய வங்கியின் வழிகாட்டலின் கீழ் விசேட திட்டமொன்றை மக்கள் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
வினா - பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் மற்றும் வணிகங்களை மேம்படுத்த மக்கள் வங்கி வழங்கும் நிதி வசதிகள் குறித்து விளக்க முடியுமா?
இதற்காக இலங்கை மத்திய வங்கி இரண்டு தீர்வுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில்ரூபவ் ஏற்கனவே கொண்டுள்ள கடன் அசல் தொகை மற்றும் வட்டி ஆகியவற்றை கடன்படுனர்கள் மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு செலுத்தாமல் அதனை முழுமையாக பிற்போட முடியும். அல்லது, கடன் அசல் தொகைக்குரிய வட்டியை மாத்திரம் செலுத்தவும் முடியும்.
இக்கடன் ஒத்திவைப்பு காலப்பகுதியில், ஏற்கனவே ஒப்பந்தத்தில் உள்ள வட்டி வீதத்தை விடவும் கூடிய வட்டி வீதம் அறவிடப்பட மாட்டாது என்பதுடன், ஒத்திவைக்கப்பட்ட வட்டி வீதங்களுக்கு வட்டி அறவிடப்பட மாட்டாது. கடன் தொகையைச் செலுத்துவதற்கு கூடுதலாக ஆறு மாதங்களுக்கு இடமளிக்கப்படும். இது தனிநபர் கடன்களுக்கும் பொருந்தும்.
இரண்டாவதாக, தமது வியாபாரத்திற்கு ஏற்பட்ட சேதத்தை ஈடு செய்வதற்காக மூலதனம் அல்லது தொழிற்படு மூலதன கடனைப் பெற்றுக்கொள்ள முடியும். இதற்கு, ஏற்பட்ட சேதம் குறித்த சிறந்த மதிப்பீட்டை வாடிக்கையாளர்கள் கொண்டிருத்தல் வேண்டும். கடன் விண்ணப்பத்திற்கான கோரிக்கை கிடைக்கப்பெற்ற பின்னர், அதனை வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்து, வழங்கப்படக்கூடிய கடன் தொகை குறித்த தீர்மானத்தை மேற்கொள்வர். இது 9 வீதம் என்ற உச்ச சலுகை வட்டி வீதத்தில் வழங்கப்படுவதுடன், இரு வருடங்களில் இதனை மீளச் செலுத்தி முடிக்கலாம்.
இக்கடன்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் 2026 ஜனவரி 15 க்கு முன்பு அதனை எழுத்து மூலமாக அல்லது மின்னஞ்சல் வழியாக விண்ணப்பங்களை வங்கியிடம் சமர்ப்பித்தல் வேண்டும்.
இவற்றை விட, பாதிக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு திரும்பிய காசோலைகளுக்கு அறவிடப்படும் கட்டணம், காசோலை நிறுத்தக் கட்டணம், தாமத கட்டண அறவீடுகள், கடனை மறுசீரமைப்பதற்கான / மீளச் செலுத்தும் தவணையை மாற்றிக் கொள்வதற்கான கட்டணங்கள் மற்றும் அனைத்து கடன் வசதிகளுக்கும் தண்டமாக அறவிடப்படும் வட்டி ஆகியவற்றிலிருந்து 2026 ஜனவரி 31 வரை விலக்களிக்கப்பட்டுள்ளது.
வினா: இழப்புக்களைச் சந்தித்துள்ள தொழில் முயற்சியாளர்களுக்கு விசேட கடன் திட்டம் எதையும் மக்கள் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளதா?
இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள ஆலோசனைக்குப் புறம்பாக, நிதி அமைச்சால் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து கடன் திட்டமொன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. மக்கள் வங்கி அடங்கலாக, அரசாங்கத்திற்கு சொந்தமான மூன்று வங்கிகளால் மாத்திரம் இது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
மேற்குறிப்பிடப்பட்ட கடன் தொகையானது அனைத்து தனிநபர் மற்றும் வியாபார கடன்களுக்கும் பொருந்தும். எனினும், இது நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கு மாத்திரமே உரியது. வருடாந்த விற்பனைப்புரள்வாக ரூபா 20 மில்லியன் வரையான தொகையைக் கொண்டுள்ள நுண் வியாபாரங்களுக்கு ரூபா 250,000 வரையான கடன்களும்ரூபவ் ரூபா 1 பில்லியன் வரையான வருடாந்த விற்பனைப்புரள்வைக் கொண்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கு ரூபா 1 மில்லியன் வரையான கடன்களும் வழங்கப்படும்.
