(ரி.விரூஷன் )

யாழ்ப்பாணம், சித்தங்கேணி பகுதியிலுள்ள காணியிலுள்ள பாழடைந்த கிணற்றுக்குள் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

குறித்த சடலமானது இன்று காலையே அயலவர்களால் கண்டுபிடிக்கப்படடுள்ளது.

சடலம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு அண்மையிலுள்ள வீடுகளில் வசித்து வந்தவர்களால் கடந்த இரண்டு நாட்களாக துர்நாற்றம் வீசுவதனை உணரந்த அயலவர்கள் அருகில் தேடுதல்களை மேற்கொண்டனர்.

இதன்போதே குறித்த காணிக்குள் இருந்த பாழடைந்த கிணற்றுக்குள்  பெண்ணொருவரின் சடலம் இருப்பதும், அதிலிருந்தே துர்நாற்றம் வீசுவதும் அயலவர்களால் கண்டறியப்பட்டது.

இச் சடலமானது கிணற்றுக்குள் மிதந்தவாறு காணப்படுவதுடன் முகம் கிணற்று நீருக்குள் மூழ்கிய நிலையிலும் சடலத்தின் பின்பகுதி மேல்நோக்கியவாறும் காணப்படுகின்றது.

மேலும் சடலமானது நீரில் நனைந்து ஊதி காணப்படுவதுடன் அதில் ஈக்கள் மொய்த்த வண்ணமும் காணப்படுகின்றன. சடலமானது இன்னமும் கிணற்றை விட்டு வெளியே எடுக்கப்பட்டு அடையாளம் காணப்படாத போதும், அச் சடலத்தினை அவதானித்த சிலர்,  கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் சுளிபுரம் பகுதியில் வீட்டை விட்டு காணமல்போயிருந்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த பெண்ணுடையதாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் இதுவரையில் அது உறுதிப்படுத்தப்படவில்லை. இதேவேளை குறித்த சடலமான பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்கள் காணப்படுவதாகவும், கிணற்றுக்கு அண்மையில் இழுத்து சென்றது போன்ற அடையாளங்கள் தென்படுவதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.