வவுனியா, குருமன்காடு பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றில் 4 வயது சிறுவனை அச்சிறுவனின் சிறிய தந்தையார் அடித்து துன்புறுத்திய நிலையில் குறித்த சிறுவன் வவுனியா பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்ச்சியாக குறித்த சிறுவனை அடித்து துன்புறுத்தி வந்த நிலையில் நேற்று மாலை குறித்த சிறுவன் மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

 சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, குருமன்காடு பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் குடும்பம் ஒன்று தங்கியிருந்துள்ளது. குறித்த வீட்டில் வசிக்கும் பெண்ணின் கணவன்  மறு மணம் செய்துள்ளநிலையில் தற்போது அப்பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றார். 

முதல் திருமணத்தின் போது குறித்த பெண்ணுக்கு  4 வயது சிறுவன் ஒருவர் உள்ளான். குறித்த சிறுவனை தாயாரை தற்போது திருமணம் செய்துள்ள இளைஞனான சிறிய தந்தை அடித்து துன்புறுத்தியுள்ளார்.

அச் சிறுவனை பார்க்கும் போது தன்னை மணமுடித்துள்ள மனைவியின் முதல் கணவரின் ஞாபகம் வருவதாகக் கூறியே சிறுவனை அடித்து துன்புறுத்துவதாக தெரியவருகிறது. 

இதனால் சிறுவனின் கன்னம், முதுகு, கண் ஆகிய பகுதிகளில் கடும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அப்பகுதியில் வேலைக்குச் சென்ற ஒருவர் இதனை அவதானித்ததுடன் குறித்த சிறுவனை மீட்டு தனது நண்பர்களின் உதவியுடன் வவுனியா பொலிஸில் ஒப்படைந்துள்ளனர். 

இதனையடுத்து விசாரணைகளை ஆரம்பித்துள்ள வவுனியா பொலிசார் சிறுவனை வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதுடன் சிறுவனை தாக்கிய சிறிய தந்தையாரை கைதுசெய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.