இனியும் காலதாமதம் வேண்டாம்

04 Jan, 2026 | 02:25 PM
image

புதிய  அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஆரம்பக்கட்டப் பணிகளை   இம்மாதம் மேற்கொள்வோம்.  நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பின் ஊடாக  தீர்வு முன்வைக்கப்படும்.  தமிழ் அரசியல் தரப்பினர்  காலம்காலமாக  முன்வைக்கும்  குற்றச்சாட்டுக்களை விடுத்து,  பொதுக்கொள்கையை அடிப்படையாகக் கொண்டு சிறந்த பரிந்துரைகளை  முன்வைக்க வேண்டும்” என்று   நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு  அமைச்சர்  ஹர்ஷன நாணயக்கார   தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் கேசரிக்கு  கருத்து தெரிவிக்கையிலேயே  நீதி அமைச்சர் இந்த விடயங்களை  சுட்டிக்காட்டியிருக்கின்றார்.  புத்தாண்டு பிறந்துள்ள நிலையில்   இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்று அரசாங்கத் தரப்பில்  அமைச்சர்  உறுதி அளித்துள்ளமை  வரவேற்கத்தக்க செயற்பாடாகவே காணப்படுகின்றது.

ஏனெனில்,  இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு  காணப்படும் என்றும்,  தமிழ் மக்களின்  அன்றாடப் பிரச்சினைகளுக்கு  தீர்வு முன்வைக்கப்படும் எனவும்  தேசிய மக்கள் சக்தி  அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ளது.  கடந்த ஜனாதிபதி தேர்தலிலும்  பொதுத்தேர்தலின் போதும்    தேசிய மக்கள் சக்தி வெளியிட்ட  தேர்தல் விஞ்ஞாபனங்களில் இந்த விடயம்  சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

ஆனால்,  அரசாங்கம் பதவியேற்று  ஒருவருடங்கள்  பூர்த்தியடைந்துள்ள நிலையில்  இன்னமும்  புதிய  அரசியலமைப்புக்கான  முயற்சியோ அல்லது அரசியல் தீர்வுக்கான நடவடிக்கைகளோ  முன்னெடுக்கப்படவில்லை.

அரசாங்கம் பதவியேற்றவுடனேயே  இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் என்று மக்கள் எதிர்பார்த்திருந்தனர்.  குறிப்பாக, தமிழ் மக்கள்  இந்த விடயத்தில்  பெரும் எதிர்பார்ப்பை  வைத்திருந்தனர்.  தேசிய மக்கள் சக்திமீதும்   ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மீதும் பெரும் நம்பிக்கை வைத்து வடக்கு, கிழக்கை சேர்ந்த தமிழ் மக்கள் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான வாக்குகளை    தேசிய மக்கள் சக்திக்கு  வழங்கியிருந்தனர்.

வடக்கு கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டம் தவிர்ந்த சகல  மாவட்டங்களிலும் பெரும்பான்மையான உறுப்பினர்களை  தேசிய மக்கள் சக்தியே  பெற்றுக்கொண்டது.  யாழ். மாவட்டத்தில்   மூன்று உறுப்பினர்களை   பெறுமளவுக்கு  தேசிய மக்கள் சக்திக்கு  ஆதரவு  பெருகியிருந்தது.

மாறி மாறி ஆட்சிக்கு வந்த  அரசாங்கங்கள்  தமது  அன்றாடப் பிரச்சினைகளுக்கோ அல்லது அடிப்படை பிரச்சினையான இனப்பிரச்சினைக்கோ தீர்வைக் காண நடவடிக்கை எடுக்கவில்லை என்ற விடயத்தில்  தமிழ் மக்கள்  மத்தியில்  ஏமாற்றமான நிலை தொடர்ந்து வந்தது.  இதன் காரணமாகவே அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி மீது நம்பிக்கை வைத்து  வடக்கு, கிழக்கு தமிழ் மக்களில் பெரும்பான்மையானோர் தமது ஆதரவை வழங்கியிருந்தனர்.

தேசிய மக்கள் சக்தியானது  யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும்  அரசியல் தீர்வுக்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும்  தொடர்ந்தும்  கூறி வந்தது.  ஆனாலும்  அரசாங்கம்  ஆட்சிக்கு வந்து  ஒரு வருடங்கள்  கடந்துவிட்ட போதிலும்   தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை.