இது இரு மாதங்கள் வரையான தொழிற்படு மூலதன தேவைப்பாடுகளுக்கு மாத்திரமே கிடைக்கப்பெறுகின்றது. கிராம சேவகரின் சான்றுக் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர், வர்த்தகம் குறித்த ஆய்வை வங்கி அதிகாரிகள் மேற்கொண்டு, கடன் வழங்கப்படும். 3 வீதம் என்ற சலுகை வட்டி வீதத்தில் இது வழங்கப்படுவதுடன், மீள்கொடுப்பனவுக்கு ஆறு மாத கால மன்னிப்புக் காலத்துடன், மூன்று ஆண்டுகளுக்கு தவணைக்காலம் கொண்டதாக வழங்கப்படும். வாடிக்கையாளர் ஒருவர் மூன்று வங்கிகளிடமும் இக்கடனுக்கான விண்ணப்பத்தை முன்வைக்கும் பட்சத்தில், ஒரு வங்கியிலிருந்து மாத்திரமே அதனைப் பெற்றுக்கொள்ள முடியும்.
வினா: வங்கியில் கடனொன்றைப் பெற்றுக்கொள்ளும் போது, வழக்கமாக கணக்கு பதிவுகள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த அனர்த்தத்தின் போது அவற்றை இழந்தவர்களுக்கு நிவாரணம் உண்டா?
நாட்டில் பொருளாதார மேம்பாட்டை மீளக் கட்டியெழுப்புவதே இக்கடன் திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் அரசாங்கத்தின் அடிப்படை நோக்கமாக உள்ளது. இக்கடன்களை முடிந்த வரை விரைவாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளதால், ஏனையவற்றைப் போலவன்றி, தற்போதைய சூழ்நிலையில் ஆரம்ப கட்டத்தில் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்கவேண்டிய தேவை கிடையாது.
உங்களுடைய அடையாள அட்டை இந்த அனர்த்தத்தின் போது தொலைந்து போயிருப்பினும் கூட, இதற்கு விண்ணப்பிப்பதற்கு கிராம சேவகரின் சான்று கடிதம் போதுமானது. உங்களுடைய கணக்கு அறிக்கைகள் மற்றும் கடன் தகவல் பணியகத்தின் விபரங்கள் வங்கியிடம் உள்ளன.
எனினும், இக்கடனைப் பெற்றுக்கொள்வதற்கு முதலீடு அல்லது தொழிற்படு மூலதனம் தொடர்பான மதிப்பீட்டை தயார் செய்து கொள்வது கட்டாயமானது.
இதற்கு தற்போதைய சூழ்நிலை, சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் மற்றும் வியாபார இலக்குகள் தொடர்பான சிறந்த அறிவை நீங்கள் கொண்டிருத்தல் வேண்டும். இதற்கு எமது கடன் அதிகாரிகளின் உதவியை நீங்கள் நாட முடியும்.
முடிந்த வரை விரைவாக நீங்கள் ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும்.
பிரச்சினையான சூழ்நிலைகளுக்கு முகங்கொடுத்துள்ள நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் மீண்டெழ உதவுவதற்காக, ‘வியாபார மறுமலர்ச்சிப் பிரிவை’ மக்கள் வங்கி ஸ்தாபித்துள்ளது.
வினா : இறுதியாக, இந்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மக்கள் வங்கி விடுக்க விரும்புகின்ற செய்தி என்ன?
முன்னெப்போதும் காணப்பட்டதை விடவும் நெருக்கடியிலிருந்து மீண்டெழுகின்ற பலத்தை நீங்கள் கொண்டுள்ளீர்கள். ஒரு நாடு என்ற வகையில் இதிலிருந்து மீண்டெழும் ஆற்றலும் எம்மிடம் உண்டு. உங்களுடைய வியாபார நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பிப்பது குறித்து அக்கறைகள் இருப்பின் அல்லது ஆலோசனைகள் ஏதும் தேவைப்பட்டால், எமது தலைமை அலுவலகத்தை அல்லது பிராந்திய தலைமை அலுவலகத்தின் கடன் பிரிவுகளை தயவு செய்து தொடர்புகொள்ளுங்கள். உங்களுக்குத் தேவையான எந்தவொரு உதவியையும் வழங்குவதற்கு மக்கள் வங்கி எப்போதும் தயாராகவுள்ளது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM