வவுனியாவில் பல பிரதேசங்களில் வீதியில் செல்லும் பெண்களை இலக்கு வைத்து அவர்களின் நகைகளை வழிப்பறிக்கொள்ளையிலீடுபட்டு வந்த  நபரை வவுனியா பொலிசார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவில் ஆசிகுளம், கோவில்குளம், பட்டைக்காடு போன்ற பல்வேறு பகுதிகளில் பகல் நேரத்தில் வீதியால் செல்லும் பெண்களின் தங்கச்சங்கிலி, தாலிக்கொடி போன்றவற்றை குறிவைத்து சூறையாடி வந்த நபரையே பொலிசார் கைது செய்துள்ளனர்.

குறித்த கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய நபரான மகாறம்பைக்குளம் பகுதியை சேர்ந்த யோகலிங்கம் தர்சன் (வயது 26) என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர். 

குறித்த நபர் அண்மையில் வெளிநாட்டிலிருந்து வந்திருந்தார் என்பதுடன் இச் சம்பவத்துடன் தொடர்புபட்ட மற்றுமொரு நபரைத் தேடி வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்,

பொலிசாரின் சூட்சுமமான முறையால் குறித்த நகைகளை விற்பனை செய்த இடத்திலும், அடகுவைத்த இடத்திலும் நான்கு இலட்சம் பெறுமதியான  நகைகளை பொலிசார் மீட்டுள்ளனர்.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சிசிர குமாரவின் வழிகாட்டலின் கீழ்  உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் பியஸ்ரீ பெர்னாண்டோ , மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பூரளகெதர,  பொலிஸ் சார்ஜன் ஜேசுதாசன் தலைமையிலான குழுவினர் இந் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.