ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும்  அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வருமான  நாமல் ராஜபக்ஷவும் கடந்தவாரம் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர். 

இதன்போது அரசியல் நிலைமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள்  தொடர்பில் பேச்சுநடத்தப்பட்டுள்ளதாக   ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது. 

குறிப்பாக இந்த சந்திப்பின்போது  தனது குடும்ப உறுப்பினர்கள்  பல்வேறு வகையிலான விசாரணைகளுக்கு முகம்கொடுத்துள்ளதாக   நாமல் ராஜபக்ஷ எம்.பி. ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவிடம்  தெரிவித்துள்ளார். 

தனது குடும்பத்தின்  ஒவ்வொரு உறுப்பினர்களும் ஐந்து அல்லது  ஆறு   சம்பவங்கள்  தொடர்பில் விசாரணைகளை எதிர்கொண்டுள்ளதாகவும் நாமல் எம்.பி.  ஜனாதிபதியிடம் கூறியுள்ளார். 

இதேவேளை  ஒன்றிணைந்து பணியாற்ற தன்னுடன் இணைந்துகொள்ளுமாறு   நாமல் ராஜபக்ஷ எம்.பி. க்கு ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னாள்  ஜனாதிபதியின் சகோதரரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் மஹிந்த அணியினர் புதிய  அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கவுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுவருகின்ற நிலையில்  ஜனாதிபதி மைததிரிபால சிறிசேனவுக்கும்  நாமல் ராஜபக்ஷ எம்.பி.க்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.