தூரிகை வழியே துளிர்க்கும் மனிதாபிமானம்:  ஓவியக்கலைஞர் சாந்தி சண்முகநாதனுடன் ஒரு நேர்காணல்

Published By: Digital Desk 3

07 Jan, 2026 | 01:36 PM
image

(சரண்யா பிரதாப்)

ஓவியங்கள் ஊடாக சிறிய உதவியாவது சமூகத்திற்கு செய்ய முடிவது தனக்கு பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக ஓவியர் சாந்தி சண்முகநாதன் வீரகேசரிக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டார்.

அவர் வீரகேசரிக்கு வழங்கிய நேர்காணலின் முழு வடிவம் வருமாறு....

கேள்வி ; நீங்கள் எப்போது ஓவியம் வரைய ஆரம்பித்தீர்கள் என்பது பற்றி தெரிந்து கொள்ளலாமா? 

பதில் ; ஓவியக்கலை என்பது நான் இப்பொழுது தொடங்கிய ஒன்று அல்ல. சிறுபராயத்திலிருந்தே அதில் எனக்கு ஆழ்ந்த ஆர்வம் இருந்தது. பாடசாலை பருவத்தில் ஓவியப் போட்டிகளில் கலந்துகொண்டுள்ளேன்.

ஆனால் திருமண வாழ்க்கை, குழந்தைகளை வளர்ப்பது போன்ற வாழ்க்கைத் திருப்பங்கள் காரணமாக ஓவியக்கலையை தொடர்ந்து செய்ய முடியாமல் போய்விட்டது.

தற்போது பிள்ளைகள் வளர்ந்து, திருமணமாகி வாழ்க்கை ஆரம்பித்தவுடன் எனக்கு மீண்டும் நேரம் கிடைத்தது. அதனால் என் பழைய பொழுதுபோக்குகளை மீண்டும் ஆரம்பித்தேன்.

பாடசாலை காலத்தில் செய்த கலை, பொழுதுபோக்குகளை வயதான பின்னர் மீண்டும் தொடர்வது மிகவும் இயல்பான ஒன்றாகவே நான் கருதுகிறேன்.

குறிப்பாக கொரோனா காலப்பகுதியில் நான் மீண்டும் தீவிரமாக ஓவியங்களை வரையத் ஆரம்பித்தேன். இன்றைய காலத்தில் கென்வஸ், நிறங்கள், ஓவியப் பொருட்கள் அனைத்தும் எளிதாக கிடைக்கக்கூடியதாக இருப்பதும் இதற்கு ஒரு காரணமாக அமைந்தது.

அந்த ஊக்கத்தின் பலனாக, 2023 ஆம் ஆண்டு எனது முதல் ஓவியக் கண்காட்சியை நடத்தினேன். அது மிகவும் வெற்றிகரமானதாக அமைந்தது.

அந்த கண்காட்சியில் கிடைத்த நிதியை, நான் கல்வி கற்ற கண்டி மொப்ரே கல்லூரியின் அபிவிருத்தித் திட்டங்களுக்கும், ரோட்டரி கழகத்தின் சமூக சேவைகளுக்கும் வழங்கினேன்.

நான் ரோட்டரி கழகத்தின் அங்கத்தினராக இல்லாவிட்டாலும், என் கணவர் அதில் தீவிரமாக செயல்படுவதால், அவருக்காகவும் ஒரு நன்கொடை நிதியை திரட்டி வழங்க முடிந்தது.

கேள்வி ; உங்கள் ஓவியங்கள் எதனை பிரதிபலிக்கின்றன?

பதில் ; என்னுடைய ஓவியத் தொகுப்பின் தலைப்பு “Meandering Moods”. ஆங்கிலத்தில் Meander என்பது நதி வளைந்து, திரும்பி, நேராகச் செல்வதை குறிக்கும். அதுபோலவே என் மனநிலைக்கேற்ப சில நேரங்களில் உருவங்கள், சில நேரங்களில் பூக்கள், சில நேரங்களில் பறவைகள், மிருகங்கள் என வரைவேன்.