அரசாங்கத்தின் இத்தகைய போக்கானது தேசிய மக்கள்  சக்தியினரை ஆதரித்த தமிழ் மக்கள் மத்தியில்  பெரும் ஏமாற்றத்தை  அளித்திருக்கின்றது.  யுத்தத்தினால்  உருவான  காணாமல் போனோர் பிரச்சினை, அரசியல் கைதிகள் விவகாரம், பொறுப்புக்கூறல் விடயம்  என்பவற்றிலும் அரசாங்கமானது  மாற்றாந்தாய் மனப்பாங்குடனேயே  செயற்பட்டு வருகின்றது.  இந்தப் பிரச்சினைகளுக்கு இதய சுத்தியுடன் தீர்வைக் காண்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை.

இதேபோன்று தான் அரசியல் தீர்வு விடயத்திலும்  அரசாங்கமானது அக்கறையற்று செயற்படுகின்றது.  அரசியல் தீர்வு தொடர்பில்  கலந்துரையாடல்களை  மேற்கொள்ள வேண்டும்  என்று தமிழ் தேசியக்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

13 ஆவது திருத்த சட்டத்தின் கீழான மாகாணசபை முறைமையினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றும்   மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு  அரசாங்கம் முன்வர வேண்டும் எனவும் தமிழ் தேசியக் கட்சிகள் தொடர்ந்தும்  வலியுறுத்தி வருகின்றன.

ஆனால், இந்த விடயங்களிலும்  அரசாங்கம்  அக்கறை  காண்பிப்பதாக  தெரியவில்லை. இதனால்,   இந்த விவகாரங்களில்  இந்தியாவின் அழுத்தம்  அவசியம் என்றும்  தமிழ் தேசியக்கட்சிகளின் தலைவர்கள் கூறிவருகின்றனர்.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த   இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை  சந்தித்து பேசிய தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள்,  நாட்டின்  மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதற்கும்   13ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக  அமுல்படுத்துவதற்கும்  இந்தியா  அழுத்தம் கொடுக்க வேண்டும்  என்று வலியுறுத்தியிருந்தனர்.

இந்த நிலையில்தான்  புதிய  அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஆரம்பக்கட்டப் பணிகளை இம்மாதம் மேற்கொள்வோம் என்றும்  நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பின்  ஊடாக தீர்வு முன்வைக்கப்படும் எனவும்  நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்திருக்கின்றார்.

இதற்கு முன்னர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை  இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து பேசியிருந்தனர்.   தமிழரசுக் கட்சியின் கோரிக்கைக்கு அமைய இந்த பேச்சுவார்த்தை  இடம்பெற்றிருந்தது. இதன்போது   புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முயற்சி  விரைவில்  முன்னெடுக்கப்படும் என  ஜனாதிபதி தெரிவித்திருந்தார். மாகாண சபைத் தேர்தலை  நடத்துவதில் காலதாமதம் ஏற்படுவதற்கான காரணங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி விளக்கி கூறியிருந்தார்.

புதிய வருடம் பிறந்துள்ள நிலையில்  புதிய  அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முயற்சியை ஆரம்பிக்கப் போவதாக அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது.  இனப்பிரச்சினைக்கான  அரசியல் தீர்வு குறித்தும்  ஆராயப்படும் என்றும்   உறுதி வழங்கப்பட்டிருக்கின்றது.

இந்த வாக்குறுதிகளை அரசாங்கம் இனியாவது  நிறைவேற்றுவதற்கு முன்வர வேண்டும்.  கடந்த காலங்களிலும்  அரசாங்கத்தை சேர்ந்த முக்கியஸ்தர்கள் அரசியல் தீர்வு தொடர்பிலும் புதிய அரசியலமைப்புக்கான  முயற்சிகள் குறித்தும்  பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தனர்.  ஆனால், அந்த வாக்குறுதிகளும் இதுவரை நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை.

புதிய அரசியலமைப்பினை  உருவாக்கும் விடயத்தில்  எவ்வாறு  அரசாங்கம் செயற்படும் என்பது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி   வாக்குறுதி வழங்கியிருந்தது. நல்லாட்சி  அரசாங்கத்தில் இடம்பெற்ற புதிய   அரசியலமைப்புக்கான செயற்றிட்டத்தை  விட்ட இடத்திலிருந்து  ஆரம்பிப்பதன் மூலம்  அரசியலமைப்பை  துரிதகதியில் உருவாக்க முடியும் என்று   தேசிய மக்கள் சக்தி கூறியிருந்தது.