என்னுடைய ஓவியங்களில் பல்வேறு வடிவமைப்புகள் உள்ளன. அவற்றை நான் மூன்று நான்கு வகைகளாகப் பிரித்துள்ளேன்.

1823 ஆம் ஆண்டு தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட மலையகத் தமிழர்களின் 200 ஆண்டுகால வரலாறு, அவர்களின் கோவில் திருவிழாக்கள், கலாசாரம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு சில ஓவியங்கள்.

இலங்கை ஒரு அழகான தீவு—அதன் பூக்கள் மற்றும் இயற்கை சார்ந்த ஓவியங்கள்.

இந்தியாவில் 2500 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய பெங்கோல் பழங்கால சித்திரக் கலைகளில் இருந்து ஊக்கம் பெற்று, அதில் என் கற்பனையை இணைத்து உருவாக்கிய படைப்புகள்.

எண்ணெய் நிறம் (Oil), அக்ரிலிக் (Acrylic), டெக்ஸ்சர் பேயிண்டிங் போன்ற பல தொழில்நுட்பங்களை பயன்படுத்தியுள்ளேன்.

கேள்வி நீங்கள் ஓவியம் வரைவதற்கு பயன்படுத்தும் பொருட்கள் பற்றி தெரிந்து கொள்ளலாமா?

பதில் ; முக்கியமாக கென்வஸ் ஓவியங்களையே வரைகிறேன். ஓவியங்களை விற்பனை செய்யும் போது தரம், ஒழுங்கு, நீடித்த தன்மை மிகவும் அவசியம். அதனால் சில ஓவியங்களை வெளிநாட்டிலிருந்து பெற்ற சணல் (Jute) துணியில் கூட வரைந்துள்ளேன்.

கேள்வி : உங்கள் வாழ்க்கையில் ஓவியக்கலை வகிக்கும் பங்கு?

பதில் ; ஓவியக்கலை என் வாழ்க்கையில் மிக முக்கியமான இடம் பிடித்துள்ளது. பாடசாலை காலத்திலிருந்து ஓவியங்கள் மட்டுமல்லாமல், பொம்மைகள், கைவினைப் பொருட்கள் செய்வதிலும் ஆர்வம் இருந்தது. அந்த ஆர்வமே இன்று கென்வஸ் ஓவியங்களாக வளர்ந்துள்ளது.

கேள்வி : ஓவியக் கலை பயிற்சி பெற்றிருக்கிறீர்களா?

பதில் ;  ஆம். பாடசாலை காலத்திலும் அதன் பின்னரும் பல ஓவிய ஆசிரியர்களிடம் பயிற்சி பெற்றுள்ளேன். இன்றைய காலத்தில் இணையமும் ஒரு பெரிய ஆசிரியராக உள்ளது. ஒரு ஓவியத்தை எந்தப் போக்கில், எந்த நுட்பத்தில் வரைய வேண்டும் என்பதையும் இணையம் கற்றுத் தருகிறது.

கேள்வி :  உங்களுடைய இலக்கு?

பதில் ;  பெரிய இலக்கு என்று சொல்ல முடியாது. என் கண்காட்சிகள் அனைத்தும் நன்கொடை நோக்கத்திற்காகவே நடைபெறுகின்றன.

இந்த முறை குழந்தைகளின் இருதய அறுவை சிகிச்சைக்காக ரோட்டரி கழகம் மூலம் நிதி திரட்டுவது தான் என் நோக்கம். சிறிய உதவியாவது சமூகத்திற்கு செய்ய முடிவதே எனக்கு பெரும் மகிழ்ச்சி.

ஒரு ஓவியத்திற்கு எவ்வளவு நேரம் செலவழிப்பீர்கள்?

சில ஓவியங்களுக்கு பல நாட்கள் பிடிக்கும். ஆனால் கடந்த கண்காட்சியில், சமையலறை ஸ்பொஞ்சைப் பயன்படுத்தி இரண்டு மூன்று மணி நேரத்தில் வரைந்த ஒரு ஓவியம் தான் முதலில் விற்பனையானது—அது எனக்கு பெரிய ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

கேள்வி : உங்களது ஓவியத்தில் கையாளும் யுத்திகள் பற்றி பேசலாமா?

பதில் ;  ஒரு ஓவியத்தை அரைவாசி வரைந்து முடித்த பிறகு, அதைப் புகைப்படமாக எடுத்துக் கொள்கிறேன். பின்னர் அந்தப் புகைப்படத்தை கணினியில் பார்க்கும்போது, நேரில் வரையும்போது கவனிக்க முடியாத பல நிறை–குறைகள் தெளிவாகத் தெரிகின்றன. அவற்றை முன்கூட்டியே கணிக்கவும் முடிகிறது. இதனால் உடனடியாகத் திருத்தங்களைச் செய்ய நிறைய வாய்ப்புகள் கிடைக்கின்றன.

கேள்வி ஓவியங்களை வரைய விரும்புபவர்களுக்கு உங்கள் செய்தி?

பதில் ;  முதலில் தைரியமும் தன்னம்பிக்கையும் வேண்டும். யார் என்ன சொன்னாலும் கவலைப்பட வேண்டாம். நமக்கு சாதாரணமாக தோன்றும் ஓவியம், வேறு ஒருவருக்கு மிகவும் அழகாகத் தோன்றலாம். அந்த நம்பிக்கையுடன் செயல்பட்டால் எதையும் சாதிக்க முடியும்.

கேள்வி : நடைபெறவிருக்கும் கண்காட்சி தொடர்பில் கூறுங்கள் ?

பதில் ; Meandering moods என்ற தலைப்பின் கீழ் எதிர்வரும் 10ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு தினங்கள் லயனெல் வென்ட் ஆர்ட் கெலரியில் (Lionel Wendt Art Gellery) காலை 10 மணி தொடக்கம் மாலை 06.00 மணி வரையில் ஓவிய கண்காட்சி ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளோம்.

இந்த கண்காட்சியானது விற்பனை ஓவிய கண்காட்சியாகவே நடைபெறவுள்ளது.

இதில் கிடைக்கும் நிதி கொழும்பு கிழக்கு ரோட்டரி கழகத்தின் லிட்டில் ஆர்ட்ஸ் மற்றும் ரோட்டரி கழகம் மாவட்டம் 3220 இன் குழந்தைகளின் இருதய அறுவை சிகிச்சை திட்டங்களுக்காக வழங்கப்படவுள்ளது.

ஓவியங்களை வாங்க விட்டாலும், ஓவியக் கண்காட்சிக்கு வருகை தந்து ஆதரவை அளித்தால் அதனை நான் மிகவும் பெரிய விடயமாக கருத்தில் கொள்வேன். ஓவியக் கண்காட்சியில் விற்பனையான ஓவியங்களை மேலும் ஒருவர் விரும்பினால் அந்த ஓவியங்களை மீண்டும் வரைந்து தரமுடியும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தூரிகை வழியே துளிர்க்கும் மனிதாபிமானம்:  ஓவியக்கலைஞர்...

2026-01-07 13:36:05
news-image

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பது மனிதகுலத்தின்...

2025-11-25 12:32:03
news-image

அப்பா! : சிறுகதை

2025-08-01 16:03:56
news-image

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க...

2025-06-03 18:01:52
news-image

இனி வீட்டிலேயே உதட்டுச்சாயம் செய்யலாம்

2025-05-28 17:35:37
news-image

அழகைக் கெடுக்கும் மருக்களை நீக்க எளிய...

2025-05-15 11:33:07
news-image

டிரெண்டிங் ஹேர்ஸ்டைல்ஸ் - 2025

2025-05-08 17:39:22
news-image

அழகான உதடுகளுக்கு சில டிப்ஸ்…!

2025-05-07 10:07:05
news-image

தோல் பிரச்சினைக்கு சிறந்த தீர்வளிக்கும் உளுந்து,...

2025-05-02 14:49:03
news-image

முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க...

2025-04-30 11:27:34
news-image

மாடல் உடைகளுக்கு ஏற்ற மருதாணி டிசைன்கள்

2025-04-24 18:57:00
news-image

மணப்பெண்களே.. இது உங்களுக்குத் தான்…!

2025-04-24 16:15:57