உண்மையிலேயே நல்லாட்சி அரசாங்க காலத்தில் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி  துரிதகதியில் நடைபெற்றிருந்தது. பாராளுமன்றம்  அரசியல் யாப்பு சபையாக மாற்றப்பட்டு  அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில்   சகல கட்சி  பிரதிநிதிகளையும்   உள்ளடக்கிய வழிநடத்தல் குழு  அமைக்கப்பட்டு  புதிய அரசியலமைப்புக்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தன. இதன்போது  அரசியல் தீர்வு தொடர்பிலும் ஆராயப்பட்டு  புதிய  அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை  பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு  விவாதிக்கப்பட்டுமிருந்தது.

இந்த நேரத்தில்   அரசியல் தீர்வு தொடர்பில்  ஒருமித்த நாட்டுக்குள்  மாகாணங்களுக்கு மீளப்பெறமுடியாத   அதிகாரங்களை வழங்குவது தொடர்பில்  கலந்துரையாடப்பட்டும் இருந்தது.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு அரசாங்கம் இதயசுத்தியுடன் முயலுமானால்  நல்லாட்சி  அரசாங்கத்தில்  விட்ட இடத்தில் இருந்து  இந்தப் பணிகளை முன்னெடுக்க முடியும்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர்    சுவிட்சர்லாந்துக்கு  விஜயம் செய்திருந்த  இலங்கை  அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பல்வேறு கூட்டங்களில் பங்கேற்றிருந்தனர்.  இந்தக்குழுவில் பங்கேற்றிருந்த    தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் நிஹால் அபேசிங்க  புதிய அரசியலமைப்பினை  உருவாக்குவதற்கான முயற்சி நடைபெற்று வருவதாகவும் நல்லாட்சி அரசாங்கத்தில்  இது குறித்து மேற்கொள்ளப்பட்ட  செயற்பாடுகள் தொடர்பான  ஆவணங்கள் ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

இவரது கருத்திலிருந்து  நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளை தொடர்வதற்கு  அரசாங்கம்  திட்டமிட்டுள்ளதாகவே   தெரிகின்றது.  இத்தகைய நிலையில்தான் நீதி அமைச்சரும்   புதிய அரசியலமைப்புக்கான  முயற்சிகள்  இம்மாதத்தில்    ஆரம்பிக்கப்படும்  என்று தெரிவித்திருக்கின்றார்.

எனவே, தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது இனியும் காலத்தை  இழுத்தடிக்காமல்  அரசியல் தீர்வுக்கான  முயற்சியையும்  புதிய  அரசியலமைப்பை உருவாக்குவதற்கான செயற்பாட்டையும் முன்னெடுக்க  வேண்டும் என்பதை   சுட்டிக்காட விரும்புகின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனியும் காலதாமதம் வேண்டாம்

2026-01-04 14:25:10
news-image

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அழுத்தம்...

2025-12-28 12:29:59
news-image

பாதுகாப்பான பகுதிகளில் மக்களை குடியேற்ற வேண்டும்

2025-12-14 14:48:36
news-image

இந்தியாவின் உடனடி உதவியும் இணைந்த செயற்பாட்டின்...

2025-12-07 16:13:55
news-image

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இதயசுத்தியான செயற்பாடு தேவை

2025-11-30 10:32:53
news-image

இன, மத­வா­தத்­துக்கு அர­சாங்கம் ஒரு­போதும் அடி­ப­ணியக்...

2025-11-23 14:17:58
news-image

அடிப்படைத் தீர்வையாவது பெறுவதற்கு முயலவேண்டும்

2025-11-09 16:18:30
news-image

அரசியல்தீர்வு விடயத்தில் அக்கறைகொள்ள வேண்டும்

2025-11-02 14:47:15
news-image

தமிழ்த் தேசியக் கட்சிகள் யதார்த்தத்தை உணர...

2025-10-26 14:09:27
news-image

பொறுப்புக்கூறலில் அரசாங்கம் கடப்பாட்டை உணரவேண்டும்

2025-10-12 11:56:26
news-image

சோமரத்னவின் சாட்சியத்தை பெறவேண்டியதன் அவசியம்

2025-10-05 16:41:36
news-image

அரசியல் தீர்வுக்கான பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டியதன்...

2025-09-28 16:36:03